மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல்
விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில்
ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர்.
முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ,
மாணவியரை, தயவு, தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கி
உள்ளனர். மாணவர்கள், 'பிட்' அடிப்பதை, அறை கண்காணிப்பாளர்
பார்த்துவிட்டால், 'பிட்'டை பறித்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலம்
கருதி, தொடர்ந்து தேர்வெழுத அனுமதிப்பர். பறக்கும் படை குழுவினரிடம்
பிடிபடும் மாணவர்கள், உடனே, தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்;
இதுபோன்ற நிலைமை, கடந்த
ஆண்டு வரை இருந்தது. இந்த ஆண்டு, ஓசூரில், பிளஸ் 2 கணித வினாத்தாள்
முறைகேட்டிற்கு பின், வரிசையாக, பல முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்ததை
அடுத்து, தேர்வுத் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 'பிட்' அடிக்கும்
மாணவரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்காத ஆசிரியர், 'சஸ்பெண்ட்'
செய்யப்படுவார் என அறிவித்து, இதுவரை, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்'
செய்துவிட்டனர். அறிவித்தபடி, கல்வித் துறை நடவடிக்கை எடுப்பதால், தேர்வுப்
பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் கலக்கமும், பீதியும் அடைந்து உள்ளனர்.
'சஸ்பெண்ட்' நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மாணவ, மாணவியர் மீதான பிடியை
இறுக்க துவங்கி உள்ளனர். அலட்சிய போக்கை கைவிட்டு, தேர்வு துவங்கும் முன்,
மாணவர்களை தீவிரமாக சோதனை செய்கின்றனர். மேலும், தேர்வு முடியும் வரை,
கண்கொத்தி பாம்பாக, ஒவ்வொரு மாணவரையும், தீவிரமாக கண்காணிக்க துவங்கி
உள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது, தயவு, தாட்சண்யம் இன்றி,
உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால், தேர்வு முறைகேடுகளில் சிக்கும்
மாணவ, மாணவியர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, சில ஆசிரியர் கூறியதாவது:
கடந்த காலங்களில், பறக்கும் படையினரிடம்
பிடிபட்டால் மட்டுமே உண்டு என்ற நிலை இருந்தது. இதனால், பல தனியார்
மையங்களில், 'கேட்' அருகில், நீண்ட நேரம் பறக்கும் படையினரை காக்க வைத்த
நிலையும் இருந்தது. இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், தனியார் தேர்வு
மையங்களில் மட்டுமின்றி, அனைத்து ஆசிரியர்களிடையேயும் அலட்சிய போக்கை
அகற்றி, தேர்வு குறித்த பொறுப்புணர்வை அதிகப்படுத்தி உள்ளது. இந்த
கெடுபிடியை, வரும் காலங்களிலும் தொடர்ந்து பின்பற்ற, தேர்வுத் துறை முன்வர
வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...