உலக அளவில் இணைய வசதி எட்டாதவர்கள், 5
பில்லியன் பேர் இருக்கின்றனர். இதற்கு, பல இடங்களில் இணைய சமிக்ஞைகள் எட்ட
முடியாமல் இருப்பது தான் காரணம். எனவே, வருமானத்திற்கு இணையத்தையே
நம்பியிருக்கும் தேடு பொறி இயந்திர நிறுவனமான கூகுள், எல்லோருக்கும் இணையம்
எட்ட வேண்டும் என்பதற்காக, 'புராஜக்ட் லூன்' என்ற திட்டத்தை, 2013ல்
அறிவித்தது.
புராஜக்ட் லூன், அடிப்படையில் ஒரு எளிமையான
தொழில்நுட்பம் தான். ஆனால் பிரமாண்டமான, புரட்சிகரமான திட்டம். ஹைடெக்கான
செயற்கைக் கோள்களுக்கு பதிலாக, வானில் 20 கி.மீ., உயரத்தில், ஹீலியம் வாயு
நிரம்பிய பலூன்களை ஏராளமாக மிதக்க விட்டு, அதில் சிறிய தகவல் தொடர்பு
சாதனங்களை வைத்து, இணைய தகவல்களை வை-பை சமிக்ஞைகளாக பூமிக்கு அனுப்புவதும்,
பெறுவதும் தான் புராஜக்ட் லூனின் பணி. இந்த திட்டத்திற்கு, உலக நாடுகளின்
அரசாங்கங்களிடம் பேசி, ஒப்புதல்களை வாங்க ஆரம்பித்திருக்கிறது கூகுள்.
ஏற்கனவே நியூசிலாந்தில் இரண்டு ஆண்டுகளாக, 30 ராட்சத பலூன்களை
மிதக்கவிட்டு, அங்குள்ள இணையப் பயனாளிகளுக்கு சமிக்ஞைகளை அனுப்பி
வெள்ளோட்டம் பார்த்திருக்கிறது புராஜக்ட் லூன். சமீபத்தில், மும்பை கூட்டம்
ஒன்றில் பேசிய, கூகுளின் புதுமை படைக்கும் கூகுள் எக்ஸ் என்ற பிரிவின்
மேலதிகாரியான முகமது கவ்டாட், 'புராஜக்ட் லூன் மூலம் உலகின் ஒவ்வொரு
அங்குலத்திற்கும் இணைய சேவை கிடைக்கும்படி செய்வது தான் எங்கள் லட்சியம்.
இதற்காக இந்திய அரசு மற்றும் இணைய சேவை தரும் தனியார் நிறுவனங்கள் உட்பட,
நாங்கள் உலகெங்கும் ஒப்பந்தம் போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்'
என்று தெரிவித்தார். இணைய சேவையை பரவலாக்க, தற்போது இருப்பதைப் போல
சிக்னல் டவர்களை நம்ப முடியாது. சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் வந்தால்,
இது போன்ற கட்டமைப்புகள், நொடியில் சேதமாகி விடும். பின், மீண்டும் அவற்றை
உருவாக்க ஐந்தாறு மாதங்களும், பல கோடி ரூபாயும் செலவாகும் என்கிறார்
முகமது. உலகெங்கும் அதிவேக பயணிகள் ஜெட்கள், போர் விமானங்கள் உட்பட எந்த
விமானங்களும், பூமியிலிருந்து, 10 கி.மீ., உயரத்திற்கு மேல் பறப்பதில்லை.
கூகுள் மிதக்கவிடும் ராட்சத ஹீலியம் பலூன்கள், குறைந்தது, 20 கி.மீ.,
உயரத்தில் பறக்கும். மேலே காற்று வீசும் திசையில் அவை நகர்ந்து உலகை வலம்
வரும். பூமிக்கு மேலே சராசரியாக, 20 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்
என்றாலும், உயரே போகப்போக, காற்றோட்டம் சீராக இருக்காது. சில பலூன்கள்
வேகமாக நகரும். சில மெதுவாக நகரும். ஆனால், கம்ப்யூட்டர்களும்
மென்பொருட்களும் காற்றின் வேகம், மற்ற பலூன்கள் இருக்கும் நிலை ஆகியவற்றை
கணித்து, ஒரு பலூன் நகர்ந்ததும் இன்னொரு பலூனை, அந்த இடத்திற்கு நகர்த்தி
வந்து விடும். உயரத்தைக் கூட்டி குறைப்பது, காற்று எங்கிருந்து வீசுகிறது
என்பதை உணர்ந்து, நம் ஆட்கள் காலியான பஸ் சீட்டில் கர்சீப்பை போடுவதுபோல,
பலூன் இல்லாத இடத்தை நோக்கி, அவற்றை நகர்த்துவது ஆகிய பணிகளை கணிப்பொறிகள்
மேற்கொள்ளும்.
