திருக்கோவிலூர் அருகே தலைமை ஆசிரியையை கண்டித்து, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்
மாவட்டம், பாடியந்தல் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. தலைமை
ஆசிரியை பவானி, சக ஆசிரியர் ஐந்து பேருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல்,
தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுந்தது. சில நாட்களுக்கு முன், தலைமை
ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, போலீசில்
புகார் அளிக்கப்பட்டது. 'குடியரசு தினத்தன்று கொடியேற்ற, தலைமை ஆசிரியர்
வரவில்லை' என, மக்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் கூறினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாடியந்தலைச் சேர்ந்த ஒருவர்,
அத்தாட்சி
சான்றிதழ் கேட்டு, தலைமை ஆசிரியையிடம் சென்றார். 'தரமுடியாது' என, அவர்
மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று காலை 9:30
மணிக்கு, பள்ளி முன்பாக குவிந்தனர். மாணவர்களை பள்ளிக்குள் அனுப்பாமல்,
வகுப்பு புறக்கணிப்பு செய்ய வைத்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர்
பேச்சு நடத்தினர். மக்களின் புகார் அடிப்படையில், தலைமை ஆசிரியை, உதவி
ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியையை,
தற்காலிக பணிநீக்கம் செய்யவும், மற்ற ஆசிரியர்களை மாற்றுப் பள்ளிக்கு,
'டெப்டேஷனில்' அனுப்பவும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
பிற்பகல் 2:00 மணிக்கு, வழக்கம் போல் பள்ளி செயல்படத் துவங்கியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...