சைனிக்
பள்ளியில் இருந்து 28 மாணவர்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து,
பெற்றோர்கள் சார்பில், கோட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்
மாவட்டம், உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், சிபிஎஸ்சி
பாடத்திட்டத்தில், 6 முதல் 12 வகுப்பு வரை, 650 மாணவர்கள் படிக்கின்றனர்.
இதில், 6 மற்றும் 9ம் வகுப்பில் மட்டுமே, மாணவர்கள் அகில இந்திய
நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, புதிதாக சேர்க்கப்படுகின்றனர்.
நடப்பு
கல்வியாண்டில் பயிலும், 28 பிளஸ் 1 மாணவர்களுக்கு, கல்வித்திறன் சரியில்லை
என கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்படுவதாக, பெற்றோருக்கு தகவல்
அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர்கள் சார்பில், உடுமலை வருவாய்
கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
மனுவில்
கூறியிருப்பதாவது: பிளஸ் 1 வகுப்பில், 28 மாணவர்கள், பல்வேறு
செயல்பாடுகளில் பின்தங்கியிருப்பதாக கூறி, அம்மாணவர்களின்
மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு, பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தின்
சார்பில், எஸ்எம்எஸ், அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள், பிளஸ்1 வகுப்பில்
சேர்க்கும் போது, பெற்றோர், கட்டாயத்தின் பெயரில், பள்ளியின் விதிகளை
ஒத்துக்கொள்வதாக கையெழுத்திட்டோம்.
தற்போது அதனை,
பெற்றோரின் ஒப்புதலாக தெரிவிக்கின்றனர். பள்ளியிலிருந்து நீக்கப்படும்
மாணவர்களை, மற்ற சிபிஎஸ்சி பள்ளியில் சேர்ப்பதென்பது இயலாது. போதிய பயிற்சி
அளித்து, சைனிக் பள்ளியிலேயே கல்வியை தொடர, அரசின் சார்பில், நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ.
சாதனைக்குறளிடம் கேட்டபோது, பெற்றோர் தரப்பில், பிரச்னை தொடர்பான, அனைத்து
விவரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து
விசாரித்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். சைனிக் பள்ளி
நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, "பள்ளி நிர்வாக விதிமுறைகளின் படி, பிளஸ் 1
வகுப்பில், மாணவர்களின் கல்வியாண்டு கற்றல் செயல்பாடுகளை அளவிட நடத்தப்பட்ட
தேர்வில் 28 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே
பிளஸ் 2 வகுப்பு படிக்க முடியும்" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...