செயற்கைக்கோள்களின் பயன்பாடுகளை பற்றி, பள்ளி ஆசிரியர்களுக்கு
பயிற்றுவித்து வரும், சென்னை பல்கலைக் கழகத்தின் புவியியல் துறை
பேராசிரியர், பாஸ்கரனிடம் பேசியதில் இருந்து...
நாம், மிகுந்த பொருட்செலவில், செயற்கைக்கோள்களை அனுப்பி கொண்டிருக்கிறோம்.
ஆனால், அவற்றின் பயனை மிகக்குறைந்த அளவே அனுபவித்து வருகிறோம். காரணம்,
அவற்றின் செயல்பாடுகளை பற்றி நாம் அறியாதது தான். அதை போக்க,
செயற்கைக்கோள்களை பற்றிய புரிதலை, பள்ளி பருவத்திலேயே விதைக்க வேண்டும்.
அதற்காக, பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. ஆயினும்,
ஆசிரியர்களுக்கு அவற்றை பற்றிய புரிதல் இல்லை. எனவே தான், அவர்களுக்கு
பயிற்சி அளிக்கப்படுகிறது.
* நம் செயற்கைக்கோள்களின் பயனை முழுமையாக அனுபவிக்காத துறைகள் என்னென்ன?
எல்லா துறைகளுமே, முழுமை யான பயனை அனுபவிக்காத துறைகள் தான். குறிப்பாக,
தொலைத்தொடர்பு, வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, இயற்கை வளங்களை கண்டறிவது
உள்ளிட்ட துறைகளில், செயற்கைக்கோள்கள் மூலம் நிறைய சாதிக்க முடியும்.
ஆனால், அப்படிப்பட்ட நிலை இல்லாததால் தான், அந்தந்த துறைகளின்
முன்னேற்றத்தில், தேக்கநிலை நிலவுகிறது.
* செயற்கைக்கோள்களை பற்றி அறிந்து கொள்வதால் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகளை பெருக்க முடியும்?
ஜி.ஐ.எஸ்., என்னும் 'ஜியோ இன்பர்மேட்டிக் சிஸ்டம்', ஜி.பி.எஸ்., என்னும்
'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்', ஆர்.எஸ்., என்னும் 'ரிமோட் சென்சிங், ரேடார்,
நேவிகேட்டர்' போன்றவற்றின் பயன்பாடு அதிகம். பூமிக்கு அடியில் இருக்கும்
கட்டடங்கள், பழமையான அடையாளங்களை ரேடார் மூலம் கண்டறிந்து, ஆராய்ந்து,
தொல்லியலாளர்கள் பாதுகாக்கலாம். ஜி.பி.எஸ்.,சை, போக்குவரத்து போலீசார்
பயன்படுத்த துவங்கினால், பெருமளவில் நெரிசல் தவிர்க்கப்படும். அதனால்,
உடனுக்குடன் மாற்று வழிகளை அடையாளம் காட்ட முடியும். 'ரேடார்'களின்
உதவியால், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை கண்டறிந்து, விவசாயிகள் என்ன
பயிரை, எந்த பருவத்தில் பயிரிடலாம் என்பதையும், எந்த நிலப்பகுதியில், எந்த
பயிர் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து, சந்தை தேவைக்கேற்ப,
பயிர் சுழற்சியை ஊக்குவிக்க, வேளாண்மை துறையினர் செயற்கைக்கோள்களை
பயன்படுத்த வேண்டும். கடல் அலையின் போக்கு, அதன் உயரம், மீன் வலசையின்
பாதை, அவற்றின் செறிவு ஆகியவற்றை கண்டறிந்து, மீனவர்களுக்கு வழிகாட்டி,
அவர்களின் தேவையில்லா உழைப்பையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க, மீன்வள
துறையினர், செயற்கைக்கோள்களை பயன்படுத்த வேண்டும். 'சென்சார்'களை கொண்டு,
வனவிலங்குகளின் வாழ்விடம், நடமாட்டம், அவற்றின் ஆதார நிலை, எதிரிகளின்
நடமாட்டம், காடுகளின் செறிவு, மரக்கடத்தல் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து,
சுற்றுலா பயணிகள், பகுதிவாசிகளுக்கு வழிகாட்டி, விலங்குகளின்
தாக்குதலையும், வளங்களின் சேதத்தையும் தவிர்க்கலாம். அதேபோல், தேவைக்கேற்ப
செயல்படும் வகையில் தானியங்கி, தண்ணீர் குழாய்களை அமைத்து, வேளாண்மை, தீ
விபத்து போன்றவற்றில் பயன்படுத்தி, நீர் சிக்கனத்தையும், பாதுகாப்பையும்
உறுதிபடுத்தலாம். செய்தி, மக்கள்தொடர்பு துறைகளில் தேவையில்லாத வதந்திகளை
தவிர்க்கவும், சரியான புள்ளிவிவரங்களை கொடுக்கவும், தொலைத்தொடர்பு
செயற்கைக்கோள்களை மிகுதியாக பயன்படுத்தி, மக்களின் நம்பிக்கையை பெறலாம்.
வானிலை ஆராய்ச்சி நிலையங்களில், தட்பவெட்ப செயற்கைக் கோள்களை பயன்படுத்தி,
மழைப்பொழிவு, காற்றின் ஈரப்பதம், வெப்பம் உள்ளிட்டவற்றை தெளிவாக
கண்டறியலாம். 'ரேடார்'களின் உதவியால், புவி அதிர்ச்சி, எரிமலை வெடிப்பு
ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இப்படி எல்லா துறைகளிலும்,
தேவைகளின் அவசியத்திற்கேற்ப, செயற்கைக்கோள்களின் பயன்பாட்டை அதிகரிக்க
லாம்.
* எல்லா துறைகளிலும் செயற்கைக்கோள்களின் பயன்பாடு குறித்தான பாட பிரிவுகளை
கல்லூரிகளில் துவக்கவும், படிக்க வைக்கவும் அதிக செலவாகுமே?
இல்லை. பெரும்பாலான தகவல்களை, அரசிடம் இருந்து நாம் இலவசமாகவே பெறலாம். பல
புதிய பயன்பாட்டு படிப்புகளுக்கு, பல்கலைக்கழக மானிய குழு உள்ளிட்ட
அமைப்புகள் நிறைய நிதியுதவி அளிக்கின்றன. மாணவர்களும், தங்கள் திறமைகளை
வெளிப்படுத்தி, உதவித்தொகையை பெற முடியும். செயற்கைக்கோள் பயன்பாட்டினை
எல்லா துறைகளுக்கும் எடுத்து சென்றால், படிப்பால் உயர்வு, தாழ்வற்ற,
வேலையில்லா, திண்டாட்டமில்லாத, தனித்திறமை வாய்ந்த இளைஞர்களை உருவாக்க
முடியும். வேலைக்காக மற்ற நாடுகளை தேடி, இந்திய இளைஞர்கள் ஓடவேண்டிய நிலை
இருக்காது. அந்த நாளை உருவாக்க, ஆட்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள்,
ஆசிரியர், பெற்றோர் என அனைவரும் முயல வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...