கொங்கு வட்டாரத்தில் அண்ணன்மார் கதை பிரசித்தி பெற்றது. கோவில்களில் இது
மரபாக நிகழ்த்தப்படுகிறது. நம்பிக்கை நிறைந்த அந்த கதையை, மாணவ, மாணவியர்
எளிதில் புரிந்து விவாதிக்கும் வகையில், டிஜிட்டல் வடிவமாக்கி உள்ளார் கனடா
நாட்டில், டொரன்டோ பல்கலை பேராசிரியை பிரண்டா பெக். சமீபத்தில் சென்னை
வந்திருந்த அவருடன் பேசியதிலிருந்து...
அது, ௧௯௬௬ம் ஆண்டு. அப்போது என் வயது, ௧௪. அரசு பணியில் இருந்த என்
அப்பா, ஓராண்டு கால விடுமுறையில், உலகை சுற்றிப் பார்க்க எங்களுடன்
புறப்பட்டார். ஐரோப்பிய நாடுகளை சுற்றி வந்தோம். பின், பெய்ரூட்டில்
இருந்து, ஒரு வேன் மூலம் ஆசியாவுக்குள் பயணமானோம். எங்கள் பயணம்
ராமேஸ்வரத்தில் முடிந்தது. அப்போதுதான், தமிழகம் எனக்கு அறிமுகமானது.
தமிழகத்தில் ஆய்வு செய்யும் திட்டம் அப்போது உருவானதா?
அப்படி சொல்ல முடியாது. அந்த பயணம் பெரிய அனுபவம். உலகில் பல நாடுகள்,
மக்கள் என, கலாசாரங்களை காண முடிந்தது. தமிழகமும் என் கவனத்தை ஈர்த்தது. ௧௦
ஆண்டுகளுக்கு பின், மானிடவியலில் உயர்கல்விக்காக, ஆக்ஸ்போர்டு பல்கலையில்
சேர்ந்தேன். அப்போது என் பேராசிரியர்கள், ஆய்வுக்களமாக, தென்னிந்தியாவை
தேர்வு செய்ய சொன்னார்கள். அதன் அடிப்படையில் கோவையை தேர்வு செய்தேன்.
இதற்கு விசேஷ காரணம் உண்டா?
எதுவும் இல்லை. ஆய்வுக்களத்தை தேர்வு செய்ய, தன்னந்தனியாக கோவை வந்தேன்.
அங்கு, சிலரை சந்தித்தேன். அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடினர். அது என்
ஆய்வுக்கு தடையாக இருக்கும் என, நம்பினேன்.
ஒரு பகுதியினர் பழக்க வழக்கத்தை ஆய்வு செய்ய, அவர்கள் பேசும் மொழியை
தெரிந்து, அதன் வழியாக இணைய வேண்டும். எனவே, வளர்ச்சியே எட்டிப் பார்க்காத
கிராமத்தில், ஆய்வு நடத்த முடிவு செய்தேன். காங்கேயம் அருகே ஓலப்பாளையம்
கிராமத்தை தேர்ந்தெடுத்தேன்.
ஓலப்பாளையத்தில் அனுபவம் எப்படி இருந்தது?
மிகவும் வித்தியாசமானது. ஆனால் இயல்பாக எடுத்துக்கொண்டேன். அங்கு
சென்றபோது மின்சார வசதியில்லை. எளிய குடியிருப்புகள் இருந்தன. அவற்றில் ஒரு
குடும்பத்தினருடன் சைகையில் பேசி, ஒரு சிறிய அறையை வாடகைக்கு அமர்த்தி
அங்கு தங்கினேன். சைகை மொழியில்தான் பேசிக் கொண்டேன்.
தமிழை கற்கும் யுத்தி பற்றி, யோசனை செய்து கொண்டிருந்தேன். ஒரு பவுர்ணமி
நள்ளிரவில், வினோதமான இசை கலந்த பாடல் கேட்டது. அது என் ஆன்மாவைத்
தொட்டது. இசை கசிந்து வந்த திசை நோக்கி, அழகிய நிலவொளியில் தட்டுத் தடுமாறி
நடந்தேன். சிறிய வழிபாட்டிடத்தில், மங்கலான விளக்கு ஒளியில் கிராமத்தவர்
கூடியிருந்தனர்.
