கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 கணித வினாத் தாளை
அனுப்பிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களை போலீஸார்
காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார்
பள்ளித் தேர்வு மையத்தில் தேர்வறை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த ஆசிரியர்,
கணித வினாத் தாளை தனது செல்லிடப்பேசியில் படமெடுத்து கட்செவி அஞ்சல் மூலம்
சக ஆசிரியர்களுக்கு அனுப்பினார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு
போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன்,
உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைதான 4 பேரையும் இரண்டு
நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸாருக்கு ஒசூர்
நீதிமன்றம் கடந்த 24-ஆம் தேதி அனுமதி அளித்தது.
இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் வியாழக்கிழமை கூறியதாவது:
கைதான 4 ஆசிரியர்களையும் போலீஸ் காவலில்
எடுத்து விசாரணை நடத்தியதில், அவர்களிடம் இருந்து சில முக்கியத் தகவல்கள்
கிடைத்துள்ளன. மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட
செல்லிடப்பேசிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு, அதன் பிறகு கிடைக்கும்
அறிக்கையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இரண்டு
நாள்கள் போலீஸ் விசாரணை முடிந்ததையடுத்து, கைதான 4 ஆசிரியர்களும், ஒசூர்
குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-இல் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை
மீண்டும் சிறையில் அடைக்க நீதித் துறை நடுவர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...