இந்தியாவில், உள்கட்டமைப்புத் துறை பெரிய
வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்து வரும் சில பத்தாண்டுகள் காலகட்டத்தில்,
உள்கட்டமைப்பு வளர்ச்சியை, திட்டமிட்டு வழிநடத்தும் நிபுணர்களின் தேவை
பெரிதும் அதிகரிக்கும்.
வளங்களை முறையாகப் பயன்படுத்தி, ஒரு
புராஜெக்ட்டை சரியான திட்டமிடலுடன் செயல்படுத்தி, அதை நினைத்தபடி,
வெற்றிகரமாக நிறைவு செய்பவரே உள்கட்டமைப்பு மேலாளர்கள்(Infrastructure
Managers) எனப்படுகிறார்கள்.
இந்தியாவில், உலகத்தரம் வாய்ந்த அழகிய மற்றும்
நவீன நகரங்களை உருவாக்கி, நாட்டையே ஒரு நவீன மற்றும் சிறந்த
உள்கட்டமைப்பைக் கொண்ட நாடாக மாற்ற நினைப்பவர்களுக்கு எம்.பி.ஏ -
உள்கட்டமைப்பு படிப்பு, பொருத்தமான ஒன்றாகும்.
உள்கட்டமைப்பு என்பது வெறுமனே நகர்ப்புற
கட்டடங்கள் சார்ந்தது மட்டுமன்று. அணைகள், சாலைகள் போன்றவற்றை கட்டுதல்
உட்பட, மின்சாரம், தண்ணீர், எண்ணெய் மற்றும் தொலைதொடர்பு ஆகிய வசதிகளை
மேம்படுத்தும் வகையில் கட்டப்படும் கட்டுமானங்கள் என்ற அனைத்தும்,
உள்கட்டமைப்பு சார்ந்தவையே.
கட்டுமானம் சார்ந்த திட்டமிடப்பட்ட பெரிய
விஷயங்களை மேற்கொள்ளும் விருப்பத்தையும், ஆர்வத்தையும் நீங்கள்,
உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருந்தால், உங்களுக்கு மேற்சொன்ன படிப்பு,
சிறந்த ஒரு வாய்ப்பாகும்.
படிப்பு
இத்துறை சார்ந்த எம்.பி.ஏ. படிப்பில், ஒரு
மாணவர், மார்க்கெட்டிங், மேலாண்மை, பொருளாதாரம், அக்கவுன்டிங், பிசினஸ்
கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றின் அம்சங்களை படிக்கும் அதே வேளையில்,
* நிலைத்தன்மை
* உள்கட்டமைப்பு கொள்கைகள் மற்றும் சட்டங்கள்
* பவர் சிஸ்டம்களின் ஆபரேஷன் மற்றும் மேனேஜ்மென்ட்
* சப்ளை செயின் மேனேஜ்மென்ட்
* நகர்ப்புற உள்கட்டமைப்பு மேனேஜ்மென்ட்
ஆகியவற்றின் பகுதிகளையும் படிக்க வேண்டியிருக்கும்.
இப்படிப்பின் மூலம் கிடைக்கும் திறன்கள்
இந்திய உள்கட்டமைப்புத் துறை வெகுவேகமாக
வளர்ந்து வருகிறது. தாராளமய பொருளாதாரக் கொள்கைகள், இந்தியாவில்
அமல்படுத்தப்பட்ட பின்னர், வெளிநாட்டு தனியார் முதலீடுகள் இங்கே அதிகளவில்
வருகின்றன. இத்துறையில், ஏராளமான கோடிகள் முதலீடு செய்யப்படுகின்றன.
உலகில், மிக அதிக முதலீடுகள் கொட்டப்படும் சில துறைகளுள், உள்கட்டமைப்புத்
துறையும் ஒன்று.
