வரும், 2015 - 16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான
திட்டங்களுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு,
17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், ’கிரை’ எனப்படும் குழந்தைகள் நல
அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த, 2011 - 12ம் நிதியாண்டிலிருந்தே, மத்திய பட்ஜெட்டில், குழந்தைகள்
நலன் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இதுவரை
இல்லாமல், இந்த பட்ஜெட்டில் தான் மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது என, புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.41 சதவீதமே, குழந்தைகள்
நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், ஒட்டுமொத்தமாக,
குழந்தைகள் நலனுக்காக, 58 ஆயிரம் கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய பட்ஜெட்டில், 70 ஆயிரம் கோடி ரூபாயும், 2014ம்
நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், 72 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டதாக
அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும், பள்ளிக்கல்விக்கு, முந்தைய
பட்ஜெட்டில், 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த
பட்ஜெட்டில், 41 ஆயிரம் கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
சர்வ சிக் ஷா அபியான் எனப்படும் குழந்தைகள் கல்வி பிரிவுக்கு, 28 ஆயிரம்
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது, 22 ஆயிரம் கோடி ரூபாய் தான்
ஒதுக்கப்பட்டுள்ளது. மதிய உணவு திட்டத்திற்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது, 9,200 கோடி ரூபாய் தான்
ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
வரும், 2015 - 16ம் ஆண்டு பட்ஜெட்டில், குழந்தைகள் நலன் என்ற பிரிவில், தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடு சதவீதம்:
* குழந்தைகள் கல்வி - 79 சதவீதம்
* குழந்தைகள் மேம்பாடு - 15 சதவீதம்
* குழந்தைகள் பாதுகாப்பு - 1.8 சதவீதம்
* குழந்தைகள் ஆரோக்கியம் - 3.0 சதவீதம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...