நமது நாளிதழ்
செய்தி எதிரொலியாக, பெருங்குடி அரசு துவக்க பள்ளியில், மேற்கூரை பூச்சு
உதிர்ந்த கட்டடத்தில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களை, பெற்றோர் முற்றுகையிட்டனர்.
பெருங்குடி,
பள்ளி சாலையில் உள்ளது அரசு துவக்கப்பள்ளி. புனித தோமையார் மலை ஒன்றிய
கட்டுப்பாட்டில் உள்ள அந்த பள்ளி, 1938ம் ஆண்டு துவக்கப்பட்டது. அங்கு,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளி கட்டடம் ஒன்றில், வகுப்பறையின்
மேற்கூரை பூச்சு உதிர்ந்து விழுந்தது. அதில், மேஜை உள்ளிட்ட பொருட்கள்
நொறுங்கின. அதிகாலையில் சம்பவம் நடந்ததால், பள்ளி குழந்தைகளின் உயிர்
தப்பியது.
பெற்றோர் முற்றுகை
இதுகுறித்து,
நமது நாளிதழில், படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது. அதையடுத்து,
நேற்று மாணவர்களின் பெற்றோர் பலர், பள்ளியை முற்றுகையிட்டனர். மோசமான
கட்டடத்தில் வகுப்புகளை நடத்த கூடாது; வரும், கல்வியாண்டிற்குள் புதிய
கட்டடம் கட்ட வேண்டும்; இல்லாவிடில், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது
என எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, மேற்பூச்சு உதிர்ந்து விழுந்த
இடத்தில், பூச்சு வேலை செய்ய வந்த கட்டுமான ஊழியர்கள் திருப்பி
அனுப்பப்பட்டனர்.
ஆய்வு
அதையடுத்து,
அரசியல் கட்சியினர், பள்ளியை முற்றுகையிட்டு, புதிய கட்டடம் கட்ட
வலியுறுத்தினர். "இந்த அரசு கட்ட தவறினால், நாங்களே கட்டுவோம், அதற்கான
அனுமதியையாவது பெற்று தாருங்கள்" என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, கல்வி
துறையை சேர்ந்த அதிகாரிகள், வார்டு கவுன்சிலர் ஆகியோர், பள்ளியில் ஆய்வு
மேற்கொண்டனர். பின், எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, புதிய
கட்டடம் கட்டவும், அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கவும் முடிவு
செய்யப்பட்டது.
அடுத்த முன்று
மாதங்களுக்குள், ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டுவது எனவும், அதன்பின்,
மற்ற கட்டடங்கள் கட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சாதாரண விஷயமுங்க!
பள்ளியை நேற்று
பார்வையிட்ட அதிகாரிகள், குழந்தைகளின் உயிருக்கு நேர இருந்த ஆபத்தை பற்றி
கவலைப்படாமல், "இதெல்லாம் மிக சாதாரணமான விஷயம். இதை யார் பத்திரிகைகளுக்கு
சொன்னது. உள்ளே நுழைந்து அவர்கள் படம் எடுக்கும் வரை நீங்கள் என்ன செய்து
கொண்டிருந்தீர்கள்?" என, பள்ளியில் ஆசிரியைகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.
வாக்குவாதம்
அதன் விளைவாக,
நேற்று தகவல் சேகரித்து, புகைப்படம் எடுக்க சென்ற மற்ற
பத்திரிக்கையாளர்களுக்கு பள்ளி வளாகத்தினுள் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், பள்ளி நிர்வாகத்திற்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம்
ஏற்பட்டது.
மரக்காணத்தில்
பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் பலியான சம்பவத்தை,
கல்வி துறை அதிகாரிகள் பாடமாக எடுத்து கொண்டு, இங்கும் அதுபோல சம்பவம்
நடக்காமல் தடுக்கும் வகையில், புதிய கட்டடத்திற்கான பணிகளை மேற்கொண்டால்
நலம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...