ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய
அரசுடன், வங்கி ஊழியர்கள் அமைப்பு நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வியில்
முடிந்தது. இருப்பினும், வரும் 23ம் தேதி, மும்பையில் மீண்டும்
பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு
முழுவதுமுள்ள வங்கி ஊழியர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு, பல
கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு மட்டுமல்லாது,
ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு, பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது
உள்ளிட்ட, அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளுக்கும், எதிர்ப்பு தெரிவித்து
வந்தாலும், ஊதிய உயர்வு பிரச்னை தான், மத்திய அரசுக்கும், வங்கி ஊழியர்கள்
அமைப்புகளுக்கும் இடையில், பெரிய இழுபறியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உட்பட, 9 தொழிற்சங்க
அமைப்புகளின் பிரதிநிதிகளை, பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, தொழிலாளர் நல
ஆணையத்தின் உயரதிகாரி மித்ரா, அழைப்பு விடுத்திருந்தார். டில்லியில்
நேற்று, ஷ்ரம் சக்தி பவனில் உள்ள, தொழிலாளர் நல அமைச்சகத்தில்,
பிற்பகல் 3:00 மணிக்கு,
பேச்சுவார்த்தை துவங்கியது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு
வார்த்தையில், வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர், தங்சாலே உள்ளிட்ட,
முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி,
13 சதவீத ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ளும்படி, அரசு தரப்பில்
வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதை ஏற்க முடியாது என்றும், 19.5 சதவீத
அளவுக்கு, ஊதிய உயர்வை அளித்தால் மட்டுமே ஏற்போம் என்றும், வங்கி ஊழியர்கள்
தரப்பு உறுதி காட்டிதால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தை...:
இருப்பினும்,
வரும் 23ம் தேதி, மும்பையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று,
அரசு தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை, வங்கி ஊழியர் அமைப்புகள் ஏற்றுக்
கொண்டுள்ளன. அந்த பேச்சுவார்த்தை யிலும் தோல்வி ஏற்பட்டால், ஏற்கனவே
திட்டமிட்டபடி, வரும் 25, 26, 27, 28 ஆகிய நான்கு நாட்களுக்கு,
வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...