போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில்,
தடையில்லா சான்று தர அதிகாரிகள் இழுத்தடிப்பதால் போலீசார் விண்ணப்பிக்க
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு
விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 10. போலீஸ் துறையை சேர்ந்தவர்கள் 20 சதவீத
இடஒதுக்கீடு அடிப்படையில் சேர முடியும். தேர்வில் பங்கேற்க அதிகாரிகளின்
தடையில்லா சான்று அவசியம்.இச்சான்று கேட்டு நூற்றுக்கணக்கான போலீசார்
அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பித்துள்ளனர். பல மாவட்டங்களில் சான்று
தரப்பட்டுள்ள நிலையில், மதுரை நகர் மற்றும் சில மாவட்டங்களில் சான்று
தராமல் இழுத்தடிப்பதாக போலீசார் குமுறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் எந்த ஒரு துறை ரீதியான நடவடிக்கைக்கும்
ஆளாகாமல் இருந்தால் எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையம்
விதி கூறுகிறது. மேலும் நடவடிக்கைக்கு ஆளாகி இருந்தால் குறிப்பிட்ட
ஆண்டுகளுக்கு பிறகு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்
அடிப்படையில் எங்களில் சிலர் கடந்த 2010ல் நடந்த எஸ்.ஐ., தேர்வில்
பங்கேற்றோம்.ஆனால் தற்போது, நடவடிக்கைக்கு ஆளாகி இருந்தாலே விண்ணப்பிக்க
தகுதி கிடையாது என அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். இதுகுறித்து
தேர்வாணையத்தை தொடர்பு கொண்டபோது, 'விதிகளில் எந்த மாற்றமும்
செய்யப்படவில்லை' என்கின்றனர். விதிகள் தெரியாமல் அதிகாரிகள்
இழுத்தடிக்கின்றனர்.
எங்கள் விண்ணப்பத்தை தற்போது நிராகரித்தால் நாங்கள் கோர்ட்டிற்கு
சென்றுவிடுவோம் என்பதால், மார்ச் 9 வரை இழுத்தடித்து அன்று மாலை நிராகரிக்க
முடிவு செய்துள்ளனர். அப்போதுதான் எங்களால் தேர்வுக்கும் விண்ணப்பிக்க
முடியாது; கோர்ட்டிற்கும் செல்ல முடியாது என அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதுகுறித்து அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...