தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும்
பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்
என்கிற வாசகர் அரங்கம்
சரியானதே
தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும்
பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்
என்கிற கருத்து சரியானது. தனியார் பள்ளிகள் மூன்று வயது குழந்தைகளைப்
பள்ளியில் சேர்த்து விடுகின்றன. பெற்றோர் ஐந்து வயது வரை பிள்ளைகளை அரசுப்
பள்ளியில் சேர்க்க முடியவில்லை. அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள்
தொடங்க வேண்டும்.
என். சண்முகம், திருவண்ணாமலை.
காலத்தின் கட்டாயம்
தனியார் பள்ளிகள் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி.,
யு.கே.ஜி. ஆகிய வகுப்புகளை வைத்துக் கொண்டு நடுத்தர குடும்பங்களின்
பொருளாதாரத்தையே சூறையாடுகின்றன. ஒரு குழந்தையின் கல்வி என்பது
ஆயிரக்கணக்கான ரூபாயில்தான் தொடங்குகிறது. எனவே, அரசுப் பள்ளிகளிலும்
மேற்கண்ட வகுப்புகளைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.
தாய்மொழிக் கல்வி தேவை
ஏற்கெனவே தனியார் பள்ளிகளால் தாய் மொழியான
தமிழ் சிதைந்து வருகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மழலைக்
குழந்தைகளுக்கு அம்மா, அப்பா மறந்து போய், மம்மி, டாடி என்று அழைக்கும்
பழக்கம் வந்து விட்டது. அரசுப் பள்ளிகளிலும் மழலைக் குழந்தைகள்
சேர்க்கப்பட்டால் தமிழ் மறந்து போகும். தாய்மொழிக் கல்வியில் அறிவு தேவை.
வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி,
வரட்டணப்பள்ளி.
அநியாயக் கட்டணம்
தனியார் பள்ளிகளில் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி.,
யு.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பது என்பது தொழிற் கல்வி
கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதை விட கடினம். காரணம், அங்கு
வசூலிக்கப்படும் அநியாயமானக் கட்டணமே. எனவே, அரசு பள்ளிகளில் இவ்வகுப்புகளை
துவங்குவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கோ. ராஜேஷ் கோபால்,
அருவங்காடு.
அவலம் வேண்டாம்
குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை விளையாட்டுப்
பருவமாதலால் மேலை நாட்டுக் கல்வி முறையான கிண்டர் கார்டன் முறை
நகர்ப்புறங்களில் வந்தது. பின்னர், அது கிராமப்புறங்களையும் தொற்றிக்
கொண்டது. பள்ளிகளில் பிள்ளைகள் விளையாட்டை மறந்து, ஒருவித
கட்டுப்பாட்டிற்கு பழக்கப்படுத்தப்படுகின்றனர். இந்த அவலம் அரசுப்
பள்ளிகளில் வேண்டாமே.
அ. கருப்பையா, பொன்னமராவதி.
தீமையே அதிகம்
தனியார் பள்ளிகளில் பிள்ளைகள் பன்னிரெண்டாம்
வகுப்புவரை ஆங்கில வழியிலேயே பயில்கின்றனர். அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி
கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டால் தமிழ் வழியிலேயே படிக்கக்கூடிய வாய்ப்பு
ஏற்படும். மூன்று வயது பிள்ளைகளை கே.ஜ. வகுப்புகளில் சேர்ப்பதினால்
ஏற்படும் தீமையை விட தாய் மொழி வழி அல்லாத கல்வியின் தீமை அதிகம்.
டி. பஷீருத்தீன், பேரணாம்பட்டு.
தனித்தன்மை பாதிப்பு
பிரி.கே.ஜி. குழந்தையை பேசாதே, வாயை மூடு என்று
சத்தம் போடாமல் இருக்கச் செய்வதால் குழந்தையின் தனித் தன்மை
பாதிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் பணம் சம்பாதிப்பதற்கு கண்டு
பிடிக்கப்பட்ட ஒரு வழிதான் இந்த கே.ஜி.வகுப்புகள். இவை தனியார்
பள்ளிகளிலேயே தடை செய்யப்பட வேண்டியவை. எனவே, அரசு பள்ளிகளில் இவற்றை
தொடங்கவே கூடாது.
ஜி. சிந்து, லோயர் கேம்ப்.
சேர்க்கை குறைவு
அரசுப் பள்ளிகளில் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி.,
யு.கே.ஜி. வகுப்புகள் இல்லாததால் பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார்
பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை
ஆண்டுக்கு ஆண்டு குறைந்து பின்பு அரசு பள்ளிகளை மூடும் சூழ்நிலை
உண்டாகிறது. ஆகவே அரசு பள்ளிகளிலும் மழலை வகுப்புகளை தொடங்க வேண்டும்.
