Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

              உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் நம் வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும் அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள் உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ அதுமாதிரி நம் உடலுக்குச் சிறுநீரகம் முக்கியம்.
சிறுநீரகத்தின் பணிகள்:

          இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் வரை சிறுநீரகம் பெறுகிறது. அதிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு தேவையற்ற யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருள்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது. அதேவேளையில் சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகரித்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது. உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்கிறது. 'ரெனின்' எனும் ஹார்மோனைச் சுரந்து ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்கிறது. ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற 'எரித்ரோபாய்ட்டின்' எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. 'வைட்டமின் டி' யைப் பதப்படுத்தி 'கால்சிட்ரியால்'எனும் ஹார்மோனாக மாற்றித் தருகிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச் சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவுகிறது. உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருள்களையும் வெளியேற்றுகிறது. நாம் சாப்பிடுகின்ற மருந்து, மாத்திரைகளில் நச்சுகள் இருந்தால் அவற்றையும் சிறுநீரில் வெளியேற்றுகிறது. நாம் சில மாத்திரைகளைச் சாப்பிட்டதும் சிறுநீர் மஞ்சளாகப் போவது இதனால்தான். தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150 ,180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.

சிறுநீரகம் பாதிப்படைவது எப்படி?

கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் பிரச்னைகள் குறையும். தவறினால் நாளடைவில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்து விடும். உடலில் சுத்தம் குறைவது மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரக் குறைவால் நோய்க்கிருமிகள் சிறுநீர்ப்பாதையைத் தொற்றும்போது 'சிறுநீரக அழற்சி' ஏற்பட்டு குளிர்க்காய்ச்சல் வரும். சிறுநீர் செல்லும்போது எரிச்சல் வலி ஏற்படும். சிறுநீர் கலங்கலாகப் போகும். முக்கியமாக புதுமணத் தம்பதிகளுக்கு 'ஹனிமூன் நெப்ரைட்டிஸ்' என்று ஒரு நோய்த் தொற்று ஏற்படும்.

சிறுநீரகக் கல் தொல்லை:

நாம் குடிக்கின்ற தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும் கால்சியம் பாஸ்பேட், ஆக்சலேட் என்று பல தாது உப்புக்கள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும் போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து கல் போலத் திரளும். ஒரு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். சிறுநீரில் ரத்தம் வரவே கூடாது. அப்படி வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம். காசநோய், புற்றுநோய் போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பாதித்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே சிறுநீரில் ரத்தம் வெளியேறினால் உடனடியாக காரணம் அறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

என்ன அறிகுறிகள்?

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீர் பிரிவது குறையும். பசி குறையும். வாந்தி வரும். தூக்கம் குறையும். கடுமையான சோர்வு, உடலில் அரிப்பு, முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றுவது மூச்சிளைப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றும். சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கவனித்து விட்டால் நோய்க்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். ஆனால் சிறுநீரகம் செயலிழந்து விட்டால் மருத்துவச் சிகிச்சை மட்டும் போதாது.'டயாலிசிஸ்' என்கிற ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டியதும் வரும்.

சிறுநீரகம் காக்க...

1. உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்.


2. உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். நாள் ஒன்றுக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக் கண்டம், சமையல் சோடா, வடாம், வத்தல், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், பாலாடைக்கட்டி, புளித்த மோர், சேவு, சீவல், சாக்லேட், பிஸ்கட், 'ரெட் மீட்' என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.


3. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்.


4. சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும்


5. தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க வெளி உறுப்புகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.


6. மது அருந்தாதீர்கள்.


7. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்.


8. புகை பிடிக்காதீர்கள்.


9. தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.


10. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள்.


- டாக்டர்.கு.கணேசன் , பொதுநல மருத்துவர், ராஜபாளையம். gganesan95@gmail.com




4 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive