தமிழகம், புதுச்சேரியில் ஒரே ஆண்டில் ரூ.190 கோடி சில்லரை காசுகள்
புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரி கூறினார்.சில்லரை
காசுகள் தட்டுப்பாடுபெட்டி கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை
இன்றைக்கு சில்லரை காசுகள்
தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஓட்டல்கள்,
ஜவுளிகடைகள், மளிகை கடைகள், வணிக வளாகங்கள் என பெரும்பாலான
கடைகளில், ‘1,000 ரூபாய்க்கு சில்லரை காசு வழங்கினால், 100 ரூபாய் கமிஷன்
தரப்படும் என்று பெரியளவில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பதை காண முடிகிறது.
மாநகர பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம், கண்டக்டர் கேட்கும் முதல்
கேள்வியே, ‘ டிக்கெட்டுக்கு, சில்லரையாக கொடுங்கள் என்பதாக தான்
இருக்கிறது. பஸ்கள் உள்ளே ஆங்காங்கே ‘சரியான சில்லரை கொடுக்கவும்’ என்ற
வாசகத்தையும் காண முடிகிறது.சில்லரை தட்டுப்பாட்டை காரணம் காட்டி 1 ரூபாய், 2 ரூபாய்க்கு சாக்லெட் வழங்கி வந்த வியாபாரிகள் தற்போது 5 ரூபாய்க்கு சாக்லெட்டுகளை வழங்க தொடங்கி உள்ளார்கள்.( ஒரு சில வியாபாரிகள் வியாபார யுக்தியுடன் சாக்லெட்டை விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் மத்தியில் பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.)
அதிகாரி விளக்கம்
சில்லரை காசுகளுக்கு தட்டுப்பாடு குறித்து, ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரியில் ரிசர்வ் வங்கி கடந்த 2013-14 நிதி ஆண்டில் 40 கோடி எண்ணிக்கையில் ரூ.136 கோடி மதிப்பில் சில்லரை காசுகளையும், தற்போது(2014-15) 71 கோடி எண்ணிக்கையில் ரூ.190 கோடி மதிப்பில் சில்லரை காசுகளையும் புழக்கத்தில் விட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில்(2015-16) 90 கோடி எண்ணிக்கையில் ரூ.250 கோடி மதிப்பில் சில்லரை காசுகளை புழக்கத்தில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகைக்கு ஏற்ப சில்லரை காசுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் எக்ஸ்சேன்ஜ் மேளா மூலமாகவும் சில்லரை காசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து சில்லரை காசுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று வியாபார சங்கங்களையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். எனவே சில்லரை தட்டுப்பாடு என்பது செயற்கையாகவே உருவாக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.
கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் சில்லரை காசுகளை கையில் எடுத்து சென்றால், வியாபாரிகள் வலுக்கட்டாயமாக கொடுக்கும் சாக்லெட்டை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.3 ஆயிரம்- 3 முறை
பின்னர் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ரிசர்வ் வங்கியில் தனி நபர் ஒருவர் அதிகபட்சம் மாதம் எவ்வளவு சில்லரை காசுகள் பெறலாம்(ரூபாய் நோட்டு கொடுத்து)? தனி நபருக்கு, மாதம் எத்தனை முறை சில்லரை காசுகள் வழங்கப்படுகிறது?
பதில்:- ஒரு நபர் அதிகபட்சமாக மாதம் 3 ஆயிரம் ரூபாய் வரை சில்லரை காசுகள் பெறலாம். மாதம் 3 முறை தலா ரூ.1,000 வீதம் சில்லரை காசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கேள்வி:- ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் எத்தனை தானியங்கி சில்லரை நாணயங்கள் வழங்கும் எந்திரங்கள்(ரூபாய் நோட்டை செலுத்தினால் ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப சில்லரை காசுகள் வழங்கும் எந்திரம்) உள்ளன?
பதில்:- தமிழ்நாட்டில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் 394 எந்திரங்கள் உள்ளன. சென்னையில் 129 எந்திரங்கள் உள்ளன. சென்னையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியிலும் 2 எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
புதிய 1 ரூபாய் நோட்டு?
கேள்வி:- மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய 1 ரூபாய் நோட்டுக்கள் எப்போது புழக்கத்தில் விடப்படும்?
பதில்:- தற்போது புதிய 1 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் மாதம் 500 பாக்ஸ்கள்(1 பாக்ஸ்- 1 லட்சம் நோட்டுக்கள்) தேவைப்படும்.
குறைந்த அளவு எண்ணிக்கையை வைத்துக்கொண்டு வழங்க முடியாது. அப்படி வழங்க தொடங்கினால் ஒரு சிலருக்கு புதிய 1 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமல் போய்விடும். இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தியே ஏற்படும். எனவே தமிழ்நாட்டில் புதிய 1 ரூபாய் நோட்டுக்கள் வழங்கும் பணியில் சற்று கால தாமதம் ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...