பொதுத் தேர்வு அறையில், காலணி அணிந்து செல்ல
விதிக்கப்பட்ட தடையில் இருந்து, நீலகிரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இதற்கு, பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும்
பிளஸ் 2, பொது தேர்வில், மாணவ, மாணவியர் காப்பியடிப்பதை தவிர்க்க, தேர்வு
அறைக்குள் செருப்பு, சாக்ஸ், ஷூ உள்ளிட்ட காலணிகளை அணிந்து செல்ல தடை
விதித்து, மாநில கல்வித் துறை இயக்ககம் உத்தரவிட்டது. ’நீலகிரி
மாவட்டத்தில், குளிர் அதிகம்.
தேர்வு அறையில், மூன்று மணி நேரம்,
வெறுங்கால்களுடன் அமர்ந்து, தேர்வு எழுதினால், மாணவ, மாணவியருக்கு சளி,
காய்ச்சல் ஏற்படும். எனவே காலணி அணிய, சிறப்பு அனுமதி தேவை’ என, பெற்றோர்
தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதன் விளைவாக, பொதுத் தேர்வு அறையில், காலணி
அணிந்து செல்லும் தடையில் இருந்து, நீலகிரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று துவங்கிய, பிளஸ் 2 பொதுத் தேர்வு அறையில், மாணவ,
மாணவியர், கால்களை முற்றிலும் மூடாத வகையிலான செருப்புகளை அணிந்து
தேர்வெழுதினர். இது பெற்றோர் மத்தியில், வரவேற்பை ஏற்படுத்தியது.
வால்பாறை மாணவர்கள் அவதி
பிளஸ் 2 பொதுத்தேர்வு அறையில், காலணி அணிய, கல்வி அதிகாரிகள் தடைவிதித்ததால், வால்பாறை மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
கோவை மாவட்டம், வால்பாறையில், நேற்று பிளஸ் 2
தேர்வு துவங்கியது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய
மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆகிய இரண்டு மையங்களில், மொத்தம் ஏழு பள்ளிகளை
சேர்ந்த, 705 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அவர்கள், தேர்வு அறையில்
காலணி அணிய, கல்வி அதிகாரிகள், அனுமதிக்கவில்லை. இதனால், குளிரான
காலநிலையில், வெறுங்காலுடன், மூன்று மணி நேரம், தேர்வு எழுதியதால், மாணவ,
மாணவியர் கடும் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து, கல்வி அதிகாரிகளிடம் கேட்ட
போது, ’நீலகிரி மாவட்டத்தில் மட்டும் தான், காலணி அணிய,
அனுமதிக்கப்பட்டுள்ளது. வால்பாறைக்கு விதிவிலக்கு அறிவிக்கப்படவில்லை’
என்றனர்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்
ஞானகவுரியிடம் கேட்ட போது, ”வால்பாறையில் சீதோஷ்ணநிலை நல்ல முறையில்
இருப்பதால், இங்குள்ள மாணவர்கள் காலணி அணிய தேவையில்லை என, வால்பாறை
பள்ளித்தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், மாணவர்கள்
காலணி அணிய, அனுமதிக்கப்படவில்லை. தேவை பட்டால், மாணவர்களாகவே காலணி
அணிந்து கொள்வதில் தவறில்லை,”என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...