தமிழகம் முழுவதும், "ஜாக்டோ' அமைப்பின்
சார்பில், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி மற்றும்
ஆர்ப்பாட்டம், இன்று நடக்கும் நிலையில், மேற்கண்ட அமைப்புக்கு போட்டியாக,
"ஜாக்டா' அமைப்பு தனித்து செயல்படுவதால், ஆசிரியர் சங்கங்கள்
அதிர்ச்சியடைந்துள்ளன.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு
நடவடிக்கை குழுவின் (ஜாக்டோ) கட்டுப்பாட்டில், 21 ஆசிரியர் சங்க
அமைப்புகள் இணைந்துள்ளன. மேற்கண்ட அமைப்பின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை
நிறைவேற்றக்கோரி, மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி, ஆறாவது ஊதியக்குழுவின்படி, மத்திய
அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை, மாநில அரசு ஆசிரியருக்கு
வழங்க வேண்டும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011ம் ஆண்டு சட்டசபை
தேர்தலில், தன்பங்களிப்பு ஓய்வு ஊதியத்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கடந்த, 1986-88ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில்
நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், 2004 -06ம் ஆண்டு வரை, தொகுப்பூதிய
அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் ஆகியோருக்கு, பணியில் சேர்ந்த
நாள் முதல், பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தொழிற்கல்வி ஆசிரியருக்கு, 50 சதவீதம் பணிக்காலத்தை ஓய்வு ஊதியத்திற்கு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 30 ஆண்டாக
எவ்வித பதவி உயர்வும் பெறாமல் இருக்கும் ஆசிரியருக்கு தேர்வு நிலை, சிறப்பு
நிலை வழங்குவதுபோல, ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உடற்கல்வி
ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை, ஒன்று என்ற பதவியை உருவாக்க
வேண்டும். ஒவ்வொரு பதவி உயர்வுக்கும், ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும்.
பள்ளிகளில் சமீபகாலமாக, விரும்பத்தகாத
சம்பவங்கள், ஆசிரியருக்கு எதிராக நடக்கிறது. எனவே, மருத்துவருக்கு பணியில்
பாதுகாப்பு வழங்கப்படுவதுபோல், ஆசிரியருக்கும் பணி பாதுகாப்பு சட்டம்
வகுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று
(மார்ச், 8), அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கண்டன பேரணி மற்றும்
ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இருந்தும், "ஜாக்டோ' அமைப்புக்கு எதிராக,
"ஜாக்டா' (தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு)
அமைப்பின் சார்பில், சில தினங்களுக்கு முன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு
சென்று கோரிக்கை மனு அளித்தது. இதனால், ஆசிரியர் சங்கங்களின் ஒரு
பகுதியினர், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிப்பதில்லை என உறுதி
செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது: தமிழகம்
முழுவதும், இரண்டு லட்சம் ஆசிரியர்கள், திட்டமிட்டப்படி பேரணி மற்றும்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எங்களது கூட்டு நடவடிக்கைக்
குழுவுக்கு, 21 ஆசிரியர் சங்கங்கள் இணைந்திருந்தாலும், மேலும், ஐந்து
சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றன.
"ஜாக்டோ' அமைப்பின் கோரிக்கையை, அப்படியே,
"ஜாக்டா' அமைப்பினரிடம் மனுவாக கொடுத்துள்ளனர். நாங்கள் அவர்களை,
ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கவில்லை. எங்களது ஆர்ப்பாட்டத்தை திசை
திருப்பவதற்காக, தனிப்பிரிவு அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டதாக
அறிகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...