கரூர் மாணவர் மட்டும்தான் குற்றவாளியா? Tamil Tamil The Hindu
வெட்கக்கேடு
என்று சொல்லிவிட்டு, ஒதுங்கிக்கொள்ள முடியாது யாராலும். நம் சமூகத்தின் கூட்டுக்
குற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். அரசில்
தொடங்கி கடைசிக் குடிமக்கள் வரை பொறுப்பேற்கத்தான் வேண்டும்.
கரூர் பஸ் நிலையத்தில் ஊரே
பார்த்திருக்க பள்ளி மாணவர் மது
போதையில் மயங்கிக் கிடந்ததையும் ஊடகங்கள்/ சமூக வலைதளங்களில் அவருடைய
படம் முழு விவரங்களோடு வெளியாகிச்
சந்திசிரிப்பதையும் என்னவென்று சொல்வது? மோசத்திலும் மோசம், அந்த மாணவர்
பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது. தமிழகத்தில் என்னதான் நடக்கிறது?
‘ஒழுங்கு
நடவடிக்கை’யாம். கரூர் மாவட்டக்
கல்வி நிர்வாகத்தின் விளக்கம் சொல்கிறது. ஒழுங்காகப் பள்ளிக்கு வராதது, பள்ளிச் சீருடையில்
சென்று மது அருந்தி போதையில்,
பஸ் நிலையத்தில் மயங்கிக் கிடந்தது ஆகிய ‘ஒழுங்கீனச் செயல்’களுக்காக அவரை நீக்கியதாக மாவட்டக்
கல்வி அலுவலர் சார்பில் விளக்கம்
அளிக்கப் பட்டிருக்கிறது.
ஆட்டோ ஓட்டுநரின் மகனான அந்த 17 வயதுச்
சிறுவனின் கல்வி வாழ்க்கை கிட்டத்தட்ட
முடக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் ஒழுக்கம் தவறி நடந்தால் அவர்களைத்
திருத்துவதற்கு எத்தனையோ வழிகள் இருக்க, அந்த
மாணவரின் எதிர்காலத்தையே அழித்துவிடும் அளவுக்கு இப்படியொரு தண்டனையை மாவட்டக் கல்வி நிர்வாகம் எப்படி
வழங்கலாம்? மாணவர்களை நல்வழிப்படுத்தத்தான் கல்விக்கூடங்களே தவிர, கைவிடுவதற்காக அல்ல.
நம்முடைய அமைப்புகள் ஒவ்வொன்றும் எந்த அளவுக்குப் பொறுப்பற்றவையாக
மாறிக்கொண்டிருக்கின்றன என்பதற்கான உதாரணம் இது.
ஒரு மாணவருக்குத் தன்னுடைய எதிர்காலத்தின் மீது எந்த அக்கறையும்
இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம் சமூகத்துக்கு
அந்த மாணவர் மீது அக்கறை
இருக்க வேண்டுமல்லவா? அந்த மாணவரைப் படம்
எடுத்தவர்களும், அந்தப் படத்தைச் சமூக
வலைதளங்களில் பகிர்ந்துகொண்டவர்களும், ஊடகங்களும் ‘நல்லது செய்கிறோம்’ என்ற
போர்வையில், அந்த மாணவரின் எதிர்காலத்தை
எவ்வளவு நாசமாக்கியிருக்கிறார்களோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத பங்கத்தை உருவாக்கியிருக்கிறது கரூர் மாவட்டக் கல்வி
அலுவலரின் நடவடிக்கை. ஒரு சமூகம், இந்த
அளவுக்கா பொறுப்புணர்வு இல்லாமல் இருக்க முடியும்?
நம்மைத்
தலைகுனியச் செய்யும் பல கேள்விகளை இந்தச்
சம்பவம் எழுப்புகிறது. கரூர் பஸ் நிலையத்துக்கு
அருகில் இருக்கும் ‘டாஸ்மாக்’ கடையில்தான், தன் நண்பர்கள் சிலருடன்
அந்த மாணவர் மது அருந்தியிருக்கிறார்.
மாணவர் மது அருந்தியது பெரும்
தவறுதான். அதேசமயம், அரசாங்கம் மது விற்பது சரியா?
அதுவும் பள்ளிச் சீருடையில் இருந்த
மாணவர்களுக்கு மதுவை விற்பது சரியா?
அப்படி மது விற்றவர்கள்/ விற்பவர்கள்
மீது இதுவரை என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது? கரூரில் மட்டும்தான், அந்த
ஒரு கடையில் மட்டும்தான், அந்த
ஒரு மாணவர் விவகாரத்தில் மட்டும்தான்
தவறு நடந்திருக்கிறதா? இப்படி ஒவ்வொரு நாளும்
தமிழகத்தின் ஒவ்வொரு கடையிலும் மாணவர்களுக்கும்
சிறார்களுக்கும் குடிக்க மது கொடுத்துச்
சீரழிக்கும் ‘டாஸ்மாக்’ நிறுவனத்துக்கு என்ன தண்டனை? வருமானம்
என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தையும்
மதுவெனும் பாதாளத்தில் தள்ளி மூழ்கடிக்கும் நிர்வாகப்
போதைக்கு என்ன தண்டனை? இந்தக்
கொடுமைகளையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே கடக்கும் நம்முடைய பொறுப்பற்றத்தனத்துக்கு என்ன தண்டனை?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...