பொதுத்தேர்விற்கான விடைத்தாளில்
ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டின், பிளஸ் 2
பொதுத்தேர்விற்கான விடைத்தாள் தயார் செய்யும் பணிகள் தற்போது அனைத்து
பள்ளிகளிலும், நடக்கிறது. இப்பணிகளில் கடந்தாண்டில் பின்பற்றிய
வழிமுறைகளில், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, விடைத்தாள்களை
விரைவில் தயார்செய்யும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்
மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடங்கள், உயிரியல், கணக்கு பதிவியல், கம்ப்யூட்டர்
சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே, பாடப்பிரிவின் பெயர் அச்சிடப்பட்ட
முதன்மை விடைத்தாள் வழங்கப்படும். இதர, பாடப்பிரிவு முதன்மை விடைத்தாள்கள்
அனைத்திற்கும் HSE என்ற வகை முதன்மை விடைத்தாளை பயன்படுத்த வேண்டும்.
வரலாறு பாட விடைத்தாளில், 36 மற்றும் 37
பக்கத்தில் வரைப்படங்கள் வைத்து தைத்தல், வணிகக்கணித பாடத்திற்கு 36, 37 ம்
பக்கத்தில், கிராப் ஷீட் வைத்து தைக்கப்பட வேண்டும். மேலும், பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்விற்கான விடைத்தாளில், 22 பக்கங்களில் முதல் இரண்டு
பக்கங்கள் கோடிடப்படாத பக்கங்களாக உள்ளன. கோடிடப்படாத பக்கங்கள் கொண்ட
விடைத்தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்விற்கு பயன்படுத்த வேண்டும்.
இத்தேர்வின்போது, விளம்பர வினா - விடை
பகுதிக்கு, அந்த கோடிடப்படாத பக்கங்களை பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள
ஆங்கிலம் முதல் தாள் மற்றும் தமிழ் மொழிப்பாட தேர்வின் போது அப்பக்கங்களை
பயன்படுத்தக்கூடாது. குறிப்பிட்ட பாடத்தேர்விற்கென நிர்ணயிக்கப்பட்ட
வகையைச் சார்ந்த, முதன்மை விடைத்தாளுடன் மட்டுமே அப்பாடத்திற்கான
முகப்புத்தாள் வைத்து தைத்தல் அவசியம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...