பிளஸ்–2 தேர்வு இன்று (வியாழக்கிழமை)
தொடங்குவதையொட்டி தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களில்
மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பெரிய அளவில்
சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 80 ஆயிரம் பேர்
ஈடுபடுகிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2
தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 31–ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை
8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேர் எழுதுகிறார்கள்.
இதற்காக 2 ஆயிரத்து 377 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அனைத்தும் பள்ளிக்கூடங்களில்தான்
அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு இன்று தொடங்குவதையொட்டி முன் ஏற்பாடுகளை கவனிக்க
அனைத்து பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி
அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்கள்
மற்றும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட 80 ஆயிரம் பேர்
ஈடுபட்டுள்ளனர்.
நேற்று தேர்வு மையங்களில் உள்ள பெஞ்சுகள்
வரிசையாக போடப்பட்டு அந்த பெஞ்சுகளில் மீது மாணவர்களின் தேர்வு பதிவு எண்
சாக்பீஸ் கொண்டு எழுதப்பட்டது.
சுவரொட்டி
மேலும் மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது
என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட
வேண்டாம் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகளை ஏற்கனவே அரசு தேர்வுகள்
இயக்குனரகம், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு
பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றின் சார்பில் அச்சடிக்கப்பட்டு தேர்வு
மையங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த சுவரொட்டியில் கூறப்பட்டு இருப்பதாவது:–
பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வர்கள், தனித்தேர்வர்கள் கவனத்திற்கு, தேர்வறையில் அனைத்து மாணவர்களும்
சோதனை செய்யப்படுவார்கள். தேர்வறையில் அனுமதிக்காத துண்டுத்தாள்,
செல்போன், முதலியவை வைத்திருத்தல், வினாத்தாள், விடைத்தாள் பரிமாற்றம்
செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் ஓராண்டு முதல்
5 ஆண்டுகள் வரை அல்லது நிரந்தரமாக தொடர்ந்து படிக்கத்தடை, தேர்வெழுத தடை,
மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து செய்தல், நிறுத்தம் செய்தல் போன்ற
தண்டனைகளுக்குள்ளாக நேரிடும். இதன் காரணமாக எதிர்காலமே பாதிக்கப்படலாம்.
எனவே தேர்வில் முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடவேண்டாம்.
இவ்வாறு அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...