அதேசமயம், இந்தியா போன்ற நாடுகளில்,
உள்கட்டமைப்பு நிர்மாணம் என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது. எனவே, அந்த
சவாலை சந்தித்து, உங்களின் புராஜெக்ட்டை வெற்றிகரமாக நிறைவுசெய்யும்
வகையில், இப்படிப்பு உங்களை தயார்படுத்துகிறது.
ஒரு நாட்டின் உள்கட்டமைப்பை சிறப்பான முறையில்
மேம்படுத்தி, அதன்மூலம் அந்நாட்டை முன்னேற்றி, அதன் மக்களுடைய வாழ்க்கைத்
தரத்தினை அதிகரிக்கும் ஒரு குழுவில், நீங்கள் ஒரு முக்கிய அங்கமாக
திகழக்கூடிய தகுதியை, இப்படிப்பு உங்களுக்கு தருகிறது.
உயர்கல்வி
நீங்கள் ஏற்கனவே, இளநிலைப் பட்டப்படிப்பில்
சிவில் இன்ஜினியரிங் முடித்திருந்து, எம்.பி.ஏ - உள்கட்டமைப்பு படிப்பை
நிறைவு செய்தால், உங்களின் முக்கியத்துவம் பெரிதும் கூடும். உங்களின் சக
அலுவலர்களைவிட, நீங்கள் கூடுதல் கவனம் பெறுவீர்கள். பெரிய நிறுவனங்களில்,
முக்கியத்துவம் வாய்ந்த பணி வாய்ப்புகள் கிடைக்கும்.
எம்.பி.ஏ - உள்கட்டமைப்பு முடித்தப் பின்னர்,
அதே துறையில், முதுநிலை டிப்ளமோ படிக்கலாம் அல்லது பிஎச்.டி. ஆய்வில்
ஈடுபடலாம். டில்லி மற்றும் புபனேஷ்வர் ஆகிய இடங்களிலுள்ள ஐ.ஐ.டி.,கள்,
உள்கட்டமைப்பு மேலாண்மைத் துறையில், ஆராய்ச்சி அடிப்படையிலான பிஎச்.டி.
படிப்பை வழங்குகின்றன.
பணி வாய்ப்புகள்
இத்துறை வேலை வாய்ப்புகளைப் பொறுத்தளவில்
கவலைப்படத் தேவையில்லை. பரவலான பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன.
வளர்ந்துவரும் தனியார் தொழில் துறையில், எம்.பி.ஏ - உள்கட்டமைப்பு
முடித்தவர்களின் தேவை மிக அதிகமாக உள்ளது.
அவர்களுக்கான சம்பளம் பற்றியும்
பிரச்சினையில்லை. அரசுத்துறை நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகளுக்கு
குறைவில்லைதான். நவீன உலகில், ஒரு நாடு, புதிய புதிய தொழில்நுட்பக்
கண்டுபிடிப்புகளை முறையாகப் பயன்படுத்த வேண்டுமெனில், அதற்கேற்ற சரியான
உள்கட்டமைப்பு வசதிகள் கட்டாயம் தேவை.
எனவே, உள்கட்டமைப்புகள், இன்னும்
அதிகரித்துக்கொண்டே செல்லும். எனவே, வருங்காலத்தில், இப்படிப்பை
மேற்கொண்டோருக்கான தேவைகள் மற்றும் முக்கியத்துவம் கூடிக்கொண்டே இருக்கும்.
எம்.பி.ஏ - உள்கட்டமைப்பு படிப்பை மேற்கொள்வதற்கான சில தேசியளவிலான கல்வி நிறுவனங்கள்
* யுனிவர்சிட்டி ஆப் பெட்ரோலியம் அன்ட் இன்ஜினியரிங் ஸ்டடீஸ்(UPES) - டெஹ்ராடூன்
* எம்.ஐ.டி. ஸ்கூல் ஆப் டெலிகாம் மேனேஜ்மென்ட் - புனே
* டெரி(TERI) யுனிவர்சிட்டி - புதுடில்லி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...