இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை
(எல்.ஐ.சி.) தொடர்ந்து, அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கும் ஜனவரி
மாதம் முதல் சேவை வரி வசூல் செய்யப்படுவது பொதுமக்களிடையே கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில், கடந்த 1884-ஆம்
ஆண்டு முதல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. கிராமப் புறங்களிலும், இந்தத் திட்டம் 1995-ஆம் ஆண்டு
"கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு' என்ற பெயரில் விரிவுப்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ், 2013-14 நிலவரப்படி 54,06,093 கணக்குகளும், கிராமப்புற
அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,50,14,314 கணக்குகளும்
உள்ளன.
தமிழகத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத்
திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1,127 கோடி. இதன் கீழ் கணக்கு
வைத்துள்ளவர்கள், ஜனவரி மாதம் தங்களுக்கான காப்பீட்டுத் தொகையை (பிரீமியம்)
செலுத்தும் போது, சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்பட்டது.
அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு,
முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் சேவை வரி வசூலிக்கப்பட்டது, பொது மக்களிடையே
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே 2007-ஆம் ஆண்டுக்கு
முன்னர் சேவை வரி வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சேவை வரி
வசூலிக்கப்பட்டதில் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்ட கணக்கு வைத்துள்ள முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது:
பிப்ரவரி மாதத்துக்கான ஆயுள் காப்பீட்டுத்
தொகையைச் செலுத்தும்போது, காப்பீட்டுத் தொகையில் 1.54 சதவீதம் சேவை வரியை
அஞ்சல் துறை வசூலித்தது. சேவை வரி வசூலிப்பது தொடர்பான எந்தவொரு
முன்னறிவிப்பும் கிடையாது.
அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு சேவை வரி வசூலிப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
(எல்.ஐ.சி.) ஏற்கெனவே சேவை வரி வசூலித்து வருகிறது. தற்போதுதான் அஞ்சல்
துறை சேவை வரியை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
ஆயுள் காப்பீட்டுக் கணக்கு தொடங்கிய முதல்
ஆண்டில் மாதம்தோறும் செலுத்தும் காப்பீட்டுத் தொகையில் 3.09 சதவீதம் சேவை
வரி வசூலிக்கப்படும். இரண்டாவது ஆண்டு முதல் 1.54 சதவீதம் சேவை வரி மட்டுமே
வசூலிக்கப்படும்.
இதுதொடர்பான அறிவிப்பை, கடந்தாண்டு டிசம்பர்
மாதமே அஞ்சலகங்களில் தகவல் பலகைகள் வெளியிட்டிருந்தோம். மேலும்,
ஊடகங்களிலும், நாளேடுகளிலும் அறிவிப்பு வெளியிட்டிருந்தோம் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...