Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனியார்பள்ளிகளின் கூத்து!!!

          எங்கள் ஊரில் தனியார் பள்ளியொன்று இருக்கிறது. ஏதோவொரு வித்யாலயா. காஸ்ட்லியான பள்ளி. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த துண்டறிக்கையொன்று கண்ணில்பட்டது. ‘என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்’ என்கிற ரீதியிலான துண்டறிக்கை அது. எங்கள் பள்ளியில் எப்படி கல்வி கற்பிப்போம் என்ற விளக்கம் யாருக்கும் கூறப்படமாட்டாது என்பதுதான் முதல் நிபந்தனை.
 
 

           இது ஒரு வித்தியாசமான நிபந்தனையாகத் தெரிந்தது. இப்படியெல்லாம் தனியார் பள்ளிகளில் சுயமாக யோசிக்கமாட்டார்களே என்று நினைத்தபடி மேலும் தொடர்ந்தால் அடுத்த நிபந்தனை அதைவிட அதிரடியானது. நல்ல பெற்றோர்கள், பண்பாடான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டும்தான் சேர்க்கை என்பது இரண்டாவது நிபந்தனை. ஆச்சரியமாக இருக்கிறது. பெற்றோர்கள் நல்லவர்கள், வல்லவர்கள், பண்பாடானவர்கள் என்பதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை. ‘எக்ஸ்க்யூஸ்மீ....ஒசாமா பின்லேடன் அட்ரஸ் கிடைக்குமா?’ என்று கேட்பவர்கள் கூட படு நாகரிகமாகத்தானே வருவார்கள்?
எதற்காக திடீரென்று இப்படியான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று குழம்பினால் அதற்கடுத்த நிபந்தனை காரண காரியத்தை விளக்கிவிட்டது. பெற்றோர்கள் புகாரோ, கருத்தோ கூற விரும்பினால் தாளாளரை அணுகி மென்மயாகவும், நாகரிகமாகவும் கூறவும் என்பதுதான் அதிமுக்கியமான நிபந்தனை. புரிந்துவிட்டது. யாரோ உள்ளே புகுந்து செமத்தியாக வீடு கட்டியிருப்பார்கள் போலிருக்கிறது. கதறக் கதற துண்டறிக்கை அச்சடித்து வெளியிட்டுவிட்டார்கள்.
வீடு கட்டாமல் இருப்பார்களா? கட்டத்தான் செய்வார்கள். ப்ரீ.கே.ஜிக்கு வெறும் நாற்பதாயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்கும் பள்ளி அது. இரண்டரை வயதுக் குழந்தைக்கு நாற்பதாயிரம் கட்டும் பெற்றவன் என்ன செய்வான்? அதுவும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான சாதாரண ஊரில் நம்பிப் பணம் கட்டுபவன் விடுவானா? அடுத்த வருடம் தனது குழந்தை செவ்வாய்க்கு சொய்ங் என்று பறக்க வேண்டும் என்று எதிர்பார்க்காவிட்டாலும் பத்தாம் வாய்ப்பாடாவது தலைகீழாக ஒப்பிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பான். பள்ளிக்கு வந்து நேரடியாகக் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. பேச்சுவாக்கில் கேட்டால் கூட பரவாயில்லை சட்டை மீது கை வைத்துவிடுகிறார்கள். கை வைப்பதோடு விடுகிறார்களா? ஒரு தட்டும் தட்டிவிடுகிறார்கள்.
‘இரண்டரை வயசுப் பையனுக்கு பத்தாம் வாய்ப்பாடு சொல்லித் தரமுடியாதுய்யா’ என்று கதறினால் ‘அப்புறம் எதுக்குய்யா நாற்பதாயிரம் வாங்கி கல்லாப் பெட்டிக்குள்ள பூட்டுன?’ என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் சமாளிக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. வண்ணக் காகிதத்தில் அச்சடித்து ஊர் முழுக்கவும் பரவவிட்டுவிட்டார்கள். கடைசியான நிபந்தனை என்ன தெரியுமா? பள்ளி ஊழியர்களிடம் முரட்டுத்தனமாகவும் தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதைப் பணிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பணிவாக என்ற சொல்லைப் பார்க்கும் போது சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ‘வேண்டாம்...அழுதுடுவேன்’ என்பது மாதிரியே தெரிந்தது.
