பெங்களூரு: கட்டணம் செலுத்தவில்லை
என்பதற்காக, ஒன்றாம் வகுப்பு மாணவியை, நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே
நிற்க வைத்ததாக, தனியார் பள்ளி மீது புகார் எழுந்துள்ளது.
பெங்களூரு, கல்யாண் நகர் முதலாவது பிளாக்
தனியார் பள்ளி ஒன்றில், ஒன்றாம் வகுப்பு மாணவி, பள்ளி கட்டணம்
செலுத்தவில்லை என்பதற்காக, நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க
வைத்தனர். கடந்த 18ம் தேதிக்கு முன், 10 நாட்கள் காய்ச்சலால் சிறுமி
பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், பள்ளி கட்டணம், 7,200 ரூபாயை குறிப்பிட்ட
தேதிக்குள் செலுத்தவில்லை.
சரியான பதில் இல்லை
இதனால், பள்ளிக்கு வந்த அந்த சிறுமியை,
வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுத்த ஆசிரியை, வகுப்பறைக்கு வெளியிலேயே மதியம்,
2:00 மணி வரை நிறுத்தியதாகவும், வகுப்பறையில் வைத்திருந்த பகல் உணவையும்,
புத்தக பையையும் எடுக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மாலையில் வீடு திரும்பிய சிறுமி, விஷயத்தை
தாயிடம் கூறியுள்ளார். மறுநாள், தாய் எஸ்தர், ஆசிரியையிடம் கேட்டதற்கு
சரியான பதில் சொல்லவில்லை. மாணவியையும், எஸ்தரையும் பள்ளி காவலர் மூலம்
வெளியேற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எஸ்தர், பானஸ்வாடி போலீசில்
புகார் செய்தார்.
போலீஸ் அதிகாரி மோகன் குமார், உடனடியாக
பள்ளி நிர்வாகியிடம் போனில் விளக்கம் கேட்டுள்ளார். மறுநாள், கல்வி கட்டணம்
முழுவதையும் எஸ்தர் செலுத்திஉள்ளார். பின், தேர்வு எழுத சிறுமி
அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து எஸ்தரை அழைத்த பள்ளி முதல்வர், தேர்வு
எழுதிய பின், வேறு பள்ளியில் சேர்க்க, டிசி கொடுக்கப் போவதாக கூறியுள்ளார்.
எஸ்தர் கூறியதாவது: எனக்கு ஆதரவில்லை.
இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு தனியாக வாழ்கிறேன். என் மகளை நாள்
முழுவதும் வெளியில் நிற்க வைத்தனர் என தெரிந்ததும் விளக்கம் கேட்க
சென்றேன். முறையாக அவர்கள் பதில் அளிக்காததால், போலீசில் புகார் செய்தேன்.
இதனால் பள்ளி நிர்வாகம், என் மகளுக்கு டிசி கொடுக்கப்போவதாக மிரட்டி
உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
உண்மையில்லை
பள்ளி முதல்வர் உஷாகுமாரி கூறியதாவது:
கட்டணம் கட்டவில்லை என்பதால் எந்த குழந்தையையும் தண்டித்ததில்லை. அந்த
மாணவியின் தாய் கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை. இதுபோன்று நடந்து
கொள்வது முதல் தடவையல்ல; ஏதாவது ஒரு புகாரை, எங்கள் மீது சொல்வது வழக்கம்.
கல்வி கட்டணம் செலுத்தாதவரின் பெயரை அசம்பளியில் அறிவிப்பது வழக்கம். பின்,
அவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...