தமிழ்ச்
சூழலில் பள்ளிப் பாடநூல்களை ஆய்வு
செய்வது ஒரு சுவாரசியமான வேலை.
நம் கல்வி முறையின் தரம்
எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு இது
மிகவும் அவசியமானது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான சமூக
அறிவியல் பாடநூல்களை இங்கு ஆய்வுக்கு எடுத்துக்
கொள்வோம்.
ஒரு பாடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் 27 என்று
பட்டியலிடப்பட்டிருக்கிறது.
ஆனால், உறுப்பு நாடுகள் மொத்தம்
28. இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படும் லைபீரியா ஓர் ஆப்பிரிக்க நாடு.
அதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் என்ன சம்பந்தம்? லாத்வியா,
குரேஷியா ஆகிய இரு நாடுகளும்
பட்டியலில் விடுபட்டிருக்கிறது.
ஐ.நா. சபையின் சிறப்பு
நிறுவனங்களின் பட்டியலில் ‘உலக வங்கி’ (ஐ.பி.ஆர்.டி.)
என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. விளக்கப் படத்திலோ, ‘பன்னாட்டுக் கிராமப்புற வளர்ச்சி வங்கி’ என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.
‘புனரமைப்புக்கும் மேம்பாட்டுக்கு மான பன்னாட்டு வங்கி’யில் (இன்டர்நேஷனல் பேங்க்
ஃபார் ரீகன்ஸ்ட்ரக்ஷன் அண்டு டெவலப்மென்ட்)
கிராமம் நுழைந்தது எப்படி?
சமணத்தின்
சின்னமாக ஒரு பாடத்தில் தர்மச்
சக்கரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது சமணத்தின் சின்னமல்ல.
ஸ்வஸ்திகா, மூன்று புள்ளிகள், பிறை
வடிவத்தின் மீது ஓர் புள்ளி
போன்றவற்றை உள்ளடக்கிய சின்னமே சமணச் சின்னமாக
அறியப்படுகிறது.
வடுவூர்
பறவைகள் புகலிடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருவாரூர் மாவட் டத்தில்தான் வடுவூர்
இருக்கிறது. அதேபோல், நரிமணம் (பனங்குடி) எண்ணெய் சுத்திகரிப்பாலை இருப்பது
நாகப்பட்டினம் மாவட்டத்தில்தான்.
பாலைநில
மக்கள் கள்ளர் என்பது தமிழ்ப்
பதிப்பில் கள்வர் என்று திருத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலப் பதிப்பில் ‘கள்ளர் ஆஃப் பாலை’(Kallar
of Paalai) என்றுதான் நீடிக்கிறது.
தலைவர்களைக்
கொச்சைப்படுத்துதல்
தாழ்த்தப்பட்டோருக்கான
அம்பேத்கரின் விடுதலை இயக்கமான ‘பஹிஷ்கிரித்
ஹிதகரிணி சபா' (Bahishkrit Hitaharini
Sabha) என்பது ‘பாசிகிருகித் காரணி சபா' என்று
முதல் பதிப்பில் கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்த பதிப்பில் (2012) இன்னும்
மோசம், பகிஷ்கிருத்திகாராணிசபா என்று மாற்றப்பட்டிருக்கிறது.
டிசம்பர்
25,1927 ‘குடியரசு’ இதழிலிருந்து பெரியாரின் சாதிப் பட்டம் நீக்கப்படுகிறது.
1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் வெளிப்படையாக
அதனை ஓர் இயக்கமாக முன்னெடுத்த
பெரியாரின் பெயர் பாடப் புத்தகத்தில்
‘ஈ.வே. ராமசாமி நாயக்கர்’
என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், தனது வாழ்நாள்
இறுதிவரை சாதிப் பெயரைச் சுமந்த
எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், வாஞ்சி அய்யர்
போன்றவர்கள் எஸ்.சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன்
ஆக மாறிவிடுகிறார்கள்.
