முறையான அனுமதி இல்லாத மழலையர் பள்ளிகள்
விவகாரத்தில், உயர் நீதிமன்ற காலக்கெடு முடிந்துள்ளது. அவற்றின் மீதான
நடவடிக்கை குறித்து, அரசு விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, சென்னை, வில்லிவாக்கத்தைச்
சேர்ந்த பாலசுப்ரமணியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல
மனுவில், ’தமிழகத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும், 2,000க்கும்
மேற்பட்ட மழலையர் பள்ளிகளை மூட, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்
கூறியிருந்தார்.
இந்த வழக்கு, கடந்த ஆண்டு ஆக., 14ம் தேதி,
விசாரணைக்கு வந்த போது, ’அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகளை ஆய்வு செய்து,
2015 ஜன., 31க்குள் அங்கீகாரம் தொடர்பான, இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்’
என, கல்வித்துறையின் பதில் மனுவில் கூறப்பட்டது.
தொடர்ந்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
* அங்கீகாரமின்றி செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு, செப்., 14ம் தேதிக்குள், ’நோட்டீஸ்’ வழங்க வேண்டும்.
* அது தொடர்பாக விளக்கம் அல்லது விளக்கத்துடன்
அங்கீகாரம் கோருவதற்கான கருத்துரு ஆகியவற்றை, அக்டோபர், 15ம் தேதிக்குள்
வழங்க வேண்டும்.
* அதன்பின், அங்கீகாரமில்லாத பள்ளிகளுக்கு,
நவம்பர், 30ம் தேதிக்குள் சென்று, சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர்கள் ஆய்வு நடத்த வேண்டும்.
* ஆய்விற்கு பின், அங்கீகாரம் வழங்க தகுதியான
பள்ளிகளுக்கு, 2015 ஜன., 31 தேதிக்குள், அங்கீகாரம் வழங்க வேண்டும்; அல்லது
பள்ளிகளை மூட வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும், உதவித்
தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள
நர்சரி, பிரைமரி, பிளே ஸ்கூல், கிண்டர் கார்டன் பள்ளிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, தமிழகம் முழுவதும், ஆயிரக்கணக்கான பள்ளிகள் அனுமதியின்றி
செயல்பட்டு வந்தது தெரிந்தது. அந்த பள்ளிகளுக்கு, ’நோட்டீஸ்’
அனுப்பப்பட்டது. தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கும் தகவல்
அனுப்பப்பட்டது.
அரசாணை:
ஆனால், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக, தொடக்க
கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், உயர்
நீதிமன்றம் அளித்த காலக்கெடுவும் சமீபத்தில் முடிந்தது. பள்ளிகளோ வழக்கம்
போல், மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரத்தில்
விசாரித்த போது, ’அரசின் பரிசீலனையில் இதுகுறித்த கோப்புகள் உள்ளன.
இன்னும், 15 நாட்களில், அனுமதி இல்லாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள்
தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...