பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் உருவாக்கும் 9 செயற்கைக்கோள்களை
விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
தெரிவித்தார்.
சேலம் அயோத்தியாப்பட்டிணத்தில் உள்ள ஒரு தனியார்
பள்ளியில், புதிய நிர்வாக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. இதில்,
இஸ்ரோ மாணவர் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனரான விஞ்ஞானி மயில்சாமி
அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் படிக்கும்
போதே, அனைத்து துறைகளிலும் முழுமையான திறன் பெற்றவர்களாக வெளி
வருவார்கள். இது போன்ற சிறந்த மாணவர்களை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி
மையத்திற்கு பயன்படுத்தி கொள்கிறோம். மாணவர் செயற்கைகோள் திட்டத்தின்
மூலம், தமிழகம் மட்டுமின்றி, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற
மாநிலங்களிலும், உலகளாவிய நாடுகளிலும் உள்ள மாணவர்களுடன் இணைப்பை
ஏற்படுத்தி தர முடியும். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தங்களின்
செயற்கைக்கோள் திட்ட வரைவுகளை அளித்தால், அதை விண்ணில் ஏவ உதவி செய்வதே
இத்திட்டத்தின் நோக்கம்.
மேலும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் மாணவர்கள் கலந்து கொண்டு
பேசுவதற்கான வாய்ப்பாகவும் அமையும். இதுவரை அண்ணா பல்கலைக்கழகம், கரக்பூர்
ஐஐடி தலா ஒரு செயற்கைகோள், ஆந்திரா - கர்நாடகா பல்கலை.கள் இணைந்து ஒரு
செயற்கைகோள் என மூன்று செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. தற்போது
பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இணைந்து, 8 முதல் 9
செயற்கைக்கோள்களை ஏவ திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகள்
மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...