சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை வியழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில்
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்தத்
தேர்வில் 4,550 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். இவர்களில் 934 பேர்
தேர்ச்சி பெற்றனர்.
இதில் 650 பேருக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏராளமான பின்னடைவு காலிப் பணியிடங்கள்
உள்ளன. இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை காலிப்பணியிடங்களில்
நியமிக்க வேண்டும் அல்லது எதிர்காலத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில்
எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி
கடந்த 2 நாள்களாக ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு தொடர்
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கையைப் பரிசீலித்து
அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும் என அவர்கள் கோரினர்.
போராட்டம் நடத்தியவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை துணை ஆணையர்
சுகந்தி வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தக்
கோரிக்கைகள் தொடர்பாக மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என
உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...