இந்தப் பள்ளியில் ஏதோ நல்ல விவகாரம் நிகழ்ந்திருக்கிறது என்று சந்தோஷமாக இருந்தது. அடித்து மொத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கேள்வி கேட்குமளவுக்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இவர்களைப் போன்ற பல்லாயிரம் பள்ளிகள் திருடிக் கொழிக்கிறார்கள். முரட்டுத்தனமான திருட்டு இது. இப்படி பெற்றோர்களிடம் பல்லாயிரக்கணக்கில் வாங்கும் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்? எம்.எஸ்.ஸி எம்.பில் முடித்த பள்ளித் தோழன் தனியார் பள்ளியொன்றில் மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனை நேரில் பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கிறது. மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் இந்தக் காலத்தில்?
பெற்றவர்களிடமிருந்து கறக்கிறார்கள். பணியாளர்களுக்கு மரியாதையான சம்பளமும் தருவதில்லை. எங்கே போகிறது அத்தனை பணமும்? கட்டிடத்து மேலாக கட்டிடம். கார் மாற்றி கார். பெருத்துப் போகும் தாளாளர். இப்படித்தானே போகிறது?
அப்படியே பணத்தைப் பறித்தாலும் கல்வித்தரத்தில் ஏதேனும் வளர்ச்சி இருக்கிறதா? கிழித்தார்கள். PISA பற்றிக் கேள்விப்பட்டிருக்கக் கூடும். Program for International Student Assessment என்பதன் சுருக்கம்தான் PISA. உலகளவிலான ஒரு தனிப்பட்ட அமைப்பு இது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதினைந்து வயது நிரம்பிய பள்ளி மாணவர்களிடையே ஒரு தேர்வு நடத்துகிறார்கள். மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களால் இந்தத் தேர்வை சமாளிக்க முடியாது. சிந்திக்கும் திறன் அடிப்படையிலான தேர்வு இது. இந்த அமைப்பு யாரையும் வெற்றிலைபாக்கு வைத்து அழைப்பதில்லை. எந்த நாடு வேண்டுமானாலும் தேர்வு முறையில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த அமைப்பினர் தேர்வு நடத்தி மாணவர்களின் திறனை அறிந்து ஒரு அறிக்கையைத் தருவார்களே தவிர எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை.
2009 ஆம் ஆண்டு இந்தத் தேர்வில் இந்தியா கலந்து கொண்டது. Pilot mode. முதலில் தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலங்கள் மட்டும் பங்கேற்கட்டும் அடுத்த முறை வேண்டுமானால் இந்தியா முழுவதும் கலந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இரண்டு மாநிலங்களும்தான் மனிதவள மேம்பாட்டில் மிகச் சிறந்த வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்பதால்தான் இந்த ஏற்பாடு. தேர்வு முடிவுகள் பல்லைக் கெஞ்சின. எழுபத்து நான்கு நாடுகள் பங்கேற்ற இந்தத் தேர்வில் இந்தியா எழுபத்து மூன்றாவது இடத்தைப் பெற்றது. சீனாக்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூப்பாடு போடுகிறோம். அவனது மாணவர்கள்தான் இந்தத் தேர்வில் கொடிகட்டினார்கள்.
சிந்திக்கும் திறனேயில்லாத வெறும் அடிமைகளை உருவாக்கும் கல்வித்தரத்தை வைத்துக் கொண்டுதான் இந்தத் தனியார் பள்ளிகள் திருடித் தின்கிறார்கள். ஒரு முறை அடி வாங்கியதே போதும் என்று இந்தியா விலகிக் கொண்டது. 2012 ஆம் ஆண்டுத் தேர்வில் கலந்து கொள்ளவேயில்லை. 2015 ஆம் ஆண்டுத் தேர்விலும் கலந்து கொள்ளப் போவதில்லை. குறை இருப்பது சகஜம்தான். ஆனால் அதைத் திருத்திக் கொள்வதுதானே சரியானதாக இருக்கும்? ம்ஹூம். எல்லாவற்றையும் மூடி வைத்துக் கொள்வோம். எவனுக்கும் தெரியக் கூடாது.