அவர்களுக்கு மத்தியில், இசைக் கருவியை இசைத்து பாடல் வடிவில், ஒருவர்
கதை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த தருணத்தை உணர்ந்து கவனித்தேன். இதுவே
மொழியை கற்றுக்கொள்ள ஏற்றது என, நம்பினேன். அது, 'அண்ணன்மார் கதை' என்று
சொன்னார்கள். அதில் இருந்துதான் என் ஆய்வு பயணம் துவங்கியது.
இசை கேட்க நான் கொண்டு வந்திருந்த, 'டேப் ரெக்கார்டர்' கருவியில், அந்த
கதைப்பாடலை பதிவு செய்தேன். அதை திரும்பத் திரும்ப கேட்டு மனதில் இருத்தி
பாடப் பழகினேன். அதன் வழியாக மொழியை கற்று, கிராமத்து மக்களிடம் நெருங்கி
பழகி, என் ஆய்வை வெற்றிகரமாக முடித்தேன்.
அத்துடன் தமிழகத்துடனான தொடர்பை துண்டித்து விட்டீர்களா?
இல்லை. ஆய்வுக்காக, இரண்டாண்டுகள் கிராமத்தில் தங்கியிருந்த போது, அந்த
கோவிலுக்கு குதிரை சிலை ஒன்றை நேர்ச்சையாக கொடுத்தேன். ஆய்வு முடிந்து
டொரன்டோ பல்கலையில் பேராசிரியர் பணி ஏற்றேன். அங்கும், தமிழகத்தின் நினைவு
என்னுடன் இருந்தது. அந்த நினைவை போற்றி, கனடாவில் என் கிராமம் அருகே,
'பொன்னி வளநாடு' என, ஒரு பகுதியை உருவாக்கினேன். அங்கு, இரண்டு குதிரை
சிலைகளை காட்சிப்படுத்தியுள்ளேன்.
தொடர்ச்சியாக, அண்ணன்மார் கதை காவியத்தை, கற்பித்தலில் பயன்படுத்த
முடியுமா என, யோசித்ததன் விளைவுதான், சித்திரக்கதையாகவும், நவீன 'டிஜிட்டல்
டேப்' வடிவத்திலும், கார்ட்டூன் வடிவத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்ணன்மார் கதையை நவீன தொடர்பு வடிவத்துக்கு மாற்றியது எப்படி?
ஆய்வு முடித்த போதும், இந்த கதைப்பாடலை நிகழ்த்தியவரின் வாழ்க்கையும்,
வறுமையும் என் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. கதையை நவீன வடிவத்துக்கு
கொண்டு வந்து, சித்தல், புரிதல், யோசித்தல், விவாதித்தல் என்ற
அடிப்படையில், பள்ளி மாணவர்களிடையே அறிமுகப்படுத்த யோசித்துக்
கொண்டிருந்தேன். அப்படித்தான், 'டிஜிட்டல்' வடிவ முயற்சி துவங்கியது. இந்த
கதையை வாய்மொழியாக நிகழ்த்தி முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியவரின்
பேரன் ரவிச்சந்திரன் என்பவர்தான், நவீன வடிவ கார்ட்டூன்களையும்
உருவாக்கினார். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் இதை உருவாக்கிஉள்ளோம்.
பள்ளிகளில் இதை எப்படி கற்பிக்கிறீர்கள்?
கனடாவில், ஐந்து பள்ளிகளில் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
கதையையும் அதன் வடிவத்தை நோக்கி, உருவாகும் கற்பனைத் திறனையும்
வெளிப்படுத்த வகை செய்துள்ளோம். உள்ளடக்கம் குறித்து, மாணவர்கள் உரையாடலும்
நடத்துகின்றனர். மாணவ, மாணவியர் தந்த பின்னுாட்ட அடிப்படையில், இந்த
முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவே கருதுகிறேன். விரைவில், மேலும் சில
பள்ளிகளில் அறிமுகம் செய்ய உள்ளோம்.
இவ்வாறு, பிரண்டா பெக் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...