து. கணேசன், தூத்துக்குடி.
வேறுபாட்டைக் களைவோம்
இந்தக் கருத்து சரியே. மூன்று ஆண்டுகள் படிக்க
வைக்க பொருளாதார வசதி இல்லாதவர்கள் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப்
படிக்க வைக்கலாம். பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. படித்தவர்களும்
படிக்காதவர்களும் முதல் வகுப்பில் சேரும்போது அவர்களுக்கு உள்ள தகுதி
வேறுபாட்டைக் களைய வேண்டாமா?
என்.எஸ். முத்துகிருஷ்ணராஜா,
இராஜபாளையம்.
பயன் விளையாது
பெற்றோர்களுக்குத் தனியார் பள்ளிகளின் மீது
உள்ள நம்பிக்கையும், ஈர்ப்பும் அரசுப் பள்ளிகளின் மேல் உண்டாவதில்லை.
பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய வகுப்புகளை அரசுப் பள்ளிகளில்
தொடங்குவதால் அரசுக்கு மேலும் செலவு ஏற்படுமேதவிர, வேறு எவ்வகைப் பயனும்
விளையாது. எனவே இந்த முயற்சி வேண்டாம்.
அ. சிவராம சேது,
திருமுதுகுன்றம்.
வேறு வழியில்லை
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பெரிய
தொகை தனியார் பள்ளிகளால் வசூலிக்கப்படுகின்றன. ஆரம்பக் கல்வி நன்றாக இருக்க
வேண்டும் என்பதற்காக பெற்றோரும் வேறு வழியில்லாமல் அதிகத் தொகையைக்
கட்டணமாகச் செலுத்தித் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். இதற்கு முடிவு
கட்ட வேண்டுமானால் அரசு பள்ளிகளிலும் இந்த வகுப்புகள் தொடங்கப்பட
வேண்டும்.
எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
கால மாற்றம்
தற்போது அதிக தனியார் கல்விக் கூடங்கள்
திறக்கப்பட்டு மக்களை கவர்ந்திழுக்கின்றன. இதனால் அரசுப் பள்ளிகளில்
சேர்க்கை விகிதம் குறைகின்றது. எதிர்காலத்தில் கல்வி என்பதே தனியார் வசம்
என்றாகி பணம் இருந்தால்தான் கல்வி பெற முடியும் என்ற சூழ்நிலை
உருவாகிவிடும் போலிருக்கிறது. கால மாற்றத்திற்கேற்ப அரசுப் பள்ளிகளிலும்
இந்த வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
நிர்பந்தம்
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில்
சேர்க்கப்படும் குழந்தைகள் ஆங்கில வழியிலேயே படிக்க வேண்டிய
நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள்
தொடங்கப்பட்டால் தமிழ் வழிக் கல்வி படிக்கக் கூடிய வாய்ப்பு தமிழை
தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு கிட்டும்.
எஸ். குமரவேல்,
அம்மையப்பன்.
மகிழ்வு கொள்வர்
பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தனியார்
பள்ளிகளில் படிக்க வைப்பதற்கே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அரசுப்
பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்து போகிறது. அரசுப்
பள்ளிகளிலும் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள்
இருக்குமானால் ஏழை மாணவர்களும் அதில் படிப்பர். பெற்றோரும் தங்கள்
குழந்தைகளை எண்ணி மகிழ்வு கொள்வர்.
செ. சத்தியசீலன், கிழவன் ஏரி.
மொழி அறிவு முடமாகும்
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி முன்பருவ
வகுப்புகள் தொடங்குவது தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் குழந்தைகள்
சேர்க்கப்படுவதைத் தவிர்க்குமே தவிர, பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு
பயன்படாது. குழந்தைகள் ஆங்கில மொழி வழியாக கல்வி கற்பது என்பது அவர்களின்
தாய்மொழி அறிவை முடக்குவதாகவே அமையும்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,
வேம்பார்.
வாய்ப்பு உருவாகும்
அரசுப் பள்ளியில் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி.,
யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டால் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே
கிடைக்கும் படிப்பை ஏழை மாணவர்களும் பெற்றிட வாய்ப்பு உருவாகும். மேலும்,
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயரும். மாணவர்களின் எண்ணிக்கைக்
குறைவைக் காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூடும் அவலம் நீங்கும்.
மா. வேல்முருகன், சாயல்குடி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...