பேராசிரியர்
மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு
வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்டனைகளை மூன்று
விதமாக அந்தக் கையேடு பிரித்துள்ளது.
உடல்ரீதியாகத்
துன்புறுத்துவது முதல் வகை. இதில், சுவர் அருகே
நாற்காலி போல நிற்கவைப்பது,
தலையில் புத்தகப்
பைகளை சுமக்க வைப்பது, கடும் வெயிலில் நாள் முழுவதும் நிற்கவைப்பது, முட்டிபோட்ட நிலையில் பணிகளை செய்யச்
சொல்வது, மேஜையின் மீது ஏறி நிற்கச் சொல்வது, கைகளைத் தூக்கிக் கொண்டு நிற்கச் சொல்வது, வாயில் பென்சிலை வைத்துக் கொண்டு நிற்கச்
செய்வது, கால்களுக்கு இடையில் கையை நுழைத்து
காதுகளைப் பிடித்துக் கொண்டு நிற்க வைப்பது, மாணவர்களின்
கைகளைக் கட்டுவது, உட்கார்ந்து எழுந்திருக்க வைப்பது, பிரம்பால் அடிப்பது, காதுகளைத்
திருகுவது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2-ஆவது வகையானது, உணர்வு
ரீதியான துன்புறுத்தலாகும். இதில், எதிர்
பாலினத்தைச் சேர்ந்தவரை வைத்து அறையச் சொல்லுதல், திட்டுதல், அவமானப்படுத்துதல், மாணவரின்
நடத்தைக்கு ஏற்ப பட்டப் பெயர் சூட்டி, பள்ளியைச்
சுற்றிவரச் செய்தல், வகுப்பறையின் பின்னால் நிற்கவைத்து பாடங்களை
முடிக்கச் சொல்லுதல், ஓரிரு நாள்களுக்கு பள்ளியிலிருந்து இடைநீக்கம்
செய்வது, "நான் ஒரு முட்டாள்', "நான் ஒரு கழுதை' என எழுதப்பட்ட காகிதத்தை மாணவரின் முதுகில்
ஒட்டுவது, ஒவ்வொரு வகுப்பறைக்கும் மாணவரை அழைத்துச்
சென்று அவமானப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
3-ஆவது வகையானது எதிர்மறையான உணர்வுகளைப்
பதியச் செய்வதாகும். இதில்,
உணவு இடைவேளை
நேரங்களில் வகுப்பறையிலேயே அமரவைத்தல், இருட்டறையில்
மாணவர்களை அடைத்துவைப்பது,
பெற்றோரை அழைத்து வரச்
சொல்லுதல் அல்லது பெற்றோரிடம் இருந்து விளக்கக் கடிதம் பெற்றுவரச் சொல்லுதல், வீட்டுக்குப் போகச் சொல்லுதல் அல்லது பள்ளி
வாயிலுக்கு வெளியே நிற்கவைத்தல், வகுப்பறையில்
தரையில் மாணவரை அமர வைத்தல், பள்ளி
வளாகத்தை சுத்தம் செய்யச் சொல்லுதல், பள்ளிக்
கட்டடத்தையோ அல்லது மைதானத்தையோ சுற்றி ஓடிவரச் சொல்லுதல், பள்ளி
முதல்வரைச் சந்திக்கச் சொல்லுதல், வகுப்பறையில்
பாடம் எடுக்கச் சொல்லுதல்,
ஆசிரியர் வரும்வரை நிற்கச்
சொல்லுதல், வாய்மொழியாக எச்சரிக்கை விடுப்பது அல்லது
டைரியில் குறிப்பு எழுதி அனுப்புதல், மாற்றுச்
சான்றிதழை (டி.சி.) அளித்துவிடுவேன் என்று மிரட்டுதல், விளையாட்டு
அல்லது மற்ற நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தடுப்பது, மதிப்பெண்களைக்
கழிப்பது, 3 முறை தாமதமாக வந்தால் ஒரு நாள் விடுப்பு
என்று கூறுவது, அதிகப்படியான வீட்டுப் பாடங்கள் செய்துவரச்
சொல்வது, அபராதம் விதிப்பது, வகுப்பறைக்குள்
நுழைய அனுமதி மறுப்பது, ஒரு நாள், ஒரு வாரம்
அல்லது ஒரு மாதம் முழுவதும் ஒரு பாடவேளைக்கு வகுப்பறையில் தரையில் அமர வைப்பது, நடத்தைக்கான அட்டவணையில் கருப்புக்
குறியிடுதல் ஆகியவை இதில் அடங்கும்.
இதைவிட வேதனை
தரும் அம்சம் என்னவென்றால்,
மாணவர்களை பாலியல்
ரீதியாகவும் ஆசிரியர்கள் துன்புறுத்துவதுதான். குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை
நமது நாட்டுச் சட்டம் அனுமதிக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்திலும் குழந்தைகளின்
உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச அமைப்புகளும்
குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இதேவிதமான கருத்தையே பிரதிபலிக்கின்றன.
வயது வித்தியாசம் இல்லாமல்,
குழந்தைகள் உள்பட
அனைவருக்கும் மனித உரிமைகள் பொதுவானது என்பதை ஐ.நா. சபையின் குழந்தைகளின் உரிமைகள்
அமைப்பு உறுதிப்படுத்துகிறது.
மேலும், குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க
வேண்டும் என்றும், அவர்களுக்கென்று தனி உரிமைகள் உள்ளன என்றும்
ஐ.நா. வலியுறுத்துகிறது.
துரதிருஷ்டவசமாக, இந்தச் சட்டங்கள் பற்றியும், விதிமுறைகள் பற்றியும் கவலைப்படாமல், ஆசிரியர்கள் குழந்தைகளைத் துன்புறுத்தி
பள்ளியை விட்டே ஓடச் செய்கிறார்கள். ஐ.நா. சபை மேம்பாட்டுத் திட்டம் 2012-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 15 வயதுக்கு
மேற்பட்டவர்களில் பள்ளியில் மாணவர் படிக்கும் சராசரி ஆண்டுகள் 4.4 ஆகும்.
இதுவே, இலங்கையில் 9.3 ஆண்டுகளாகவும், சீனாவில் 7.5 ஆண்டுகளாகவும், பாகிஸ்தானில் 4.9 ஆண்டுகளாகவும், வங்கதேசத்தில் 4.8 ஆண்டுகளாகவும் உள்ளன.
கடும்
போட்டியையும், தேர்வு முறையையும் சந்தித்துதான் அரசுப்
பள்ளி ஆசிரியர்கள் தேர்வாகின்றனர். எனவே, அவர்கள் அதிக
தகுதிகளைப் பெற்றிருப்பது இயற்கையானதாகும். அவர்களுக்கு நல்ல ஊதியமும், பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இத்தகைய
சூழ்நிலையில், அவர்களது கடமைகளையும், மாணவர்களின் உரிமைகளையும் ஆசிரியர்களுக்குப்
புரியவைப்பதற்கு மன உறுதிதான் தேவை.
அரசுப்
பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துவருவது குறித்து அரசு அதிகாரிகளோ அல்லது
அரசியல் கட்சியினரோ கவலைப்படுவதில்லை. ஏனெனில், அவர்களது
குழந்தைகள் இத்தகைய பள்ளிகளில் படிக்காததால் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில்
இழப்பு எது வும் இல்லை.
அப்படி எனில், குற்றவாளிகள் யார்? நெறிதவறிய ஆசிரியர்களா, அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாகச் செயல்படும் உயர் அதிகாரிகளா, அவர்களை இயக்கும் அரசியல்வாதிகளா அல்லது அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நாம்தானா?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...