1917-ஆம் ஆண்டு, பாலகங்காதர திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து,
'சுயாட்சிப் போராட்டம்’ தொடங்கினர். அப்போது, அவர்கள் வடிவமைத்த தேசியக்
கொடியின், இடது ஓரத்தில், பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இருந்தது. இதை,
இந்திய சுதந்திரப் போராளிகள் பலரும் எதிர்த்ததால், விரைவிலேயே திரும்பப்
பெறப்பட்டது.
தற்போதுள்ள தேசியக் கொடிக்கு ஆரம்பமாக அமைந்தது, 1921-ல் பிங்காலி வெங்கையா
என்பவர் உருவாக்கிய கொடி. இதில் பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் மட்டுமே
இருந்தன. இது, இந்தியாவில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமியர்களைக்
குறிப்பிட்டது.
மதத்தைக் குறிப்பிடாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது தேசியக்
கொடியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1931-ம்
ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சிவப்பு,
பச்சை நிறங்களுக்கு இடையில் வெள்ளை நிறம் சேர்க்கப்பட்டது. நூல் நூற்கும்
கை ராட்டையும் இணைந்தது. ராட்டையின் சக்கரங்கள், நமது தேசிய
முன்னேற்றத்தைக் குறிப்பிட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்றதும், 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி, மூவர்ண தேசியக் கொடி வான் நோக்கி கம்பீரமாக உயர்ந்தது.
காங்கிரஸ் கட்சியின் கொடியும் தேசியக் கொடியும் ஒரே மாதிரியாக இல்லாமல்,
வேறுபடுத்திக் காட்டுவதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டது. ராஜேந்திர பிரசாத்,
ராஜாஜி, சரோஜினி நாயுடு, அம்பேத்கர் போன்றோர் அடங்கிய அந்தக் குழு, 1947
ஜூலை மாதம், தேசியக் கொடியை இறுதி செய்தது. கை ராட்டைக்குப் பதிலாக அசோகச்
சக்கரம் சேர்க்கப்பட்டது.
1951-ல், இந்திய தரக் கட்டுப்பாட்டுத் துறையால், கொடியின் நீளம் மற்றும்
அகலம், தயாரிக்கப் பயன்படுத்தும் துணியின் தரம் போன்ற பல விஷயங்கள்
தீர்மானிக்கப்பட்டன.
நமது நாட்டுக் கொடியைத் தயாரிக்க, குடிசைத் தொழில் கழகம் உரிமை
பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டிலிருந்து, கர்நாடகா தார்வாடியில் உள்ள 'கதர்
கிராமத் யோக சமுக்தா சங்கம்’ மூலம் தேசியக் கொடி தயாரிக்கப்படுகிறது.
தற்போதைய தேசியக் கொடியின் பொருள்... காவி நிறம், தைரியம் மற்றும்
தியாகத்தைக் குறிக்கும். வெள்ளை நிறம், உண்மை மற்றும் தூய்மையைக்
குறிக்கும். பச்சை நிறம், வளத்தைக் குறிக்கும். அசோகச் சக்கரம், நேர்மையைக்
குறிக்கிறது.
தேசியக்கொடி சில விதிகள்
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை பறக்க செய்து,
அதற்கு மரியாதை செலுத்துவோம். தேசியக் கொடியை எங்கெல்லாம் எப்போதெல்லாம்
பறக்கவிட வேண்டும் என்பது பற்றி சில விதிகள் இருக்கிறது.
எங்கு, எப்போதெல்லாம் பறக்கவிட வேண்டும்:
- சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரைதான் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும்.
- முக்கியமாக தலைமைச் செயலகம், ஆட்சியர் அலுவலகம், உயர்நீதிமன்றம், மாநகராட்சிக் கட்டடம், மத்திய, மாநில அரசுக் கட்டடங்கள், சிறைச்சாலை முதலிய கட்டடங்களில் தேசியக் கொடியை பறக்க விடவேண்டும்.
- ஊர்வலத்தில் முன்னால் தேசியக்கொடியை வலது தோளில் உயர்த்திப் பிடித்துச் செல்ல வேண்டும்.
- தேசியத் திருவிழா நாட்களில் மட்டும் வீடுகளில், கார்களில், தேசியக் கொடியை பறக்கவிடலாம்.
- மற்ற தேசியக் கொடிகளுடன் ஒரே வரிசையில் இக்கொடியைப் பறக்கவிட்டால், இந்திய தேசியக்கொடியின் இடது புறத்திலேயே மற்ற கொடிகளை பறக்கவிட வேண்டும்.
- அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதர் அலுவகங்களிலும், பயன்படுத்தும் கார்களிலும் கொடி கட்டாயம் பறக்க விடவேண்டும்.
- மத்திய, மாநில அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோரது காரிலும் கொடி பறக்க வேண்டும்.
- எல்லைப்புறங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கொடியை பறக்க விடலாம்.
துக்க நாளில்:
- தேசத்தின் பெருந்தலைவர்கள் மறைவு போன்ற தேசிய துக்க சம்பவங்களுக்கு துக்கத்தை அறிவிக்க, கொடிமரத்தின் பாதியில் கொடியை பறக்க விட வேண்டும்.
செய்ய கூடாதது:
- கொடியில் எந்த வாசகத்தையும் எழுதக்கூடாது.
- ஒருவேளை கொடி கிழிந்துவிட்டால், அதை தூசு துடைக்கவோ, குப்பைத் தொட்டியில் போடவோ கூடாது.
- கொடியை ஜன்னல் திரையாகவோ, மேஜை விரிப்பாகவோ பயன்படுத்தக் கூடாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...