'பயோ மெட்ரிக்'
வருகைப் பதிவு முறையால், மத்திய அரசு ஊழியர்கள், வழக்கத்திற்கு மாறாக, 20 நிமிடங்கள்
கூடுதலாக பணி செய்வதாகவும், இதன் மூலம், அரசுப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதாகவும்,
மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
அரசு பொறுப்பேற்றதும், மத்திய அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதைத் தவிக்க, ஊழியர்களின்
வருகைப் பதிவானது பயோ மெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டது. இந்த முறையில், ஊழியர்களின்
விரல் ரேகை பயோ மெட்ரிக் இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டு விடுவதால், அவர்கள் அலுவலகத்திற்கு
வரும் போதும், பணி முடிந்து வீடு திரும்பும் போதும், பயோ மெட்ரிக் இயந்திரத்தில், விரல்
ரேகையை பதிவு செய்வது கட்டாயமாகும். இதன்படி, டில்லியில் பணிபுரியும், 63 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட, மத்திய அரசு ஊழியர்களின் வருகைப் பதிவேடு, பயோ மெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டது.
எனினும், இந்த முறையை பயன்படுத்தாமல், பலரும் அலட்சியப்படுத்துவதாக தகவல் வெளியானது.
ஆனாலும், இது தொடர்பாக ரகசிய ஆய்வு நடத்தப்பட்டது.
இதுகுறித்து, மத்திய
அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை, 39 சதவீத ஊழியர்கள்
மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனினும், இந்த புதிய முறையால், ஊழியர்களின் சராசரி பணி
செய்யும் நேரம் அதிகரித்துள்ளது. அதாவது, சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து,
சரியான நேரத்திற்கு வீடு திரும்புவதன் மூலம், அரசு ஊழியர்களின் பணி செய்யும் நேரம்,
20 நிமிடங்கள் அதிகரித்துள்ளது. அதனால், முக்கிய கோப்புகள் தேக்கமடைவதை தவிர்க்க முடிகிறது.
இந்த முறையை அனைத்து ஊழியர்களும் பின்பற்றினால், அரசுப் பணிகளில் சுணக்கம் ஏற்படாமல்,
பல பணிகளை விரைந்து முடிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கெட்ட பழக்கம்...:
மத்திய அரசின்
கீழ் செயல்படும், 169 துறைகளில் பணியாற்றும், 63,883 ஊழியர்களின் கை விரல் ரேகைகள்
பதிவு செய்யப்பட்டு, அவர்களின் வருகைப் பதிவு பயோ மெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டது.
ஆனால், 24,646 பேர் மட்டுமே புதிய முறையில் தங்கள் வருகையை பதிவு செய்கின்றனர். பெரும்பாலான
அரசு ஊழியர்கள் இந்த முறையை விரும்பவில்லை. பல ஆண்டுகளாக, சரியான நேரத்திற்கு பணிக்கு
வராமல் பழக்கப்பட்டுவிட்ட அரசு ஊழியர்களால், தற்போது, பயோ மெட்ரிக் முறையை பின்பற்ற
முடியாததே காரணம் என, மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. ஊழியர்கள், பயோ மெட்ரிக் முறையை
பயன்படுத்தாதது குறித்து விளக்கம் அளிக்கும்படி, 169 துறைகளின் தலைவர்களுக்கு, மத்திய
அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...