தகவல் தொழில்நுட்பத்தில் நாம் பல படிநிலைகளை கடந்து வந்துள்ளோம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், முழங்கை அளவிலான மொபைல் போன்களை அபூர்வ கண்டுபிடிப்பாக எண்ணி சிலாகித்துக் கொண்ட நாம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் ‘பிளிப்’ போன்களை கண்டதும் புளகாங்கிதம் அடைந்தோம்.
பின்னர், ஸ்மார்ட் போன்களின் யுகப்புரட்சி தொடங்கியது. அவற்றில் பாட்டு கேட்க முடியும், படம் பார்க்க முடியும், படம் பிடிக்க முடியும், பாடமும் படிக்க முடியும் என்ற தொழில்நுட்பத்தின் உச்சத்தை எட்டினோம். அதையே பெரிய கரும்பலகை அளவில் ‘டேப்லட்’டாக பயன்படுத்த தொடங்கினோம். இந்த டேப்லெட்கள் கொண்டு செல்வதற்கு சிரமமாக உள்ளது என கருதியதாலோ.., என்னவோ., தற்போது சிறிய வளையல் அளவிலான ஒரு நவீன பிரேஸ்லெட்டில் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) தொழில்நுட்பத்தை தொடுதோல் (டச் ஸ்கின்) தொழில்நுட்பமாக ஒரு நிறுவனம் சுருக்கி விட்டது.
சீக்ரெட் பிரேஸ்லெட் (Cicret Bracelet) என பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணம் நமது மணிக்கட்டில் தொடுதிரையின் பிம்பத்தை பாய்ச்சும். ஸ்மார்ட் போனில் தோன்றுவது போலவே அனைத்து ’ஐகான்’களும் உங்களது மணிகட்டில் தெளிவாக தோன்றும். தொடுதிரையை நீவிவிட்டு உருட்டி விளையாடுவது போலவே, உங்கள் கையின் மணிகட்டை நீவிவிட்டு நீங்கள் ஒவ்வொரு ‘அப்ஸ்’-சுக்குள்ளும் செல்லலாம்.
வெப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். வீடியோ எடுக்கலாம். வாட்ஸ்அப்பில் வந்த படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை படிக்கலாம். விரல்களை குவித்தும், விரித்தும் (மணிக்கட்டு) திரையின் அளவை தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். தொலை தூரத்தில் உள்ள கைபேசிக்கு வரும் அழைப்புக்கு கூட நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டே ‘கூலாக’ பதில் சொல்லலாம். முழுக்க தண்ணீரில் மூழ்கியிருக்கும் நிலையிலும் இந்த சீக்ரெட் பிரேஸ்லெட் பழுதாகாது.
உங்கள் பிரேஸ்லெட்டில் உள்ள ஒரு ‘பிக்கோ ப்ரொஜெக்டர்’ மூலம் உங்கள் கரத்தின் முழங்கை பகுதியில் பாய்ச்சப்பட்டு, (மணிக்கட்டு) திரையில் தோன்றும் 'கமாண்ட்' பொத்தான்களின் மூலம் நீங்கள் இடும் கட்டளைகள் மீண்டும் பிரேஸ்லெட்டில் உள்ள ‘ப்ராஸெஸருக்கு’ அனுப்பப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவை அத்தனையும் செயலாற்றுகின்றது.
உங்கள் கை மணிக்கட்டுக்கும், கட்டளையிடும் விரலுக்கும் இடையே பாயும் லேசர் கதிர்களின் வாயிலாக நீங்கள் விரும்பும் வகையில் இது செயல்படும். நீடித்த பேட்டரி மற்றும் 10 கண்ணைக் கவரும் வண்ணங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சீக்ரெட் பிரேஸ்லெட்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இனி, உங்கள் தகவல்களை யாரும் உளவு பார்க்கவோ, களவாடவோ நிச்சயமாக முடியாது என்னும் அளவுக்கு உங்களது உடலோடு ஒன்றிவிட்ட தவிர்க்க முடியாத அணிகலன்களில் ஒன்றாக சீக்ரெட் பிரேஸ்லெட் தனிஇடம் பிடித்துவிடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...