சென்னை: ''தமிழகத்தில், பன்றிக்காய்ச்சல்
பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. பீதி அடையும் அளவுக்கு நிலைமை இல்லை.
வதந்திகளை நம்ப வேண்டாம்; பாதிப்புள்ள மாணவர்கள், 'டாமி' புளூ மாத்திரை
போட்டு தேர்வு எழுதலாம்; எந்த சிக்கலும் இல்லை,'' என, சுகாதாரத்துறை செயலர்
ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு, இதுவரை, அரசு கணக்குப்படி, 11 பேர் இறந்துள்ளனர். நேற்று, தாராபுரத்தில் ஒருவர் இறந்துள்ளார். 'பன்றிக் காய்ச்சல் பாதிப்பு மாணவர்களுக்கு உள்ளதால், பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதும், அனுப்பாததும் உங்கள் விருப்பம்' என, பள்ளி நிர்வாகம், பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் அளவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இந்த நிலையில், சென்னை, கிண்டி, 'கிங்' ஆய்வு மையத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் ஆய்வு நடத்தினர்.
பின், சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், பீதி ஏற்படுத்தும் வகையில்,
பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை. தமிழகத்தில், ஜனவரி மாதம் முதலே தடுப்பு
நடவடிக்கைகளை அரசு எடுத்தால், கட்டுக்குள் உள்ளது. வட மாநிலங்களில் இருந்து
வருவோர், அங்கு சென்று வருவோரால் தான் பாதிப்பு உள்ளது. நாடு முழுவதும்,
21,000 பேர் பாதிக்கப்பட்டதில், 1,158 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில்,
மொத்த பாதிப்பு, 319 பேருக்கு மட்டுமே. 187 பர் வீடு திரும்பி விட்டனர்; 11
பேர் இறந்துள்ளனர். இதில், இரண்டு பேர் தானாக மருந்து, மாத்திரை எடுத்துக்
கொண்டதும், மூன்று பேர் தாமதமாக சிகிச்சைக்கு வந்ததும் காரணம். பாதிப்பு,
இந்திய அளவில், ஒரு சதவீதம் கூட இல்லை; இருந்தபோதிலும், இறப்பு
ஏற்படக்கூடாாது என்பதில், அரசு கவனமாக உள்ளது. பீதி அடையும் வகையில்,
பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏதும் இல்லை; நிலையை கட்டுக்குள்தான்
இருக்கிறது. நான்கு லட்சம் 'டாமி' புளூ மாத்திரைகள்; 50 ஆயிரம்
தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் கேட்டால், இலவசமாக
தர தயாராக உள்ளோம். தும்மல், இருமல் பட்ட இடத்தைத் தொட்டுவிட்டு, அப்படியே
கை கழுவாமல் விட்டுவிடுவது நல்லதல்ல. சோப்பு போட்டு, சுத்தமாக கைகழுவ
வேண்டும். இதுகுறித்து, மாணவர்களின் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
வருகிறது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, காய்ச்சல் பாதிப்பு
இருந்தால், 'டாமி புளூ' மாத்திரை போட்டு தேர்வு எழுதலாம்; அதில், எந்த
சிக்கலும் இல்லை; அதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்துள்ளது. அப்படி
பாதிப்பு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. சென்னை, கோவை போன்ற நகரங்களில்
பாதிப்பு இருந்தாலும், கிராமப்புறங்களில் எந்த பாதிப்பும் இல்லை.
வெயில்காலம் வந்தால் பாதிப்பு குறைந்து விடும். காய்ச்சல் வந்தால்,
மருத்துவமனை செல்லுங்கள். தேவையற்ற பீதி வேண்டாம்;வதந்திகளையும் நம்ப
வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.
கூடுதல் கட்டணம் வசூலித்தால்...மீறினால் நடவடிக்கை!
தமிழகத்தில், ஆறு மையங்களுடன், புதுவை, 'ஜிப்மர்' என, ஏழு அரசு பரிசோதனை மையங்களும், 14 தனியார் மையங்களும் உள்ளன. தனியார் மையங்கள், 3,750 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என, அறிவுறுத்தினோம்; அதற்கு மேல் வாங்க மாட்டோம் என, உறுதி அளித்துள்ளனர். மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும். 'கிங்' ஆய்வு மையத்தில், காலையில் கொடுத்தால், மாலையே முடிவுகள் தரப்படுகிறது. 48 மணி நேரம் காத்திருப்பு எல்லாம் இல்லை. 'பயோ செக்யூரிட்டி' காரணங்களால், இஷ்டம்போல் மையங்களை திறக்க முடியாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...