ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை மத்திய அரசு
திணிக்கக் கூடாது என, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் மாநிலப்
பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தினார்.
உலக தாய்மொழி தினத்தையொட்டி, தமிழ்நாட்டு கல்வி இயக்கம் சார்பில் ஈரோட்டில், சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.
பேரணிக்குத் தலைமை வகித்த பிரின்ஸ் கஜேந்திரபாபு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் அண்மையில் எடுத்த
கணக்கெடுப்பின்படி, மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் 2,000 தொடக்கப்
பள்ளிகள் மூடக்கூடிய நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆங்கில வழிக்
கல்வியை அமல்படுத்தினால் மட்டும்தான் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
அதிகரிக்கும் என்ற எண்ணம் தவறானது என்பதை இந்தப் புள்ளி விவரம்
காட்டுகிறது.
தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்தை கற்றுத்
தரவும் தனித்தனி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் ஒரே
ஆசிரியர் அனைத்துப் பாடங்களையும் கற்றுத் தர வேண்டிய நிலை உள்ளது. இரண்டு
ஆசிரியர்கள் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், ஒரு ஆசிரியர் விடுமுறை
எடுத்தால், மற்றொரு ஆசிரியர் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப்
பாடங்களை நடத்த வேண்டிய நிலை உள்ளது.
அதேபோல பள்ளித் தலைமை ஆசிரியரே, எழுத்தர்
பணிகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர்களின் பணிச் சுமை
அதிகரித்து விடுவதால் மாணவர்கள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை
ஏற்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை
குறைந்துள்ளது.
உயர் நிலைப் பள்ளிகளுக்கு அரசுத் தொடக்கப்
பள்ளி மாணவர்கள் வரும்போது கீழ் வகுப்புகளில் கற்றுத் தர வேண்டிய பாடங்களை,
மேல் வகுப்புகளில் கற்றுத் தர வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. கிராமப்
பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கல்வி பாடத் திட்டத்தை மாற்றி
அமைத்தால் மட்டுமே மாணவர்கள் எழுதுதல், வாசித்தல் திறன் மேம்படும்.
ஹிந்தி, சம்ஸ்கிருதம் படிப்பதை நாங்கள்
ஒருபோதும் எதிர்க்கவில்லை. அதேநேரத்தில் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது.
பிற மொழியில் பாடங்களைக் கற்றால் மனப்பாடத் திறன் அதிகரிக்கும். ஆனால்,
தாய்மொழியில் கற்கும்போதுதான் அதன் அர்த்தம் முழுமையாக புரியும் என்றார்.
இப்பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர்
சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகி
எஸ்.டி.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...