உலகின் மிகப் பெரிய இணையத் தேடல் பொறி நிறுவனமான கூகுள், 2016 வாக்கில்,
இந்தியாவில் பட்டம் விடப்போகிறது. இது சிறுவர்கள் காற்றுக் காலத்தில்
விடும் சாதாரண பட்டம் அல்ல. மின் பட்டம். கூகுள் நிறுவனத்தின் அதிகம்
வெளியில் அறியப்படாத ஒரு பிரிவு கூகுள் எக்ஸ். இது கூகுள் புதுமையான
தொழில்களை துவக்குவதற்கென்றே இயங்கி வருகிறது. இதுவரை, 12
நிறுவனங்களுக்கும் மேல் கூகுள் விலை கொடுத்து வாங்கவும், அவற்றை கூகுளின்
குடையின் கீழ் தனி நிறுவனங்களாக வளர்த்தெடுக்கவும் கூகுள் எக்ஸ்
உதவுகிறது.
அப்படி கூகுள் எக்ஸ் 2013ல், 30 மில்லியன் டாலர்கள் கொடுத்து
வாங்கியதுதான், 'மகானி பவர்.' தரையில் ராட்சத விசிறிகளை அமைத்து, மின்சாரம்
தயாரிப்பதைப் போல, அந்தரத்தில் மிதக்கும் காற்று மின் ஆலைகளை அமைக்க
ஆராய்ச்சி செய்து வந்தது மகானி பவர். கூகுள் அந்த நிறுவனத்தை வாங்கிய
பிறகு, மகானியின் தொழில்நுட்ப ஆய்வுகள் வேகமெடுத்தன. இப்போது அந்த
தொழில்நுட்பத்தின் மூலம் காற்று மின்சாரத்தை பெரிய அளவில் தயாரிக்க
முடிவெடுத்திருக்கிறது கூகுளின் மகானி பவர்.
சிக்கல்கள்:
மும்பையில் கடந்த வியாழனன்று நாஸ்காம் இந்தியா தலைமை பண்பு சங்க
கூட்டத்தில் பேசிய கூகுள் நிறுவனத்தின் கூகுள் எக்ஸ் பிரிவின் துணைத்
தலைவர், முகமது கௌடாட், ''மகானி 2016ல் வர்த்தக ரீதியில் மிதக்கும் காற்று
மின் ஆலைகளை நிறுவ முடிவெடுத்திருக்கிறது. ''அதை கூகுள் செயல்படுத்தும்,
முதல் சில நாடுகளில் இந்தியாவும் இடம் பெறக்கூடும். புதுப்பிக்கத் தக்க
எரிசக்தி துறைக்கு இந்தியா முக்கியத்துவம் தருவதும் இதற்கு ஒரு காரணம்,''
என்று தெரிவித்தார். ''வழக்கமான காற்றாலைகள், 140 மீட்டர் உயரம் வரைதான்
அமைக்கப்படுகின்றன. ஆனால் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன,'' என்றார்
முகமது.
கூகுள் மகானி மிதக்கும் காற்று மின் ஆலை (ஏர்போர்ன் விண்ட் டர்பைன்)
தொழில்நுட்பம் மிகவும் சுவாரசியமானது. இதில் நான்கு பாகங்கள் இருக்கின்றன.
முதலாவது, வானில் பறக்கும் மின் பட்டம் (எட்டு விசிறிகள் கொண்ட ஆளில்லா
விமானம் போல் இது இருக்கும்) அடுத்து இந்த பட்டத்தை தரை நிலையத்துடன்
இணைத்துக் கட்டும் வடம் (இது கார்பன் இழையாலும், அதனும் மின்சாரத்தைக்
கடத்தும் அலுமினிய வடத்தாலும் ஆனது). பறவை போலஅடுத்தது தரை நிலையம் மற்றும்
கணிப்பொறி அமைப்பு. இந்த மிதக்கும் மின் பட்டம் செயல்படாத சமயங்களில், தரை
நிலையத்தில், ஒரு பறவை, கிளையில் அமர்வதைப் போல வந்து அமர்ந்து கொள்ளும்.
காற்று நன்றாக வீசும்போது தரை நிலையத்திலிருந்து, 140-லிருந்து 310 மீட்டர்
உயரம் வரை மின் பட்டம் உயர்ந்து பறக்கும்.
அப்படி பறக்கும்போது, பட்டத்தில் பொறுத்தப்பட்டுள்ள எட்டு மின் விசிறிகள்
சுழலும். அந்த சுழற்சி மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்களை
முடுக்கிவிடும். உற்பத்தியாகும் மின்சாரம், பட்டத்தோடு இணைந்துள்ள வடத்தின்
மூலம் தரை நிலையத்திற்கு வந்து சேமிக்கப்படும் அல்லது வினியோகிக்கப்படும்.
தரை நிலையம் அதிக இடத்தை அடைத்துக் கொள்வதில்லை.
வழக்கமான காற்றாலை களை விட மிகவும் சிறியதாகவே இருக்கிறது. உயரமான
இடங்களில் காற்று தொடர்ச்சியாக வீசும் என்பதால், வழக்கமான காற்றாலைகளைவிட
மிதக்கும் காற்றாலை அதிக நேரம் மின் உற்பத்தி செய்ய முடியும். வடத்துடன்
இணைந்த காற்றாலை, 145 மீட்டர் சுற்றளவுக்கு தொடர்ந்து வட்டமடித்தபடியே
இருக்கும்.
பெரிய சவால்:
மின் பட்டத்தின் மூலம் 600 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்
என்கிறது கூகுள் நிறுவனம். ''சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் போதிய
மின்சாரத்தை உற்பத்தி செய்வது மிகப்பெரிய சவால். ''அதற்கு சூரிய ஒளி
மின்சாரமும், காற்றாலை மின்சாரமும் மிகவும் தோதானவை. மகானியின் மிதக்கும்
மின் பட்டம் போன்ற தொழில்நுட்பங்கள் அந்த வகையைச் சேர்ந்தது,'' என்கிறார்
முகமது.
இதேபோல, 'லூன் பலூன்' என்ற ஒரு திட்டத்தையும், 2016ல் வர்த்தக ரீதியில்
செயல்படுத்த கூகுள் உத்தேசித்திருக்கிறது. 'லூன் பலூன்' என்பது, இணைய வசதி
எட்டாத பகுதிகளில், பெரிய பலூன்களை உயரே பறக்க விட்டு, கீழே உள்ள பகுதி
களுக்கு வை--பை இன்டர் நெட் வசதியை ஏற்படுத்தித் தருவது. இதையும் இந்தியா
உட்பட பல நாடுகளில் கூகுள் அடுத்த வருடம் செயல்படுத்தக்கூடும். கூகுள்
பட்டம் விட்டாலும், பலூன் விட்டாலும் அது, 'ஹைடெக்'காக இருப்பதில்
ஆச்சரியமில்லை!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...