பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி நேற்று தொடங்கியது. மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கியது. தேர்வு ஏப்ரல் 19-ந்தேதி முடிவடைகிறது. மாணவ-மாணவிகளின் நலன் கருதி விடைத்தாளை விரைவாக மதிப்பீடு செய்து, அதே நேரத்தில் எந்தவித பிரச்சினையும் இன்றி, சரியான முறையில் தேர்வு முடிவை வெளியிடவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசு தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் நேற்று 70 மையங்களில் தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணியை நேற்று அதிகாரிகள் தொடங்கினார்கள். ஒட்டுமொத்த பணியை அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் கண்காணித்து வருகிறார்.
சென்னையில் 4 இடங்களில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கப்பட்டது. முதன்மை கல்வி அதிகாரி அனிதா மேற்பார்வையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. அதே போல மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மேற்பார்வையில் திருத்தும் பணி தொடங்கியது. விடைத்தாள்களை திருத்தும் போது இந்தாண்டு பல புதிய முறைகளை கடைபிடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பொறுப்பு
விடைத்தாள்களில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வழக்கம் போல் இடதுபுறம் குறிக்காமல் வலதுபுறமாக குறிக்க வேண்டும். அதற்கு என தனியாக இடம் விடைத்தாள்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் அலுவலரிடம் இருந்து முதன்மை தேர்வர்கள் விடைத்தாள் கட்டுகளை பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புகையினை சரிபார்த்து அளித்தல் வேண்டும்.
உதவித்தேர்வர்கள் விடைத்தாள் உறைகளை பெற்ற உடன் விடைத்தாள்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதையும், விடைத்தாள்கள் ஒவ்வொன்றின் அனைத்து பக்கங்களும் உள்ளனவா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் முதன்மை தேர்வாளரின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு உதவித்தேர்வாளரே (ஆசிரியர்கள்) முழுப்பொறுப்பேற்க நேரிடும்.
திருத்தப்பட்ட விடைத்தாளுக்குரிய மதிப்பெண்கள் முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் அதற்குரிய கட்டத்தில் பதியப்பட்டுள்ளதா என்பதை விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கூர்ந்தாய்வு அலுவலர் விடைத்தாள் களை கூர்ந்தாய்வு செய்ய மட்டுமே வேண்டும். அவர் உதவித் தேர்வாளர் அளித்த மதிப்பெண் களை குறைப்பதற்கோ அல்லது மாற்றி அமைப்பதற்கோ அதிகாரம் இல்லை. மதிப்பெண் குறைந்தாலோ அல்லது அதிமானாலோ முதன்மை தேர்வாளரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
விடைத்தாளின் முதல் பக்கத்தில் வலது கை மேல்புறத்தில் உதவி தேர்வாளர், கூர்ந்தாய்வு அலுவலர், முதன்மை தேர்வாளர் கையொப்பம் இட வேண்டும். விடைத்தாளில் காணப்படும் கூட்டலில் பிழை இருந்தாலோ, மதிப்பீடு செய்யப்படாமல் விடை இருந்தாலோ அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட விடையின் மதிப்பெண் பதியப்படாமல் இருந்தாலோ கூர்ந்தாய்வு (ஆசிரியர்கள்) அலுவலரே முழு பொறுப்பேற்க வேண்டும்.
மதிப்பெண்கள்
விடைத்தாளின் ‘‘பி’’ பகுதியில் மொத்த மதிப்பெண்கள் எண்ணாலும், எழுத்தாலும் எழுதப்பட வேண்டும். இந்த மதிப்பெண்களை விடைத்தாள் முகாம் அலுவலர் அன்றே கம்ப்யூட்டரில் பதிவு செய்து தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...