மத்திய அரசு ‘பட்ஜெட்’டில் வருமான வரி
விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததை கண்டித்து ஏப்ரல் 28–ந்தேதி
பாராளுமன்றத்தை முற்றுகையிட போவதாகவும், ஜூலை மாதத்தில் காலவரையற்ற வேலை
நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர்கள்
தெரிவித்தனர்.
மத்திய அரசு சமர்ப்பித்துள்ள ‘பட்ஜெட்’டில்
வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தாததை கண்டித்து சென்னை
நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மகா
சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு
சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
தலைவர் ஜே.ராமமூர்த்தி, பொருளாளர் எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
நிதி ஒதுக்கீடு குறைவு
கடந்த மாதம் 28–ந்தேதி மத்திய அரசு
சமர்ப்பித்துள்ள ‘பட்ஜெட்’ ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் பயனுள்ளதாக
இல்லை. இது முழுக்க முழுக்க முதலாளித்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும்
வகையிலேயே அமைக்கப்பட்டுள்ள ‘பட்ஜெட்’ ஆகும். உலக சந்தையில் கச்சா எண்ணெய்
விலை குறைந்தாலும், பெட்ரோல்–டீசல் விலை குறையாமல் பார்த்துக் கொண்ட
மத்திய அரசு, இந்த ‘பட்ஜெட்’டில் கலால் வரியை உயர்த்தியதால் பெட்ரோல்–டீசல்
விலை மேலும் அதிகரித்தது.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான வரியை 30
சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்த மத்திய அரசு
மாதச்சம்பளக்காரர்களுக்கு எந்த வித வரி விலக்கும் அளிக்கவில்லை. இது
எவ்வாறு பொதுமக்களுக்கான ‘பட்ஜெட்’ என்று கூற முடியும். சமூகநீதி,
மருத்துவம், கல்வி போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடும் மிகக்குறைவாகவே
உள்ளது.
பாராளுமன்றம் முற்றுகை
விலைவாசி, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம்
என்று கூறி ஆட்சியை பிடித்த பா.ஜ.க. அரசு, மாறாக விலைவாசியை உயர்த்தும்
நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. எனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்தது
போல வருமான வரி உச்சவரம்பாக ரூ.5 லட்சம் வரை என்று அறிவிக்கப்பட வேண்டும்.
மேலும், ‘பட்ஜெட்’டில் அறிவிக்கப்பட மறந்த 7–வது சம்பள கமிஷன் மற்றும்
இடைக்கால நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல்
28–ந்தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இதில் ரெயில்வே, இன்சூரன்சு, தபால்துறை உள்ளிட்ட துறைகளில் இருந்து 10
லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், ஜூலை மாதத்தில்
கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாகவும் திட்டமிட்டுள்ளோம்.
எங்களின் நோக்கம் போராட்டம் அல்ல. நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்
என்பதுதான். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு தயாராகும் பட்சத்தில்
போராட்டம் குறித்த எங்கள் முயற்சியை பரிசீலனை செய்ய தயாராகவே இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...