தமிழகத்தில் விரைவில் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அரசு, அரசு
உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு புதிய இலவச மருத்துவத் திட்டம்
செயல்படுத்தப்படவுள்ளது.
மத்திய அரசின் உதவியோடு மாநில அரசு செயல்படுத்தும் இந்த
திட்டத்துக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் தேர்வுகள்
நடைபெற்று வருகின்றன.
பள்ளிக் குழந்தைகளின் உடல் நலத்தைப் பரிசோதிக்க மாவட்டந்தோறும் ஏற்கெனவே
மருத்துவக் குழு செயல்பட்டது. அதில் முழு பயன் கிட்டவில்லை. ஆகவே பள்ளிக்
குழந்தைகளின் உடல் நலத்தைப் பேணும் வகையில், மத்திய அரசின் சுகாதாரத்
துறையானது, மாநில அரசு உதவியுடன் "ராஷ்ட்ரீய பால்சுவத்ஸ்திய காரிய கிராம்'
எனும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தில் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து பள்ளிக்
குழந்தைகளுக்கும் இலவசமாக உடல் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை
அளிக்கப்படும்.
இந்த திட்டத்துக்கான வட்டார அளவிலான மருத்துவக் குழுவில் மருத்துவர்,
செவிலியர், மருந்தாளுநர் ஆகியோர் இடம் பெறுவர். குழுவிற்கான மருத்துவர்கள்
அரசால் நியமிக்கப்படுவர். செவிலியர், மருந்தாளுநர் ஒப்பந்தப் பணியில்
நியமிக்கப்படுவர்.
பள்ளிகளில் பரிசோதனைக்குப் பிறகு தொடர் சிகிச்சைக்காக மாவட்ட அரசு
மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க தனிப் பிரிவும் ஏற்படுத்தப்படும்.
இந்தப் பிரிவில் பொது, குழந்தைகள் நலம், நரம்பியல், காது-மூக்குத் தொண்டை
சிகிச்சை, தோல், மனநலம், பல் சிகிச்சை உள்ளிட்ட பல பிரிவின் மருத்துவர்கள்
என 15 பேர் கொண்ட குழு செயல்படும்.
புதிய மருத்துவத் திட்டத்திற்காக மாநில அளவில் தனி இயக்குநரும், மாவட்ட
சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையில் வட்டார மருத்துவக் குழுக்களும்
செயல்படும். தமிழகத்தில் 385 வட்டாரங்களுக்கு தலா 2 குழு வீதம் மொத்தம் 770
மருத்துவக் குழுக்கள் செயல்படும்.
மதுரை மாவட்டத்தில் 26 மருத்துவக் குழுக்களுக்காக 26 நவீன வாகனங்கள்
வாங்கப்பட்டுள்ளன. ஜனவரி முதல் 13 மருத்துவர்கள் இத்திட்டத்தில்
பணிபுரிந்து வருகின்றனர். மேலும், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோர் மாவட்ட
சுகாதார துணை இயக்குநரால் நியமிக்கப்படவுள்ளனர்.
இம் மாவட்டத்தில் மட்டும் புதிய திட்டத்தில் 5 லட்சத்து 88,577 பள்ளிக்
குழந்தைகள் பயனடைவர். இதற்கான தலைமைச் சிகிச்சை பிரிவு மதுரை அரசு ராஜாஜி
மருத்துவமனை 90-ஆ வது வார்டின் தரைத் தளத்தில் அமைகிறது.
இந்தத் திட்டம் குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் டாக்டர் எஸ். செந்தில்குமார் கூறியது:
புதிய திட்டமானது சோதனை முறையில் மதுரை மாவட்டத்தில்
செயல்படுத்தப்படுகிறது. இதில் தற்போது 13 மருத்துவர்கள் உள்ளனர் என்றார்.
இத்திட்டம் வரும் ஏப்ரல் முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்
செயல்படுத்தப்படும் என மருத்துவத்துறை அதிகாரிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...