அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. இறைவனின் படைப்பான லட்சக்கணக்கான
ஜீவராசிகளில், மனிதப் பிறவி மட்டும், ஏராளமான அதிசயங்கள், அற்புதங்களை
கொண்டது. தாய் பத்து மாதங்கள் மட்டும் அல்ல, காலம் முழுக்க, குழந்தையை
சுமக்கிறாள். குழந்தையை பெற்றெடுத்த பின், அந்தத் தாய்க்கு, அதிக
பொறுப்புகள் கடமைகள் இருக்கின்றன.
தாய், தன் குழந்தைக்கு, தந்தையை அறிமுகம் செய்கிறாள். தந்தை, உலக அனுபவங்களை, குழந்தைக்குக் கற்றுத் தருகிறார். ஐந்து வயதில், குழந்தையை பள்ளிக்கு அனுப்பிய காலம் போய், இப்போது இரண்டரை, மூன்று வயதிலேயே, பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
பள்ளியில் குழந்தைக்குக் கல்வி, விளையாட்டு, பொது அறிவுகளை, ஆசிரியர் பயிற்றுவிக்கிறார். ’நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக’ அந்தக் குழந்தை வளர்ந்து, உடல், மன அளவில் முதிர்ச்சி பெறுகிறது. எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை மனக்கவலையில்லை.
சேர்ந்து படித்தல்:
ஆறாம் வகுப்பு முதல், பாடங்களின் சுமை கூடுகிறது. பெற்றோரின் அன்பு, ஆசிரியரின் கண்டிப்பும் சேர்கிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன், ஆண், பெண் தனித்தனியாக பள்ளிகளில் படித்தனர். ஆனால், இன்று இருபாலர் பள்ளிகள் பெருகிவிட்டன.
மாணவ, மாணவியருக்கு 12 வயது முதல் மனம், உடல், வளர்ச்சியில், பெரிய மாற்றங்களும், இருபாலருக்கிடையே ஈர்ப்பும் உருவாகிறது. படிக்கிற வயதில், காதல் வயப்பட்டு, வாழ்க்கையை கெடுத்துக் கொள்கின்றனர்.
இளம் வயதினரை கெடுப்பதற்கு, இன்று பல தகவல் தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. மொபைல்போன், இன்டர்நெட், இமெயில், பேஸ்புக், ஆபாசப் படங்களும் பெருகிவிட்டன. இதன் காரணமாக, இளம் வயதுப் பெண்கள், ஆண் நண்பர்களுடன் நட்பு கொண்டு வாழ்க்கையையும், சிலர் கற்பையும் இழந்து தவிக்கின்றனர்.
திருத்துவது எப்படி?:
இன்றைய நடைமுறை வாழ்வில் கணவரும், மனைவியும் வேலைக்கு செல்வதால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவதில்லை. சில பெற்றோர், குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்ததும், படித்த பாடங்கள் குறித்து கேட்கின்றனர். இதனால், குழந்தையும் மனமகிழ்ந்து, தாயிடம் பள்ளியில் படித்த பாடங்களை, நடந்த நிகழ்வுகளை தன் மழலைச் மொழியில் கூறுகின்றனர். தன் மகனோ, மகளோ பட்டப்படிப்பு முடிக்கும் வரை பெற்றோர்கள், இவ்வாறு மனம் திறந்து, நண்பர்கள் போல பேசிக்கொள்வது, அவர்களின் எதிர்கால வாழ்விற்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு காலத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்கம், தெய்வபக்தி, நல்ல அறிவு ஏற்பட, நீதி போதனை என்ற வகுப்பு, வாரம் ஒரு முறை நடைபெறும். இந்த வகுப்பில், திருக்குறள், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், ராமாயணம், மகாபாரதம் மற்றும் நீதிக் கதைகளை, ஆசிரியர் சொல்லித் தருவர்.
நீதி போதனைகள்:
இதனைக் கேட்கும் மாணவர்கள், அதன்படி தங்கள் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றிக் கொண்டனர். ஆனால், இன்று பள்ளிகளில் நீதி, போதனை வகுப்பு கிடையாது. எனவே, மாணவர்களின் நல்லறிவு, ஒழுக்கம் வளர மீண்டும், ”நீதி போதனை” வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டும். அது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
மாணவிகளைக் கிண்டலடித்து, கேலி பேசுவது, தன்னை வெறுக்கும் மாணவியின் முகத்தில், ஆசிட் வீசுவது, வகுப்பறையில் ஆபாசக் காட்சிகள், செய்திகள் பரப்புவது, ஆசிரியரை மிரட்டுவது, போதைக்கு அடிமையாவது, என சில இளைஞர்கள் வயதுக்கு மீறிய, கெட்ட சகவாசத்தால், வழி தவறி சென்று விடுகின்றனர். கெட்ட பழக்கமுள்ள மாணவனை, நல் வழிக்கு கொண்டு வர, அரசாங்கம் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.
பெற்றோரிடம் பணம் கேட்கும் மாணவருக்கு ’பாக்கெட் மணி’ என்று சிலர் அதிகமாக பணம் தருகின்றனர். இந்தப் பணத்தை வேறு சில மாணவர்களுடன் சேர்ந்து உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு, ஒரு சிறு தொகை மட்டும், செலவுக்கு கொடுப்பது நல்லது.
மேலும், பள்ளி நேரம் முடிந்து, அதிக நேரம் கழித்து, வீட்டிற்கு வரும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். வீட்டில் கம்ப்யூட்டரில் உள்ள செய்திகளையும், தகவல்களையும், பெற்றோர் அடிக்கடி கவனிப்பது நல்லது. மாணவர்கள், பெற்றோர்கள் மதித்து கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்க்கையில் சாதனைகள் படைப்பதே, லட்சியமாக இருக்க வேண்டும். புதுமைகள் படைப்போம்! பெற்றோரை, ஆசிரியரை மதிப்போம்! என இளைய தலைமுறையினர் சூளுரைக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...