ஆதார்’ அட்டை இல்லாததற்காக, யாருக்கும்
சலுகைகளை மறுக்கக்கூடாது. ஆதாரை கட்டாயம் ஆக்கக்கூடாது என்ற எங்களது
முந்தைய உத்தரவை மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம்
கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
‘ஆதார்’ அட்டை கட்டாயம் என்று சில
அரசுத்துறைகள் அறிவித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள்
தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘ஆதார் அட்டை கட்டாயம்
அல்ல. ஆதார் அட்டை இல்லாததற்காக யாரும் பாதிப்படைய விடக்கூடாது’ என்று
கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் 23–ந் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், சில மாநிலங்களில், திருமண
பதிவு, சொத்து பதிவு உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு
இருப்பதாக கர்நாடக ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டஸ்வாமி உள்ளிட்ட
சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்.
ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கி இருப்பது, மத்திய அரசின் அதிகாரத்தை
கேள்விக்குறி ஆக்கி இருப்பதாகவும், எனவே, ஆதார் திட்டத்துக்கு தடை விதிக்க
வேண்டும் என்றும் புட்டஸ்வாமி தனது மனுவில் கூறி இருந்தார்.
பதிவு செய்ய முடியாது
இம்மனுக்கள், நீதிபதிகள் செல்லமேஸ்வர்,
எஸ்.ஏ.பாப்தே, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று
விசாரணைக்கு வந்தன. ஓய்வுபெற்ற நீதிபதி புட்டஸ்வாமி சார்பில் ஆஜரான மூத்த
வக்கீல் அனில் திவான் வாதிடுகையில் கூறியதாவது:–
திருமண பதிவு போன்ற சில காரியங்களுக்கு
ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மணமகன், மணமகள் இருவருக்கும் ஆதார்
அட்டை இல்லாவிட்டால், திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று மராட்டிய
மாநில அரசு சமீபத்தில் கூறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியமும், ஆதார் அட்டையை அதிகாரிகள் வலியுறுத்துவதாக முறையிட்டார்.
சலுகைகளை மறுக்கக்கூடாது
அதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:–
எங்களது கவனத்துக்கும் இது வந்துள்ளது.
பம்பாய் ஐகோர்ட்டு நீதிபதிகள் கூட ஆதார் எண்ணை அளிக்குமாறு அதிகாரிகளால்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் எந்த சம்பவத்தையும் குறிப்பிட்டு கூற
விரும்பவில்லை.
ஆதார் அட்டை இல்லாததற்காக, யாருக்கும்
அரசின் சலுகைகளை மறுக்கக் கூடாது, யாரும் பாதிப்படையும் வகையில் நடந்து
கொள்ளக்கூடாது என்று கடந்த 2013–ம் ஆண்டு ஏற்கனவே இந்த கோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகளும், அவற்றின் அனைத்து
துறைகளும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மத்திய அரசுக்கு கண்டிப்பு
மேலும், மத்திய அரசு சார்பில் ஆஜரான
சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரை பார்த்து, ‘எங்களது முந்தைய உத்தரவை
அதிகாரிகள் பின்பற்றுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதில்
சாக்குபோக்கு எதுவும் கூறக்கூடாது’ என்று கூறினர்.
அதற்கு ரஞ்சித் குமார், ‘இதுதொடர்பாக
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதும்.
மாவட்ட கலெக்டர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு மாநில அரசுகளிடம் கூறுவோம்’
என்றார்.
ஒத்திவைப்பு
பின்னர், மூத்த வக்கீல் கோபால்
சுப்பிரமணியத்திடம், ஆதார் அட்டை வலியுறுத்தப்படுவதாக ஏதேனும் ஒரு
சம்பவத்தை சுட்டிக்காட்டி இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு
கேட்டுக்கொண்டனர். பொதுவான உத்தரவு வேலைக்கு ஆகாது என்றும், சம்பவவாரியாக
விவகாரத்தை அணுகப்போவதாகவும் கூறினர்.
இதன் இறுதி விசாரணையை ஜூலை மாதம் இரண்டாவது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...