Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களிடம் பழக வேண்டும்!

            ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களிடம் பழக வேண்டும் என்பதுதான் இன்றைய கல்வித் துறையின் உத்தரவாக இருக்க வேண்டும்

     மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது விலை உயர்ந்த நகைகளை அணிந்துவரக் கூடாது, செல்லிடப்பேசி கொண்டு வரக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
 
          ஒரு மாணவி தன் வகுப்புத் தோழியின் காதணிக்கு ஆசைப்பட்டு, அவரைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற சம்பவத்தையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அந்த நேரத்துக்கான அதிரடி நடவடிக்கையாக இருக்கலாமே தவிர, இன்றைய பள்ளிச் சூழலுக்கும் வளர் இளம் பருவம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்க முடியாது.
 
              உறவினரை, மனைவியை, நண்பனை ஆத்திரத்தால், பொறாமையால் இறந்து போகும் நிலைக்கு காயப்படுத்தும் சம்பவங்களில் பெரும்பாலானோர் செய்யக்கூடியது, நகைகளை, உடைமைகளை எடுத்து மறைத்து, அந்தக் கொலையை யாரோ நகைக்காக செய்ததுபோல திசைதிருப்புவதுதான். வெறும் காதணிக்காக சக மாணவியைக் கொன்றிருக்கிறார் என்பது, முதல் தகவல் மட்டுமே. உண்மையில் அவர்களுக்குள் எத்தகைய நட்பு இருந்தது, அந்த நட்பு எவ்வாறு பகைமையானது, எதனால் மரணம் நேர்ந்தது என்று பல கோணங்களில் விசாரிக்க வேண்டிய வழக்கை, வெறும் காதணிக்காக கொலை என்று முடிவு செய்துவிட முடியாது.
 
          இன்று மாணவர்கள் கொண்டு செல்லும் ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசி விலை மிக அதிகம். ஏறக்குறைய எல்லா மாணவர்களும் வைத்திருக்கிறார்கள். இன்று ஒரு 100 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தின் விலை சுமார் ரூ.60,000. பல மாணவர்கள், குறிப்பாக, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில்தான் வலம் வருகின்றனர். இன்றைய வளர் இளம் பருவத்தினர் அனைவரும் .டி.எம். அட்டை வைத்திருக்கின்றனர். பல மாவட்டங்களில் கல்வி உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், அவர்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கவே செய்கிறது. வெறும் நகை, பணம், வாகனம், செல்லிடப்பேசி இவற்றுக்காக மட்டுமே சக மாணவனையோ, மாணவியையோ கொலை செய்ய முடியும் என்றால், தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் கொலைக்களமாகத்தான் இருக்க வேண்டும். உண்மை நிலை அதுவல்ல.
 
          இன்றைய வளர் இளம் பருவ மாணவர்களிடம் உள்ள சிக்கல், அவர்களது இனம் புரியா உணர்ச்சிக் கொந்தளிப்புதான். இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு ஒருதலைக் காதலாக, தன் அந்தரங்கத்தில் அடுத்தவர் தலையீட்டின் காரணமாக, கேலியின் விளைவாக, பதிலுக்குப் பதில் கொடுக்கும் ஆக்ரோஷமாக இருப்பதுதான் பெரும்பாலும் இளம் சிறார்கள் குற்றத்தில் ஈடுபடக் காரணமாக அமைகிறது. இந்தச் சிக்கலை உருவாக்கக்கூடிய, வன்மம் விளையும் இடமாக பள்ளி வளாகம் இருப்பதால், இந்த உணர்வுக் கொந்தளிப்பை நெறிப்படுத்தி, அமைதிகொள்ள செய்யும் இடமாகவும் பள்ளி வளாகம்தான் இருக்க முடியும்.
 
              வளர் இளம் பருவத்தினரின் வன்மத்துக்கு அடிப்படைக் காரணம் தாங்கள் காட்டிக் கொடுக்கப்படுவதும், தங்கள் அந்தரங்கத்தில் பிறர் தலையிடுவது அல்லது அதைத் தெரிந்துகொண்டு தங்களை மிரட்டுவதும்தான். கல்லூரி வளாகங்களில் நடக்கும் கொலைகளுக்கான அடிப்படைக் காரணமே இவைதான். இதே காரணங்கள் இப்போது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வளாகங்களிலும் பரவத் தொடங்கிவிட்டன. இந்த வகையில், உயர்நிலைப் பள்ளிகள் இளநிலைக் கல்லூரிகளாக மாறியிருக்கின்றன. இதுதான் உண்மையான சிக்கல்.
 
           பள்ளிக்கு வராமல் தான் வெளியே சுற்றியதை வீட்டிற்குத் தெரியப்படுத்திவிட்டான் அல்லது வேறு மாணவர்களிடம் சொல்லிவிட்டான் என்பதிலும், தனது செல்லிடப்பேசியின் சேமிப்பு அறைகளைத் திறந்துப் பார்த்து அந்தரங்கங்களை அறிந்துகொண்டு விட்டான் என்பதிலும்தான் இன்று இளைஞர்களிடையே முதல் வன்மம் தொடங்குகிறது. நட்பின் எல்லை எது? ஒருவருடைய அந்தரங்கம் என்பது என்ன? எதைக் கேலி செய்யலாம்? எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் போன்ற பொது வெளி பழகு முறைதான் இன்று பள்ளியில் சொல்லித் தரப்பட வேண்டிய பாடம். இதை எப்படிச் செய்வது என்பது குறித்துதான் நமது கல்வித் துறை சிந்திக்க வேண்டும்.
 
             இன்றைய மாணவர்களுக்கு பாலியல் கல்வி தேவையே இல்லை. அவர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்கிறது. அவர்களிடம் காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சி என்று பேசுவது பயனளிக்காது. அவர்களிடம் சொல்ல வேண்டியது "கைக்கிளை' குறித்தும், "பொருந்தாக் காமம்' குறித்தும்தான். ஒருவரையொருவர் நேசிப்பதுதான் காதல் என்றாலும், உன்னை நேசிக்கும்படி இன்னொருவரைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதை மாணவர்களுக்குப் புரிய வைப்பதுதான் இன்றைய தேவை. அதிகாரத்தாலும் பணத்தாலும் மிரட்டலாலும் காதலைப் பெற முடியாது என்பதை உணர்த்துவதுதான் இன்றைய பாலியல் கல்வியாக இருக்க முடியும்.
 
             பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் இருபது பேருக்கு ஓர் ஆசிரியரை, அவர் வகுப்பறைக்கு வெளியே தோழனாக இருக்கும் நிலையை உருவாக்குவதும், மாணவர்களின் திசைமாறும் போக்குகளை சுட்டிக் காட்டவும், பிணக்குகளில் விலகி நின்று சிக்கலை அவிழ்க்க உதவும் நண்பனாய் இருப்பவரே இன்றைய நல்லாசிரியர். அவர் நண்பனாய், மந்திரியாய் நல்லாசிரியனுமாய் மாறுவது நிச்சயமாக மாணவர்களுக்குத் தேர்வு மதிப்பெண் கிடைக்க உதவாதுதான். ஆனால், அவர்கள் மனிதனாய் மாற அது உதவும்.

               ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களிடம் பழக வேண்டும் என்பதுதான் இன்றைய கல்வித் துறையின் உத்தரவாக இருக்க வேண்டும்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive