"மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம்
பெறவும், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்,' என்ற உத்தரவால், பயனாளிகள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசு திட்டங்களில், பெரும்பாலும் வங்கி கணக்கு வாயிலாகவே பண
பரிவர்த்தனை நடக்கிறது. தேசிய அடையாள எண்ணுள்ள ஆதார் அட்டை இன்னும்
அனைவருக்கும் வழங்கப்படவில்லை. மாவட்ட அளவில் 69 சதவீதம் பேர் ஆதார் பதிவு
செய்திருந்தும், அவர்களில் 50 சதவீதம் பேருக்கு கூட, இன்னும்
கிடைக்கவில்லை. மூன்றாம் கட்டமாக, விடுபட்டோருக்கு ஆதார் பதியும் பணி
நடந்து வருகிறது.இருப்பினும், காஸ் சிலிண்டர் மானியம் பெறுவதற்கு, வங்கி
கணக்குடன் ஆதார் எண் விவரத்தை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் எண்
இல்லாதவர்கள், வங்கி கணக்கை மட்டுமே பதிவு செய்துவிட்டு, அடுத்த கட்டமாக
ஆதார் எண் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு திட்டங்களில் பயனடைய வேண்டுமெனில், ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்க
வேண்டும் என புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. சமூகநல திட்டத்தில்,
முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டம், விதவை மறுமணம்,
ராமாமிர்தம் நினைவு திருமண உதவி திட்டம், மணியம்மை விதவை மகள் திருமணம்,
அன்னை தெரசா ஆதரவற்ற மகளிர் திருமணம் ஆகிய திட்டங்களில் விண்ணப்பிக்க,
ஆதார் எண் கட்டாயம் என அதில் கூறப்பட்டுள்ளது. திருமணத்துக்கு 40
நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்; தவிர்க்க முடியாதபட்சத்தில்,
திருமணத்துக்கு ஒருநாள் முன் விண்ணப்பிக்கலாம். கலப்பு திருமணம்
செய்தவர்கள், அடுத்த 2 ஆண்டுக்குள்; மறுமணம் செய்த விதவைகள், 6
மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, வங்கி கணக்கு மற்றும் ஆதார்
எண் விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் முதியோர், விதவை ஓய்வூதியம்
திட்ட பயனாளிகளும், அடுத்த மாத இறுதிக்குள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்களில் ஆதார் எண் பெற்று,
அங்குள்ள சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும் என கிராம
நிர்வாக அலுவலகங்களில் இருந்து, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு நல உதவி பெற ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவு, பயனாளிகளை
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடையாள அட்டை பதிவு முடியும் வரை, ஆதார் எண்
கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
ரசீது இல்லாவிட்டாலும்...:
ஆதார் அட்டைக்கு உடற்கூறு பதியும் பணி நடந்து வருகிறது. முதலிபாளையம்,
இடுவாய், மங்கலம், பெருமாநல்லூர் போன்ற ஊராட்சிகளில்,
பெரும்பாலானவர்களுக்கு ரசீது கொடுக்கப்படவில்லை. "பிரின்டர்' பழுதானதால்,
பின்னர் வழங்கப்படும் என திருப்பி அனுப்புகின்றனர்.உடற்கூறு பதிவு
செய்தவர்களில் பலருக்கு இன்னும் ஆதார் அட்டை கிடைக்கவில்லை. அதில், ரசீது
வைத்துள்ளவர்கள், "ஆன்லைன்' மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள்
தெரிவித்தனர். ஆனால், ரசீதும் பெறாததால், என்ன செய்வதென தெரியாமல்,
பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.ஆதார் பதிவு அலுவலர்கள் கூறியதாவது:ரசீது
பெற்று தொலைத்தவர்கள், இதுவரை ரசீது பெறாதவர்களுக்கு, இன்னும் சில
நாட்களில் அறிவிப்பு வெளியாகும். அதன்பின் நேரில் வந்து, பெயர் மற்றும்
மொபைல் எண் தெரிவித்து, தங்களின் ரசீது எண் மற்றும் ஆதார் எண்
பெற்றுக்கொள்ளலாம். அந்த எண்ணை பயன்படுத்தி, "ஆன்லைன்' மூலம் அட்டையை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.உடற்கூறு பதிவு செய்தும், ஆதார் அட்டை
கிடைக்காமல் இருப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை. தற்போதும் கூட,
கம்ப்யூட்டர் சென்டர்களுக்குச் சென்று, தங்களது பெயர், மொபைல் எண்
தெரிவித்து ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...