வெளியில் ஒரே ஆர்ப்பாட்டம்தான். ‘நாங்கள்தான் தில்லாலங்கடிகள்’ என்று ஒரே அட்டகாசம்தான். கோடிக்கணக்கில் கொண்டு போய் ஐஐடியில் கொட்டுகிறார்கள். அப்படியே கொட்டினாலும் ஒரு ஐஐடி கூட உலகின் மிகச் சிறந்த முதல் இருநூறு கல்லூரிகளில் இல்லை என்பதுதான் நிதர்சனம். சீனாவும் ஜப்பானும் தங்களது அடிப்படையான கல்வித்தரத்தில் மிகச் சிறந்த கவனத்தைச் செலுத்துகின்றன. ஆனால் நமது அடிப்படைக் கல்வித்தரமே ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆரம்பக்கல்வியிலிருந்து பட்டதாரிப் படிப்பு வரை எல்லா மட்டங்களிலும் ஊத்தை வாய்தான் நம்முடையது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டோம்.
பாடத்திட்டங்களில் மாற்றம், கற்பிக்கும் திறனில் மேம்பாடு என நாம் செய்ய வேண்டிய காரியம் எவ்வளவோ இருக்கின்றன. ஏதாவது உருப்படியாக நடக்கிற மாதிரி தெரிகிறதா? நாராயணமூர்த்திக்கும், அசிம் பிரேம்ஜிக்கும் மாடு மாதிரி உழைப்பவர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
தனியார் பள்ளிகள் திருடட்டும். தொலையட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் மாணவர்களிடம் என்னவிதமான திறன்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன? எட்டு மணிக்கு மாணவர்களை வரச் சொல்லி இரவில் வீட்டுக்கு அனுப்பி மதிப்பெண் வாங்கும் பொம்மைகளைத்தானே உருவாக்குகிறார்கள்? அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிறைய செய்திகள் சேர்வதில்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகச் சிறந்த கார்போரேட் அடிமைகளாக உருவாகிறார்கள். அப்புறம் எப்படி கல்வித்தரம் விளங்கும்?
அரசாங்கம்தான் கண்டுகொள்வதேயில்லை. கண்டுகொள்வதில்லை என்று சொல்ல முடியாது. கண்களை மூடிக் கொள்கிறார்கள். பெற்றவர்களாவது சட்டையைப் பிடித்தால் அதற்கு எதிராக துண்டறிக்கை விடுகிறார்கள். ஆனால் ஒருவிதத்தில் சந்தோஷமாக இருக்கிறது. ‘முழுமையான திருப்தி கிடைத்தால் மட்டுமே இந்த ஆண்டுக்கான கட்டணத்தைக் கட்டினால் போதும் அதுவும் மார்ச் 2016 ஆம் ஆண்டு கட்டினால் போதும்’ என்கிற அளவில் இந்தப் பள்ளியினர் இறங்கி வந்திருக்கிறார்கள். அதையும் இந்தத் துண்டறிக்கையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த ஒரு பள்ளி மட்டும்தான் மோசம் என்று சொல்லவில்லை. ஆனால் இப்படித்தான் பெரும்பாலான பள்ளிகள் இருக்கின்றன. நம் தேசத்தின் கல்வித்தரம், பள்ளிகளில் நடக்கும் பகல் கொள்ளை போன்றவை குறித்தான குறைந்தபட்ச விழிப்புணர்வு ஏற்படுவதே கூட கொண்டாட்டத்திற்கான மனநிலையை உருவாக்குகிறது. இந்தத் துண்டறிக்கையையும் அப்படியொரு கொண்டாட்டத்தை உருவாக்கக் கூடிய அறிக்கைதான்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive