பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வரும் நிலையில்,
நடைமுறைகளை அடிக்கடி மாற்றுவதால், பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதாக,
தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வுகள்
கடந்த 5ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. முறைகேடுகளை
தவிர்க்கும் நோக்கில், அரசுத் தேர்வுத்துறை, பல்வேறு நடைமுறைகளை புதிதாக
புகுத்தியுள்ளது. புதிய நடைமுறைகள் குறித்து, தேர்வு பணியாளர்களுக்கு
அந்தந்த மாவட்டங்களில் தேர்வுகள் துவங்குவதற்கு முன்பே, பயிற்சிகள்
வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடன், விடைத்தாளில்,
பயன்படுத்தாத பக்கங்கள் இருந்தால், மாணவர்கள், பயன்படுத்தாத பக்கம் என்னால்
அடிக்கப்பட்டது என்ற குறிப்புரையை எழுதவேண்டிய அவசியமில்லை என
அரசுத்தேர்வுத்துறை, தற்போது திடீரென அறிவுறுத்தியுள்ளது.
தேர்வு நடக்கும் சமயங்களில், புதிய
அறிவுறுத்தல்களை திடீரென வெளியிடுவதால், அதில் தவறுகள் நடக்க வாய்ப்புகள்
உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோரின் விவரம்,
தேர்வு வருகை புரியாதோரின் விவரங்களை விடைத்தாள்களுடன் தனித்தனி
உறையிலிட்டு ஒட்டி, துணி உறையில் வைக்க வேண்டும் என, ஏற்கனவே
அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது, தனித்தனி உறையிலிட்டு ஒட்டவும், துணி
உறையில் போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அனைத்து விடைத்தாள்களையும் பெற்ற
பின்பே, அறை கண்காணிப்பாளர் தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு செல்ல வேண்டும்
என்ற உத்தரவை மாற்றி, தேர்வு நேரம் முடிந்தவுடன் தேர்வு கட்டுப்பாட்டு
அறைக்கு செல்லவும்; கூடுதல் நேரம் பெற்று தேர்வெழுதும் மாணவர்களின்
விடைத்தாள்களை மைய நிலை படை உறுப்பினர்கள் பெற்று தேர்வு கட்டுப்பாட்டு
அறையில் ஒப்படைக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு பணி அலுவலர் ஒருவர் கூறுகையில், "தேர்வு
நடக்கும் சமயங்களில், திடீரென்று மாற்று அறிவிப்புகள் வருகின்றன. இதனால்,
சில குழப்பங்கள் ஏற்படுகின்றன.
உதாரணமாக, முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை
அதிகாரிகள் விடைத்தாள் கட்டுகளின் துணி உறையின் மீது, கையெழுத்திட்டு
தேர்வு மையத்தின் முத்திரையிடவேண்டும் என கூறப்பட்டு, திடீரென்று
கையெழுத்திட்டு, தாங்கள் பணிபுரியும் பள்ளியின் பெயரை முத்திரையிடவேண்டும்
என கூறுகின்றனர். நடைமுறைகளை அடிக்கடி மாற்றுவது மற்றும் புதிய நடைமுறைகளை
தேர்வு சமயங்களில் புகுத்துவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...