கோடை விடுமுறையில் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக அரசு, அரசு உதவி பெறும்
பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) புத்தகங்களை
முன்கூட்டியே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பிளஸ் 2 புத்தகங்கள் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ வழங்கப்படும் எனத் தெரிகிறது.
தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி அல்லது பிப்ரவரியிலிருந்தே பிளஸ் 2 பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது.
ஆனால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்குப்
பிறகு பள்ளிகள் தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில்தான் புத்தகங்களே
வழங்கப்படுகின்றன.
எனவே, பிளஸ் 1, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது கோடை விடுமுறையை நல்ல
முறையில் பயன்படுத்தும் வகையில், வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2, 10-ஆம்
வகுப்பு புத்தகங்களை முன்கூட்டியே வழங்க பள்ளிக் கல்வித் துறை
திட்டமிட்டுள்ளது.
85 சதவீத புத்தகங்கள் தயார்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2
படிக்கும் மாணவர்களுக்கான 85 சதவீத புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு
மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் இப்போது மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இப்புத்தகங்கள் முழுமையாக மாவட்டங்களைச் சென்றடைந்த பிறகு, அந்தந்தப்
பள்ளிகளுக்கு அனுப்பப்படும். தேர்வுகள் முடிவடைந்ததும், மாணவர்களுக்கு
ஏப்ரல் இறுதியிலோ, மே முதல் வாரத்திலோ இவை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அடுத்ததாக, 10-ஆம் வகுப்புப் புத்தகங்களும் நிகழாண்டு முன்கூட்டியே
வழங்கப்பட உள்ளன. ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான
புத்தகங்கள் மே மாதத்திலேயே அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.
4.50 கோடி புத்தகங்கள்: ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை முதல்
பருவ புத்தகங்கள், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்காக என
மொத்தம் 4.50 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இதில் 3 கோடிக்கும்
அதிகமான புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப்
புத்தகங்கள் ஆகும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனைக்காக 1.35 கோடி
புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி
மாணவர்களுக்கான புத்தகங்கள் நேரடியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,
மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கான
புத்தகங்கள் வட்டார விற்பனை கிடங்குகளுக்கும் அனுப்பப்பட உள்ளன. தமிழ்நாடு
பாடநூல், கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் புத்தகங்களை அச்சிடுவதற்காக
மொத்தம் 96 நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
sir intha kalvi andulaiyavathu computer science subject viduvangala?
ReplyDelete