எப்போதும் தொடர்பில்...:
பூமியின் மேலே மிதக்கும் பல நூறு கூகுள்
பலூன்கள், ஒன்றோடு ஒன்று எப்போதும் தொடர்பில் இருக்கும். இதனால் வானத்தில்
ஒரு வலுவான இணைய சமிக்ஞை நெட்வொர்க் உருவாகிவிடும். எனவே, எவரெஸ்ட் சிகரம்
முதல், சகாரா பாலைவனம் வரை; அமேசான் காடுகள் முதல், நட்ட நடுக்கடல் வரை
எந்தப் பகுதியிலும், இணைய சிக்னல் கிடைக்காது என்ற பேச்சுக்கே
இடமிருக்காது. பலூன்களின் அளவும், பிரமாண்டம் தான். 15 மீட்டர் அகலமும், 12
மீட்டர் உயரமும் உள்ள பாலிஎத்திலீன் பிளாஸ்டிக்கால் ஆன இந்த பலான்கள், 100
நாட்கள் வரை வானில் மிதக்கும். பின், 'சர்வீஸ்' செய்வதற்காக, கூகுள்
பொறியாளர்கள், வாயுவை வெளியேற்றி பலூனை கீழே இறக்குவர். பலூன் ஒருவேளை
வேகமாக இறங்கினால், அதன் உச்சி மண்டையில் இருக்கும் பாராசூட் விரிந்து,
வேகத்தை குறைத்து, 'ஸ்லோ மோஷனில்' பலூனை இறங்க வைக்கும். பலூனில் இருக்கும்
மின்னணு சாதனங்களை இயக்க, எடை குறைந்த சோலார் பலகைகள் இருக்கின்றன. சூரிய
ஒளி உள்ள திசையை நோக்கி பலகையை நகர்த்தி, தொடர்ந்து மின்சாரம்
தயாரிக்கவும், இரவு நேரத்திற்காக பேட்டரியை சார்ஜ் செய்யவும் முடியும்.
சோலார் பலகைகள், 100 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். பலூனுக்கு
அடிப்பகுதியில், மின்னணு சர்க்யூட்களும், மற்ற பலூன்களுடன் தகவல் பரிமாற
உதவும் ரேடியோ ஆன்டனாவும், தரை நிலையங்களுக்கு வை-பை சமிக்ஞையை அனுப்பும்
ஆன்டனாவும் உள்ளன. பூமி பகுதியில், 40 கி.மீ., சுற்றளவுக்கு அடர்த்தியான
வை-பை சமிக்ஞையை பலூன்களால் அனுப்ப முடியும். புராஜக்ட் லூன், பல மொபைல்
மற்றும் இணைய சேவை நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இயங்குவதால், அந்த சேவை
நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல்கள் மூலம் நேரடியாக
புராஜக்ட் லூன் பலூன்களில் உள்ள சாதனங்களுடன் தொடர்பு கொண்டு, இணைய
சமிக்ஞைகளை பெறவும், அனுப்பவும் முடியும்.
வர்த்தக ரீதியில்...:
இந்த சேவையை வர்த்தக ரீதியில் தான் கூகுள்
நடத்தும் என்று தெரிகிறது. ஆனால், எந்த மாதிரி கட்டணம் வசூலிக்கும் என்பது
தெளிவாகவில்லை. ஏற்கனவே பேஸ்புக், இந்தியாவில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுடன்
சேர்ந்து, 'மொபைல் ஆப்' மூலம் இலவச இணைய சேவை யை தருகிறது. அதுபோல,
கூகுளும், தன் மென்பொருள்கள் மற்றும் தேடு பொறி போன்றவற்றை முன்னிறுத்துமா
என்பதும் தெரியவில்லை. அடுத்த ஆண்டை நெருங்கும்போது, கூகுள் அது பற்றி
அறிவிக்கலாம்.
மோடியின் டிஜிட்டல் இந்தியா:
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின், 'டிஜிட்டல்
இந்தியா' திட்டத்தின் முதல் கட்டமாக, இந்தியாவில் 2,500 நகரங்களில், மூன்று
ஆண்டுகளில், 7,000 கோடி ரூபாய் முதலீட்டில், இலவச வை-பை வசதி (இணைய
சமிக்ஞைகளை மொபைல், டேப்லட்களுக்கு கொண்டு வரும் தொழில்நுட்பம்)
வரவிருக்கிறது. சென்னை உள்ளிட்ட, 12 பெரிய நகரங்களில், இந்த இலவச வை-பை
வசதி எல்லா மொபைல் சேவை நிறுவனங்கள் மூலமும் கிடைக்கும். ஆனால், இலவச சேவை
சிறிது காலத்திற்கு மட்டும் தான். பின் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்
இந்த வை-பை சேவை, '4 ஜி' தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...