உலகில் அழிந்ததாக கருதப்பட்ட 2 தாவர இனங்கள் மூணாறு, குற்றால மலைகளில் கண்டறியப்பட்டுள்ளன. காசிதும்பை வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. இதில் "இன்பேசியியன் மூணாரென்சிஸ்,' "இன்பேசியியன் கூக்ரியானா' ஆகிய 2 தாவரங்கள் அழிந்ததாக கருதப்பட்டன.
"இன்பேசியியன் மூணாரென்சிஸ்' மூணாறை பூர்வீகமாக கொண்டது. நீர்நிலைகளில் மட்டும் காணப்படும். இவை 30 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரும். ஊதா நிறத்தில் பூக்கும். ஒவ்வொரு பூவும் 3 செ.மீ., இருக்கும். பூக்களை வண்டுகள் உணவாக உட்கொள்ளும். காயில் 4 முதல் 6 விதைகள் மட்டுமே உருவாவதால் அரிதான தாவரமாக கருதப்படுகிறது. "இன்பேசியியன் கூக்ரியானா' இலங்கையை பூர்வீகமாக கொண்டது.நீர் செல்லும் மலை இடுக்குகளில் ஒரு மீட்டர் வரை வளரும். மான், காட்டுப்பன்றி, அணில் போன்ற வனவிலங்குகளுக்கு உணவாக பயன்படும். பூ 10 செ.மீ., நீளம், ஊதா நிறத்தில் இருக்கும். காய்களில் ஏராளமான விதை உருவாகும். முளைப்புத்திறன் குறைவு.
இன்பேசியியன் மூணாரென்சிஸ்' தாவரம் தேனி மாவட்டம் மேகமலை ஹைவேவிஸ் பகுதியிலும், "இன்பேசியியன் கூக்ரியானா' தாவரம் குற்றாலத்திலும் இருப்பதை காந்திகிராம பல்கலை உயிரியல் உதவி பேராசிரியர் ஆர்.ராமசுப்பு கண்டறிந்துள்ளார்.
பேராசிரியர் ராமசுப்பு கூறுகையில், ""ஒரு தாவரம் குறித்து 50 ஆண்டுகள் வரை எந்த தகவலும் இல்லாவிட்டால் அழிந்ததாக கருதப்படும். "இன்பேசியியன் மூணாரென்சிஸ்' தாவரம் 550, "இன்பேசியியன் கூக்ரியானா' தாவரம் 1040 மட்டுமே உள்ளன. அவற்றை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...