கல்வித் தரத்தை அடுத்தகட்ட முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்ல கல்லூரிகளில் கற்பிக்கும் அணுகுமுறைகளில் மாற்றம் அவசியம் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் தென்கிழக்கு மண்டல இணைச் செயலர் டாக்டர் ஜி.சீனிவாஸ் கூறினார்.
சென்னை குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரி தரம் மதிப்பீட்டு அமைப்பின் சார்பில் நடைபெற்ற கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்த தேசியக் கருத்தரங்கை தொடக்கி வைத்து, அவர் மேலும் பேசியது:நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும்,அனைத்துத் துறைகளையும் அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வதிலும் கல்விக்கு மிகமுக்கிய பங்குண்டு. இணையதளம் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்பம் உச்சக்கட்ட வளர்ச்சியை எட்டிப்பிடித்து இருக்கும் சூழலில்,கற்பிக்கும் முறைகளில் நவீன தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்தப்படுவதுடன்,அவர்களது புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்தும் வகையிலும் கற்பிக்கப்படுவது அவசியமாகும்.
தங்களுக்கு அளிக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்தி முடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல்,மாணவர்கள் புரிந்து கொள்ளவும்,புரிந்தவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்ளும் வகையிலும் கற்பித்து உதவ வேண்டும். கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கென கல்லூரிகளில் செயல்பட்டு வரும் தரம் மதிப்பீட்டு அமைப்பின் பொறுப்பும், பங்கும் பாராட்டத்தக்கது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...