தமிழக அரசுத் தேர்வுத் துறையின் அதிரடி மாற்றங்களுடன், பிளஸ் 2 தேர்வு, மாநிலம்
முழுவதும் நேற்று துவங்கியது.
முதல் நாளில், தமிழ் முதல் தாள் வினா மிக
எளிதாக இருந்தது என்று மாணவ, மாணவியர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.பிளஸ் 2
தேர்வில், அரசு தேர்வுத் துறை, இந்த ஆண்டு பல மாற்றங்களை கொண்டு வந்தது.
மாற்றங்களை தவறு இன்றி அமல்படுத்த, ஆசிரியர்களுக்கு 'பவர் பாயின்ட்
பிரசன்டேஷன்' முறையில் சிறப்புப் பயிற்சி வகுப்பும், தேர்வு நடத்துவது
குறித்து, ஆசிரியர்களுக்குத் தேர்வும் வைக்கப்பட்டது.
முதல் இரு நாட்களுக்கான வினாத்தாள் உறை, தேர்வு மையங்களுக்கு, காலை 8:00
மணிக்கு முன், ரகசிய முத்திரையுடன், 'சீல்' பிரிக்காமல், போலீஸ்
பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன; அவை, போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு
மையத்தில் பூட்டி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு நேற்று துவங்கியது.காலை 9:00 மணிக்கு,
கண்காணிப்பாளர்கள் வந்ததும், அவர்கள் முன்னிலையில் தலைமைக் கண்காணிப்பாளர்
உறைகளை பிரித்து, ஒவ்வொரு அறைக்கும், 20 வினா, விடைத்தாள், புகைப்படத்துடன்
கூடிய, 'ஹால் டிக்கெட்' மற்றும் பரிசோதனைச் சீட்டை அளித்தார்.
காலை 9:45 மணிக்கு, மாணவர்கள் அறைக்குள் சோதித்து அனுப்பப்பட்டனர்.
கறுப்பு, நீல பேனா, ஸ்கேல், சாதாரண பென்சில் மற்றும் தண்ணீர் பாட்டில்
அனுமதிக்கப்பட்டன. மாணவர்கள், தங்கள் உடைமைகள் மற்றும் காலணிகளை,
தேர்வறைக்கு வெளியே விட உத்தரவிடப்பட்டது.
பின், கட்டுப்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு, கண்காணிப்பாளர்
அறிவுறுத்தினார். மாணவர்களை சாட்சியாக வைத்து, இரு மாணவர்களிடம் கையொப்பம்
பெற்று, வினாத்தாள்கள், 'சீல்' உடைக்கப்பட்டு வழங்கப்பட்டன.மாணவர்கள்
வினாத்தாளை படித்துப் பார்க்க, 10 நிமிடங்கள் தரப்பட்டு, 10:00 மணி முதல்
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
அம்மை நோய் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தேர்வு
அறையில் தனி பெஞ்சில் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். பின், பிற்பகல் 1:15
மணிக்கு, அனைவரிடமும் விடைத்தாள்கள் பெறப்பட்டன.நேற்றைய தேர்வில், தமிழகம்
மற்றும் புதுச்சேரியில், 8 லட்சத்து, 86 ஆயிரத்து 27 பேர் பதிவு
செய்திருந்தனர். இதில் ஒரு சிலரை தவிர, பெரும்பான்மையானோர் பங்கேற்றனர்.
சென்னையில் இரு தனித்தேர்வர், மதுரை யில் ஒரு தனித்தேர்வர், கடலுாரில் இரு
தனித்தேர்வர் காப்பியடித்துப் பிடிபட்டதாக, அரசுத் தேர்வுத் துறைஇயக்குனர்
தேவராஜன்தெரிவித்தார்.
வினாத்தாள் 'ஈசி': மாணவ, மாணவியர் 'குஷி': நேற்று நடந்த தமிழ் முதல் தாள்
தேர்வில், எட்டு பக்கங்கள் அடங்கிய வினாத்தாளில், ஏழு பக்கங்களில், 100
மதிப்பெண்களுக்கு, 10 பிரிவுகளில், மொத்தம், 50 வினாக்கள்
இடம்பெற்றிருந்தன. இதில் ஐந்து வரிகள், 10 மற்றும் 20 வரிகளில் விடை
எழுதுதல், இலக்கணக் குறிப்பு எழுதுதல், பொருத்துதல், விடைகளைத்
தேர்ந்தெடுத்தல் போன்ற பிரிவுகள் இடம் பெற்றன.வினாக்களில், 'பிரபந்தம்'
எனும் வடசொல் உணர்த்தும் பொருள்; வட மொழியில் பாரதம் பாடியவர்; கண்ணகியின்
சூளுரையும், நகர மாந்தர் மயங்கிய விதமும்; அறிவுடைமை அதிகாரத்தின்
கருத்துகள்; கண்டனென்... எனத் துவங்கும் கம்பராமாயணப் பாடலின் பாவகை
உள்ளிட்டவை குறித்து, வினாக்கள் இடம்பெற்றிருந்தன.'வினாத்தாள் ரொம்ப
எளிமையாக இருந்தது; அனைத்துக் கேள்விகளும் விடை தெரிந்ததாக இருந்தன' என,
மாணவ, மாணவியர், 'குஷி'யாகத் தெரிவித்தனர்.
