மாணவர்களின் புரிதலைச் சோதிக்கும் வகையில், தேர்வுகளில் நடைமுறை மாற்றத்தைக் கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அதற்காக கேள்வித் தாள், காப்பி அடிப்பவர்களுக்கான தண்டனை நடைமுறைகள் ஆகியவற்றிலும் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இம்மாதம் நடைபெற உள்ள பல்கலைக்கழக
ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, வருகிற
2015-16 கல்வியாண்டு முதல் இந்தப் புதிய நடைமுறை அமலுக்குக் கொண்டுவரப்பட
உள்ளது.
தமிழகத்தில் 500-க்கும் அதிகமான பொறியியல்,
தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்
இணைப்பு பெற்று இயங்கி வரும் இந்தக் கல்லூரிகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும்
2.5 லட்சத்துக்கும் அதிமான பொறியாளர்கள் உருவாகி வெளி வருகின்றனர்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு
வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணா
பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கும்
மாணவர்களுக்குக் கூட வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்கின்றனர்
பேராசிரியர்கள். பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வளாகத்
தேர்வில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கவில்லை. அதிலும் தமிழ்
வழி பொறியியல் படிப்புகளை முடித்து வெளிவந்த முதல் பேட்ச் மாணவர்கள்
ஒருவருக்குக் கூட வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில், மாணவர்களின் திறனை
மேம்படுத்தவும், பொறியியல் நுட்பங்களைப் புரிதலுடன் தெரிந்து கொள்ளும்
வகையிலும் தேர்வு நடைமுறைகளில் அதிரடி மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழகம்
முடிவு செய்துள்ளது.
இதற்காக பல்கலைக்கழக தேர்வுக்
கட்டுப்பாட்டாளர், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் அடங்கிய 9 பேர் குழுவை
பல்கலைக்கழகம் அமைத்தது. இந்தக் குழு புதிய தேர்வு நடைமுறையை இப்போது
உருவாக்கியிருக்கிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது:
தேர்வில் நேரடியாக பதிலளிக்கக் கூடிய
கேள்விகளாக அல்லாமல், மாணவர்களின் புரிதலை சோதிக்கக் கூடிய வகையில்
கேள்விகளை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல, தேர்வுத் தாள் திருத்தும் நடைமுறையிலும் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுகளில் காப்பி அடிக்கும்
மாணவர்களுக்கான தண்டனைகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளன. அதாவது எந்தெந்த
தவறுக்கு என்னென்ன தண்டனைகள் என்பது தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில்
மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, மார்ச் மாதம் நடைபெற உள்ள
ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பிற உறுப்பினர்களின்
கருத்துகளும் கேட்கப்படும். அதனடிப்படையில், மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு,
ஒப்புதலுக்குப் பின்னர் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
மாணவர்களின் புரிதலை சோதிக்கக் கூடிய
வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவது வரவேற்கத்தக்க விஷயம்.
ஆனால், இதை இப்போது படித்துவரும் மாணவர்களுக்கே நடைமுறைப்படுத்தினால்,
அதிகமானோர் தேர்வில் தோல்வியடைய வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற புதிய நடைமுறை
அறிமுகம் செய்வதற்கு முன்னர், பேராசிரியர்களுக்கு முழுமையான பயிற்சியை
அளிப்பது அவசியம். ஏனெனில், பாதிக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒன்றிரண்டு
விளக்க புத்தகங்களை வைத்துக்கொண்டே பாடங்களை நடத்தி முடித்து
விடுகின்றனர்.
எனவே, பேராசிரியர்களின் திறனை அவ்வப்போது
சோதிக்கக் கூடிய வகையில் நடைமுறைகள் கொண்டுவந்தால், திறன் மிக்க மாணவர்கள்
உருவாவதும் சாத்தியமாகும் என்றார்.
இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரி
மூத்த பேராசிரியர் அசோக்குமார் கூறியபோது, பொறியியல் தொழில்நுட்பப்
படிப்புகளைப் பொருத்தவரை செய்முறை, பயிற்சித் திட்டங்களே மிக முக்கியம்.
ஆனால், பல கல்வி நிறுவனங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட கல்லூரிகளை
நடத்துகின்றன. ஆனால், அத்தனை கல்லூரிகளுக்கும் ஒரே ஆய்வகத்தையே வைத்துள்ளன.
மேலும், இந்த ஆய்வகத் தேர்வையும், அந்தந்த
கல்லூரிகளில் நடத்தப்படும் உள் தேர்வுகளையும் (இன்டர்னல்) கண்காணிக்க
முறையான நடைமுறை இதுவரை கிடையாது.
ஏனெனில், பல்கலைக்கழகத் தேர்வுகளில்
தோல்வியடையும் மாணவர்களுக்கக் கூட இந்த ஆய்வகத் தேர்விலும், இன்டர்னல்
தேர்விலும் முழு மதிப்பெண்கள் போடப்படுகின்றன என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...