எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 வகுப்பு
பொதுதேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறமையான எழுத்தர்களை
நியமிக்க கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு,
ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பார்வையற்ற
மாற்றுத் திறனாளி சி.கோவிந்தகிருஷ்ணன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல்
செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
பள்ளி மாணவர்களுக்கு 10–ம் வகுப்பு மற்றும்
பிளஸ்–2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மிகவும் முக்கியமான தேர்வுகளாகும். இந்த
தேர்வுகளை பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள், எழுத்தர்கள் உதவியுடன்
எழுதுகின்றனர். அந்த எழுத்தர்கள், வினாத்தாள்களில் உள்ள வினாவை வாசித்து
காட்டி, மாணவர்கள் சொல்லும் விடையை எழுதுவார்கள். இதற்காக பார்வையற்ற
மாணவர்களுக்கு தேர்வுகளின் போது அதிக நேரம் வழங்கப்படுகிறது.
திறமையான எழுத்தர்கள்
அறிவியல், கணிதம் ஆகிய தேர்வுகளில்
அடையாளங்கள், குறியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படும். இதில், கைத்தேர்ந்த
திறமையான எழுத்தர்களை பயன்படுத்தினால் மட்டுமே தேர்வை விரைவாக எழுத
முடியும். மேலும், தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழித் தேர்வுகளில், அந்த
மொழி குறித்த அறிவும், அடிப்படை வார்த்தைகளும் எழுத்தர்களுக்கு
தெரிந்திருக்க வேண்டும்.
பார்வையற்ற மாணவர்களால் ஒவ்வொரு
வார்த்தைக்கும், அடையாளங்களையும் ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் விவரிக்க
முடியாது. தகுதியற்ற எழுத்தர்களை பயன்படுத்தினால் அவர்கள் தவறான
குறியீடுகள், அடையாளங்களை பயன்படுத்தக்கூடும்.
விதிமுறை
மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் மாற்றுத்
திறனாளிகளுக்கான துறை, மாற்றுத் திறனாளிகளுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவது
தொடர்பான வழிமுறைகள் வகுத்து கடந்த 2013–ம் ஆண்டு பிப்ரவரி 2–ந் தேதி
குறிப்பாணை வெளியிட்டுள்ளது. அதில், 40 சதவீதத்துக்கு மேல் கண் பார்வை
குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கண்டிப்பாக எழுத்தர்,
வாசிப்பாளர், உதவியாளர் ஆகியோரது உதவியுடன் தேர்வு எழுத அனுமதிக்க
வேண்டும். சம்பந்தப்பட்ட எழுத்தர்களை தேர்வுக்கு முன்பு மாணவர்கள் சந்திக்க
அனுமதிக்க வேண்டும். தேர்வு எழுத உதவுபவர்கள் திறமையானவர்களாக இருக்க
வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து
தமிழக அரசு உள்பட அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதமும்
எழுதியுள்ளது. ஆனால், தமிழக அரசு இதுவரை அந்த விதிமுறையை அமல்படுத்தவில்லை.
அரசுக்கு நோட்டீசு
எனவே, 2013–ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்துள்ள குறிப்பாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்,
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி
தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...