மொழியாக்கக்
குளறுபடிகள்
ஃபேக்ஸ்
(Fax), இன்புட் (Input), ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர்
(Fast Breeder Reactor), மொபைல்
டவர்ஸ் (Mobile towers), டிரான்ஸ்ஜென்டர் (Transgender), ரிமோட் சென்ஸிங் (Remote sensing), மகத் மார்ச்
(Mahad march) போன்ற சொற்கள் ‘பிரதிகள், இடுபொருள், ஊதுஉலைகள், மின்னஞ்சல் கோபுரம், திருநங்கைகள், தொலைநுண்ணுணர்வு, மகத் மார்ச் பேரணி’
என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், சரியான மொழிபெயர்ப்பு
முறையே ‘தொலைநகல், உள்ளீடு, அதிவேக ஈனுலைகள், கைபேசிக்
கோபுரங்கள், மாற்றுப்பாலினம், தொலை உணர்வு, மகத்
பேரணி’ என்பதாகும்.
ஹிட்லர்
‘பெயின்ட’ராக வியன்னாவில் சில
காலம் பணியாற்றி னாராம். பெயின்டர் (painter) என்று
சொன்னால் நம்மூர் வழக்கில் வண்ணமடிப்பவர்
என்றுதானே புரிந்துகொள்வார்கள். ஓவியராகப் பணியாற்றினார் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.
எலெக்ட்ரிக்
எலெக்ட்ரானிக்
(electric-electronic) வித்தியாச
மின்றி மொழிபெயர்த்துவிடுகிறார்கள். முன்னது ‘மின்னியல்’; பின்னது ‘மின்னணுவியல்’. மார்க்சியம் என்பது தமிழ்ச் சொல்லாகவே
ஆகிவிட்ட நிலையில், மார்க்ஸிஸம் என்று எழுதுவதுதான் நடக்கிறது.
கருத்தியல்
தெளிவின்மை
ஹிட்லர்,
முசோலினி ஆகியோரின் வெளிநாட்டுக் கொள்கைகள் முற்போக்கானவை என்றும் தேவதாசிகளைப் பற்றிச்
சொல்லும்போது, ஆலய சேவகிகள் என்றும்
விளக்கம் அளிக்கப்படுகிறது. இவர்கள் இறைப் பணி
மற்றும் கலைப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டார்கள்
என்றும், காலமாற்றத்தால் பிரபுக்கள், ஜமீன்தார்கள் ஆகியோரால் இம்முறை சீரழிக்கப்பட்ட தாகவும்
சொல்லப்படுகிறது. பாசிசம், நாசிசம், தேவதாசி முறை ஆகியவற்றை
உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியமென்ன?
புள்ளிவிவரங்களில்
நம்பகமின்மை
மரபுசாரா
மின்சக்தி உற்பத்தியில் மிகுந்த இடர்ப்பாடுகள் இருப்பதாகப்
பட்டியல் கொடுக்கப்படுகிறது. ஒலி மாசு, அதிகப்
பண முதலீடு தேவைப்படும் நிலை,
வானொலி-தொலைக்காட்சி அலைகளுக்கு இடையூறு, வனவிலங்குகள் வாழிட அழிப்பு என்று
இடையூறுகள் பட்டிலியடப்படுகின்றன. ஆனால், அணு மின்சக்தி,
அனல் மின்சக்தியின் இடர்ப்பாடுகள் மருந்துக்குக்கூடச் சொல்லப்படவேயில்லை.
இந்திய
அளவில் அனல் மின்சக்தி உற்பத்தி
70%, நீர் மின்சக்தி 25% என்றும் அணு மின்சக்தி
272 மெ.வா. என்றும் சொல்லப்படுகிறது.
எல்லாவற்றையும் சதவிகிதத்தில் கூற வேண்டுமல்லவா? 31.07.2014 நிலவரப்படி, இந்தியாவின்
ஒட்டுமொத்த மின்உற்பத்தி 2,50,257 மெ.வா.; இதில்
நிலக்கரி, எரிவாயு, டீசல் போன்றவற்றால் கிடைக்கும்
அனல் மின்உற்பத்தி 1,72,986 மெ.வா. (69.1%), நீர்
மின்சக்தி 40,799 மெ.வா. (16.3%), அணு
மின்சக்தி 4780 மெ.வா. (1.9%) புதுப்பிக்கத்
தக்க எரிசக்தி 31,692 மெ.வா. (12.7%) என்பதுதான்
அரசின் புள்ளிவிவரம்.
