Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள் பிற துறை அறிவை வளர்க்க 'பி - வோக்' உதவும்

           சென்னைப் பல்கலையில், பல ஆண்டுகள் விலங்கியல் துறை பேராசிரியராக பணியாற்றி, தற்போது, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) துணைத் தலைவராக பணியாற்றும், பேராசிரியர் எச்.தேவராஜ், சென்னைக்கு, ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வந்தார்.
 சிறப்பு பேட்டி:

* 12வது ஐந்தாண்டில், யு.ஜி.சி.,யின் புதிய திட்டங்கள் என்ன? 

கல்லூரி மாணவர்கள் பெறும் பட்டங்களில், ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும். வெறுமனே பட்டம் பெற்று போவதில் ஒன்றும் இல்லை. இதற்காக தான், 'திறன் அடிப்படை பாடத்திட்டம்' உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 'பி - வோக்' எனப்படும் இளங்கலை பட்டம், பல்கலைகள், கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள, சமுதாய கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து வரும் மாணவர்கள், அந்த படிப்பில் முதலாமாண்டு முடித்து விலகினால், சான்றிதழ், இரண்டாமாண்டில் விலகினால், டிப்ளமோ, மூன்றாம் ஆண்டு படித்து முடித்தால், பட்டமும் வழங்கப்படுகிறது. அவர், தொடர்ந்து முதுகலை, எம்.பில்.,
பி.எச்டி., வரையில் செல்ல முடியும். நாடு முழுவதும், 162 கல்லூரிகளுக்கு, இதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இதுதவிர, கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில், சி.பி.சி.எஸ்., (சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்) எனப்படும், விருப்ப அடிப்படை மதிப்பீட்டு முறையை அமல் படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஒரு துறையில் படிக்கும் மாணவர்கள், பிற துறையிலும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், அந்த துறையில் ஒரு பாடத்தை படித்து, அதன் மூலம் தங்கள் மதிப்பீட்டை (கிரெடிட்) பெறவும் உதவியாக இருக்கும்; இது அவசியமும் கூட. இதுகுறித்து, பல்கலைகளுக்கு அறிவுறுத்த, எனது தலைமையில் எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* பல்கலைகள் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள்? 

மத்திய அரசு உயர்கல்விக்கான புதிய கொள்கையை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சிறப்பாக செயல்படும் பல்கலைகளுக்கு, 'ஆற்றல் சார் சிறப்பு பல்கலை' (யுனிவர்சிட்டி பொட்டன்ஷியல் எக்சலன்ஸ்) தகுதி வழங்கப்படுகிறது. இதற்கு, தமிழகத்தில் இருந்து அண்ணா பல்கலை, பாரதிதாசன் பல்கலைகள் அழைக்கப்பட்டு, வரும், மார்ச் 5ம் தேதி, அதற்கான தேர்வு நடக்கிறது. இந்த தகுதி பெறும் இரண்டு பல்கலைக்களுக்கும், தலா, 75 கோடி ரூபாய் மானியம் கிடைக்கும். இதன் வாயிலாக, உலகளாவிய சிறந்த பல்கலைகள், 200ல் ஒன்றாக வரவேண்டும் என்பதே இதன் நோக்கம்.

* கல்லூரி ஆசிரியர்கள் தகுதி மேம்பாட்டிற்கு என்ன செய்கிறது யு.ஜி.சி.,? 

பிரதமர் மோடி, திறமையான கல்லூரி ஆசிரியர்களை உருவாக்க முக்கியத்துவம் அளிக்கிறார். அவர், குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, திறன் வாய்ந்த பள்ளி ஆசிரியர்களை உருவாக்க, தனியாக, கல்வி நிறுவனத்தை உருவாக்கினார். அதன் அடிப்படையில், தற்போது, கல்லூரி ஆசிரியர்களுக்காக, ஆந்திர மாநிலத்தில், புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. முதலில், பல்கலை ஆசிரியர்கள் இதில் பயிற்சி பெறுவர். தொடர்ந்து, பல்கலைகள், கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு, இந்த பயிற்சி அவசியம் என்ற கட்டாயம் உருவாக வாய்ப்பு உள்ளது.

* கல்லூரிகளின் மேம்பாட்டிற்கு யு.ஜி.சி., நிதி அளிக்கிறதா? 

கல்லூரிகளில் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆய்வுப்பணியில் ஈடுபட்டால், அதற்கான நிதியும் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில், 150 தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கல்லூரிகளுக்கு, 5 கோடி ரூபாய் மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில், மாநில கல்லூரி, ராணி மேரி, காயிதே மில்லத், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள், 5 கோடி ரூபாய் நிதியை பெறுகின்றன. கல்லூரிகள், பல்கலைகளில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான மாதிரி பாடத்திட்டம், தற்போது தயாரிக்கப்பட்டு உள்ளது. கோவர்த்தன் மேத்தா தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு துறைகளின் பாடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த பாடத்திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.

* இணையதளம் மூலம் படிப்புகள் கொண்டு வர திட்டம் உள்ளதா? 

ஆம். 'மூக்' (எம்.ஓ.ஓ.சி.,) எனப்படும், விரிவான இணையதள தொழிற்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதில், பரிசோதனைக் கூடம் தேவைப்படும் படிப்புகளில் சேரும் மாணவர்கள், அவற்றை பயன்படுத்தலாம். இல்லாத பாடங்கள், 'இ - சென்டர்' மூலம் வழங்கப்படும். இந்த பாடங்களுக்கான, 'மதிப்பு - கிரெடிட்' யு.ஜி.சி.,யால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

* திருவாரூர் மத்திய பல்கலை மேம்பாட்டிற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா? 

அந்த பல்கலைக்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அவர்கள், 250 கோடி ரூபாயில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். 30 ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்டு உள்ளன. இன்னும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பல்கலையின் துணைவேந்தர் விரைவில் நியமிக்கப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive