மாணவ, மாணவியர் பள்ளி முடிந்ததும்,
பெற்றோருக்கு தெரியாமல் எங்கும் செல்லக்கூடாது; விலை உயர்ந்த ஆபரணங்கள்
அணிந்து வரக்கூடாது; மொபைல் போன் எடுத்து வருதல் கூடாது என, பள்ளிக்கல்வி
இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே,
மொளசூர் கிராமத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர், சில தினங்களுக்கு
முன் மாயமாகி, விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில், பிணமாக மீட்கப்பட்டார்.
அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன.
விசாரணையில், உடன் படித்த தோழியே, சசிரேகாவை
நகைக்காக கிணற்றில் தள்ளி கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து,
மாணவ, மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்,
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளி முதல்வர்களுக்கு
சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
* பள்ளி மாணவ, மாணவியர் வீட்டில் இருந்து
பள்ளிக்கு வரும்போதும், மீண்டும் வீடு திரும்பும் போதும், வழிகாட்டு
நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது; மொபைல் போன் போன்ற உபகரணங்களை எடுத்து வரக்கூடாது.
* வீட்டில் இருந்து பள்ளிக்கு தனியாக வருவதை தவிர்த்து, குழுவாக இணைந்து வர வேண்டும்.
* பள்ளிக்கு வரும் வழியில், நீர்நிலைகள் இருந்தால், அதனருகில் செல்லக்கூடாது.
* ரயில்வே பாதை, நெடுஞ்சாலை இருப்பின் கவனமாக,
எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும். ரயில், பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி
பயணிக்க கூடாது.
* பள்ளிக்கு வரும் வழியில், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசக் கூடாது; அவர்கள் தரும் உணவு பொருட்களை வாங்கக் கூடாது.
* பள்ளி நேரம் முடிந்த பின் வீட்டிற்கு செல்ல
வேண்டும். இந்த அறிவுரைகளை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், இறைவணக்க
கூட்டத்தின்போது, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...