வரலாற்றுத்
திரிபுகளும் மறைப்புகளும்
1940-ல்
முகமது அலி ஜின்னா தனிநாடு
கோரிக்கையை முன்வைத்தார் என்றும் 1946-ல் நேருவின் இடைக்கால
அரசில் பங்கேற்க மறுத்து, தனது தனிநாடு கோரிக்கையில்
பிடிவாதமாக நின்றதாக பிரிவினைக்கான பழி ஜின்னா மீது
சுமத்தப்பட்டு இளம் உள்ளங்களிடையே காழ்ப்புணர்ச்சி
உருவாக்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரஸும்
இந்துத்துவமும் இணைந்து வளர்ந்த வரலாற்றை
மறைத்துவிட்டு, ஜின்னா மீது பிரிவினை
முத்திரை குத்துவது நியாயமாகுமா?
ஆர்.எஸ்.எஸ்., இந்து
மகாசபை போன்ற இந்துத்துவ அமைப்புகளைத்
தொடங்கிய அனைவரும் காங்கிரஸ்காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இரு அமைப்புகளில் அங்கம் வகிக்கக் கூடாதென
1936-ல் காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் கொண்டுவரும்வரை இந்நிலையே நீடித்தது. இந்தக் கலாச்சாரத் தேசியவாதிகளின்
வல்லாதிக்க வெறியை ‘இந்தியா வல்லரசாகும்’
என்று சொல்லி, பிஞ்சு உள்ளங்களில்
நஞ்சு விதைப்பது நியாயமாகுமா?
கலெக்டர்
ஆஷ் 4 பேரைச் சுட்டுக் கொன்றதாகவும்
அதற்குப் பழிதீர்க்கவே அவரது கொலை நடைபெற்றதாகவும்
சொல்லப்படுகிறது. 1908 மார்ச் 18-ல் வ.உ.சி. கைது செய்யப்
பட்டவுடன் தூத்துக்குடியில் கடையடைப்பும் போராட்டங் களும் நடைபெற்றபோது, போலீஸ்
துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர். மேலும்,
வாஞ்சிநாதனின் சட்டைப் பையிலிருந்து கைப்பற்றப்பட்ட
கடிதத்தில் துப்பாக்கிச் சூடு குறித்து எதுவும்
இல்லை. மாறாக, ‘கேவலம் கோ
மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ்
பஞ்சமனை… கொல்லும் செயலுக்கு” முன்னோட்டம் என்கிறரீதியில்தான் அந்தக் கடிதத்தில் இருந்தது.
பெரியார்,
அண்ணா, திராவிட இயக்கம்
1947 ஆகஸ்ட்15-ஐ பெரியார் துக்க
நாளாக அறிவித்தபோது, அண்ணா அதை மறுத்து
இன்ப நாள் என்றது, தேர்தலில்
பங்கேற்க அண்ணா விரும்பியது, கடவுள்
மறுப்புக் கொள்கையில் அண்ணாவுக்கு இருந்த தயக்கம் போன்ற
வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு, தி.மு.க.
உருவாக்கத்துக்கு பெரியார்-மணியம்மை திருமணம் காரணமாக்கப்படுகிறது.
சேலம் மாநாட்டுக்கு முன்னதாகவே ஆகஸ்ட் 05, 1944 ‘கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம்
என்று திருத்தி அமைத்தல்’ என்று ‘குடியரசு’ இதழில்
துணைத் தலையங்கம் பெரியாரால் எழுதப்பட்டுள்ளது. மேலும், சேலம் செவ்வாய்ப்பேட்டையில்
நடந்த நீதிக் கட்சி மாநாடு
தொடர்பான ‘குடியரசு’ இதழ் தலையங்கங்களில் (ஆகஸ்ட்12,19
-1944) திராவிடர் கழகம், திராவிட நாடு
குறித்தும் பெரியார் எழுதியுள்ளபோது, அண்ணா பெயரை மாற்றியதாகச்
சொல்வது எந்த அளவுக்கு உண்மை?
இவ்வளவு
பிழைகள் மலிந்த பள்ளிப் பாடநூல்களைத்
தமிழ் அறிவுலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல. இது பொருட்படுத்தத் தக்கதல்ல
என்று கருதினால், அது மாபெரும் தவறு.
வருங்காலச் சந்ததியை வழி நடத்தும் பொறுப்பு
நம் அனைவருக்கும் உண்டு என்பதை மறந்துவிட
வேண்டாம்.
- மு. சிவகுருநாதன், ஆசிரியர், சமூக-அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு:
musivagurunathan@gmail.com
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...