அவர்களின் கருத்துக்கள்:
= லாவண்யா, மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி, சென்னை, எழும்பூர்: வினாத்தாள் ரொம்ப ரொம்ப ஈசி; நன்றாக எழுதினோம்.
= ஆசியா, கிரசன்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சென்னை, நுங்கம்பாக்கம்: ரொம்ப சூப்பர்ப்; வினாத்தாள் ஈசியாக இருந்தது.
= ராஜசுதா, மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி, சென்னை, எழும்பூர்:
புத்தகத்திலுள்ள கேள்விகள் தான் வந்தன; அனைத்துக் கேள்விகளும் தெரிந்த
விடைகளாக இருந்தன.
= நேரு, அரசு அம்பேத்கர் மேல்நிலைப் பள்ளி, சென்னை, பெரியமேடு: இதேபோன்று
எல்லாத் தேர்வுகளும் இருந்தால், ஈசியாக மாநில 'ரேங்க்' பெறுவோம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
நாற்காலி இல்லாமல் ஆசிரியர்கள் தவிப்பு:
பிளஸ் 2 தேர்வில், ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதில் முக்கியக் கட்டுப்பாடாக, 'தேர்வு அறைகளில், கண்காணிப்பாளராக செல்லும்
ஆசிரியர் அமர, நாற்காலி போட வேண்டாம்' என, வாய்மொழி உத்தரவு போடப்பட்டது.
இதுகுறித்து, 'நமது' நாளிதழில், கடந்த 1ம் தேதி, செய்தி வெளியானது. பின்,
பள்ளிக்கல்வி மற்றும் அரசுத்தேர்வுகள் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி,
நிற்க இயலாதவர்களுக்கு நாற்காலி வழங்க அனுமதித்தனர்.
நேற்று பெரும்பாலான தேர்வு அறைகளில், கண்காணிப்பாளர்களுக்கு நாற்காலி
போடவில்லை; வினாத்தாள், விடைத்தாள் போன்றவை வைக்க, மேஜை மட்டும் இருந்தது.
இதனால், காலை 9:45 மணி முதல், பிற்பகல் 1:15 மணி வரை, ஆசிரியர்கள் நின்று
கொண்டும், அறையில் உலாவிக் கொண்டும் இருந்தனர். சென்னை, எழும்பூரில் உள்ள
மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், இரு ஆசிரியர்கள், சர்க்கரை நோய்
பாதிப்பு இருந்ததால், நாற்காலி கேட்டு வாங்கிக் கொண்டனர். பெரும்பாலான
மையங்களில், இயலாத ஆசிரியர்கள் தங்களுக்கு நாற்காலி கேட்டு வாங்கினர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கப்
பொதுச் செயலர், சத்தியமூர்த்தி கூறுகையில், '' தேர்வு அறையில் நாற்காலி
இல்லை என்ற கெடுபிடி, வருத்தமானது; இதற்கு, எழுத்து மூலம் உத்தரவு இல்லை;
தேர்வுத் துறை தெளிவான வழிகாட்டுதல் தர வேண்டும்; இல்லை யென்றால், தேர்வுப்
பணிக்கு வரஆசிரியர்கள் தயங்குவர்,'' என்றார்.
12 முறை மணியோசை
பிளஸ் 2 தேர்வில், 12 முறை மணி அடித்து, மாணவ, மாணவியருக்கு எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு
செய்யப்பட்டன. ஒருமுறை மணி அடித்தால் என்ன அர்த்தம் என்று, தேர்வு மையத்தில் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது.
அதன் விவரம்:
9:45 தேர்வர்கள் அறைக்குள் செல்லலாம்
9:55 மாணவர் முன்னிலையில் வினாத்தாள் உறை பிரிப்பு
10:00 வினாத்தாள் வழங்கலாம்
10:10 விடைத்தாள் வழங்கலாம்
10:15 தேர்வு எழுத துவங்கலாம்
1:10 தேர்வு முடிவதை எச்சரித்தல்
1:15 தேர்வு முடிந்தது; விடைத்தாளை
ஒப்படைக்கலாம்
சிறையில் தேர்வு:
சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில், பிளஸ் 2 தேர்வுக்கான சிறப்பு தேர்வு
மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள
விசாரணை, தண்டனை மற்றும் பெண் கைதிகள் உட்பட மொத்தம் 81 பேர் பிளஸ் 2
தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இறுதியில், நேற்று 58 பேர் மட்டும்
தேர்வெழுதினர். மற்றவர்கள் ஜாமினில் விடுதலையாகி விட்டதாக, சிறைத்துறை
அதிகாரி ஒருவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...